சோழனை விரட்டிய வாலிப வீரன் மன்றாடி! (Post No.12,735)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,735

Date uploaded in London –  –  19 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 57 

சோழனை விரட்டிய வாலிப வீரன் மன்றாடி! 

ச.நாகராஜன்

கொங்கு மண்டலம் சில காலம் சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.

ஆனால் சிற்றின்ப மோகம் கொண்டும் ஒற்றுமைக் குறைவாலும் சோழர்கள் வலிமை குன்றினர்.

அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய அரசர்களில் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ராஜாதிராஜன் ஆனான். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் பட்டமேறினான்.

சோழ வம்ச மலைக்குத் தான் ஒரு இடியேறு என்ற பெயரையும் பெற்றான். சோழ நாடு, கங்க நாடு ஆகியவற்றையும் அவன் கைப்பற்றினான்.

காரையூர் பயற குலத்தவனான சர்க்கரை மரபைச் சேர்ந்த ஒருவன் பாண்டியனைக் கண்டான். அவனது முன்னோர்களின் வீரதீரச் செயல்களை அறிந்த பாண்டியன் அவனைத் தன்னுடன் உடனிலை வீரனாக வைத்துக் கொண்டான்.

சில நாட்களிலேயே அவனது ஆண்மை, எதிரியை வயப்படுத்தும் தன்மை, வெருட்டல் முதலிய அரசியல் தந்திரங்களை அவன் கையாண்ட விதம், சொற் சாதுரியம் ஆகியவற்றை அவன் அறிந்து கொண்டான். உடனே அவனுக்கு சேனாதிபதி பதவியை வழங்கினான்.

அப்போது சோழ நாட்டை ஆண்ட சோழ  மன்னன் படையுடன் வந்து கொங்கு நாட்டைச் சூறையாடினான். இதனை அறிந்த பாண்டியன் சோழப் படையை விரட்டியடிக்கும்படி அவனை ஏவினான்.

வாலிப வீரன் படையுடன் சோழனிடம் சென்றான். படையை நிறுத்தி விட்டு தைரியமுடன் சோழனிடம் தனியாகச் சென்றான். தான் என்பதை அறிவித்தான்.

பின்னர் கூறினான் :”ஐயா! மிக்க அன்பாக முன்னோர்கள் காத்து வந்த இந்த கொங்கு நாட்டைச் சூறையாடினீர்கள். இது தர்மம் ஆகாது. கருணை கூர்ந்து கொள்ளைப் படையைத் திரும்பிப் போகுமாறு ஆணையிடுங்கள்” என்றான்.

இதைக் கேட்ட சோழன் அவன் மீது கோபம் கொண்டான். கொள்ளைப் படையைத் திருப்பி அனுப்ப அவன் இசையவில்லை.

வாலிப வீரன் சோழனை நோக்கி, “சோழ வேந்தர்களின் கீழ் எங்கள் முன்னோர்கள் சேனாதிபதிகளாகவும் நாட்டதிகாரிகளாகவும். படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இப்போதோ சோழநாடு கொடுங்கோலாட்சி செய்யும் நாடாக ஆகி விட்டது. கொள்ளையடிக்கும் நாடாகவும் மாறி விட்டது. இனிப் பொறுக்க முடியாது. தென்னவனின் படை இதோ வருகிறது” என்று கூறினான்.

ஆனால் சோழனோ எதையும் கேட்கவில்லை. உடனே அந்த வீரன் கடும்போரை மேற்கொண்டு சோழனை விரட்டி அடித்தான். சோழனின் படை அலங்கோலப்பட்டு சிதறி ஓடியது.

இதை ஒரு பழம்பாடல் இப்படிக் கூறுகிறது:

ஆறெல்லாஞ் செந்நீ ரவனியெஅலாம் பல்பிணங்கள்

தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு

கன்னிக்கோ னேவலினாற் காரைக்கோன் பின்றொடரப்

பொன்னிக்கோ னோடும் பொழுது

இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வீரனை பாண்டியன்  பாராட்டி பல விருதுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான்.  “நீ ஒரு நல்ல சேனாதிபதி” என்று வாழ்த்தினான்.

இந்த வார்த்தையான ‘நல்ல சேனாதிபதி’ என்ற பெயரை நாளும் அடுத்தடுத்து தமது வமிசாவளியினருக்கு அவர்கள் இட்டு வர ஆரம்பித்தனர். அது இன்றும் தொடர்கிறது.

இந்த வீரனைப் புகழ்ந்து கொங்குமண்டல சதகம் இப்படிக் கூறுகிறது:

பொருளையும் பொன்னியு மோங்கிப் பெருகிப் பொசிந்துமிகப்

பெருமை யுறுகொங்கிற் சென்னி யிடர்செயப் பெருஞ்செழியன்

அருமை யுளந்தெரிந் தன்னோன் முதுகிட் டகலவிசை

வரும முறுகாரை மன்றாடி யுங்கொங்கு மண்டலமே

–    பாடல் 57

பாடலின் பொருள் : வளமை மிகுந்த கொங்கு மண்டலத்தில் சோழன் பல தீங்குகளை இழைக்க, அதைப் பார்த்த பாண்டியனின் கருத்தை அறிந்து சோழ அரசன் புறமுதுகிட்டு ஓடும்படி செய்து ஓட்டிய காரையூர் மன்றாடி என்பானும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.

இந்தப் பாடலில் நான்காம் அடியில் வரும் சொல் மன்றாடி என உள்ளது.

இந்தப் பெயரைக் கொண்டு தற்காலத்திலும் பட்டக்காரர்கள் என்ற தலைவர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் பெயருக்கும் பின்னால் மன்றாடியார் என்று வருவது வழக்கம்.

இந்தச் சொல்லைக் கொண்ட பல சாஸனங்கள் உள்ளன.

“ஸ்வஸ்தி ஶ்ரீ மதுரை கொண்ட கோபர கேசர்பன்மர்க்கு யாண்டு பதினைஞ்சாவது கச்சப்பெட்டு பெரிய திருக்கற்றளி மஹாதேவர்க்கு சண்டபராக்கிரம மன்றாடியேன் எழுத்து;” என்று ஆரம்பிக்கிறது ஒரு சாஸனம். (S.I.I.Vol I No 82)

இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பிள்ளையார் மண்டபத்தில் உள்ளது.

அடுத்து சாஸனம் No 83 – ராஜ ஸிம்மவர்மேசுவர சிரேணியுள்ள சாசனமும் இது போலவே உள்ளது.

சோழநாட்டில் திருவிடைமருதூர் சாசனம் ஒன்று (S.I.I.Vol III Part I) இதே போல மன்றாடி என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது.

இன்னும் திருவாலவுடையார் திருவிளையாடல் புராணத்தில் வரும் 11ஆம் பாடலும் மன்றாடி என்ற சொல்லைக் கொண்டிருக்கிறது.

இந்த மன்றாடியார் பற்றி நல்ல ஒரு ஆய்வை மேற்கொண்டால் பழைய வரலாறும் அவர் தம் பெருமையும் நன்கு விளங்கும்.

***

Leave a comment

Leave a comment