
Post No. 12,656
Date uploaded in London – 31 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!
இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
அப்பரின் அருள் வாக்கு
தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர்பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
என்று அவர் பாடி அருள்கிறார்.
இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப் பெறுகிறது தில்லைத் திருத்தலம்!
கண்ணனின் அருள் வாக்கு
கண்ணபிரான் கீதையில் (அத் 3 – 14) அன்னாத் பவந்தி பூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பௌதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.
அறநெறிகளை அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.
நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.
ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
இரு கதைகள்
அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிஹாஸ புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன.
இரு சம்பவங்களை இங்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.
இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.
குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக் கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப் பார்க்கச் சென்றார் குசேலர்.
குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக் கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.
இதுவே அன்ன தான பலன்.
அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.
பெரும் தான வீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.
அதன் காரணத்தைக் கேட்ட போது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : “நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்”
உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.
வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: “ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக் காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்ன தானத்தின் மகிமை அப்படிப்பட்டது!” என்று பதில் கூறினான்.
இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.
ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில் மட்டும் முப்பத்திஐந்து கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.
ஆகவே இந்த ஐப்பசி பௌர்ணமி நன்னாளில் உலகில் உள்ள அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்;
அனைவருக்கும் அன்னம் தந்து அவன் அருள் பாலிப்பானாக!
***