
Post No. 12,652
Date uploaded in London – 30 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இந்த 2023 ஆண்டு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் அக்டோபர் 28ஆம் நாள் நிகழ்வதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை! 27-10-23 மாலைமலர் இதழில் வெளி வந்த கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!
முதல் பகுதி
ச.நாகராஜன்
தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மஹாபாரத இதிஹாஸமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.
ஐப்பசி பௌர்ணமியின் சிறப்பு
ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.
முதலில் சம்பிரதாய முறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாங்காய்ச் சாறு, சாதம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.
பௌர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?
அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரமனின் ஒரு தலையைக் கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.
பிரம்மனின் சிரத்தைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.
எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.
சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பௌர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.
அன்னாபிஷேக பலன்கள்
அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.
தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும் கிட்டும்.
நற்பலன்களில் சில:
1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.
2) கர்மவினைகள் கழியும்.
3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.
6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.
உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.
அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத் தேவையாகும்.
இதன் அதிபதி சிவபிரானே. இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல் பட, வாயுவின் சேர்க்கையால் நெல் மணி நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது.
இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.
ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப் புகழ்கின்றன.
அன்ன தானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது
பீஷ்மரிடம் தர்மபுத்திரர் தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப் பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாஸன பர்வம் 98வது அத்தியாயம்).
அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:
“உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.
அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.
தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும் போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக் கூடாது.
அறம்,பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான். அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்.” – என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.
***