
Post No. 12,740
Date uploaded in London – – – 20 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 9
கோவில் எண் 8 – எட்டுமானூர் சிவன் கோவில்

கோட்டயம் அருகிலுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் இது.
எட்டுமானூர், ஏற்றமானூர் என்று அழைக்கப்படும் இடம் கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. கோவிலின் த்வஜ ஸ்தம்பம் / கொடிமரம் தங்கத் தகட்டில் ஜொலிப்பதால் அதையும், மேற்கு நோக்கிய கோபுரத்தையும் தொலைவிலிருந்தே காணலாம். சுவாமி மேற்கு நோக்கி இருந்து அருள் புரிகிறார் .முதலில் வலிய விளக்கு எனப்படும் பெரிய விளக்கினை வழிபட்டுவிட்டு சிவனைத் தர்சிக்கச் செல்லுவது மரபு/ சம்பிரதாயம். ஏனெனில் 1545ம் ஆண்டு முதல் சுமார் 500 ஆண்டுகளாக எரியும் விளக்கு இது. ஆகையால் விளக்கிற்கு எண்ணெய் காணிக்கை செலுத்துவது முக்கிய வழிபாடு ஆகும். விளக்கு 3 லிட்டர் எண்ணெய் வரை தக்க வைத்துக்கொள்ளும். பகதர்கள் மேலும் மேலும் ஊற்றினால் கீழேயுள்ள தொட்டியில் அது சேரும். விழாக்காலத்துக்கு தேவையான எண்ணெய் அதில் சேர்ந்துவிடுகிறது. மேலும் திரியில் சேர்ந்துள்ள கருப்பு மையை பெண்கள் கண்களுக்கு இட் டுக் கொள்கிறார்கள். இது கண் நோய்களுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது .
கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி மூன்று சிவலிங்கங்களைப் பெற்று அவைகளை பிரதிஷ்டை செய்வதற்கு மூன்று இடங்களை தேர்ந்தெடுத்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம். அதில் ஒன்று எட்டுமானூர் .
xxxx
வலிய விளக்கின் கதை
1542-ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கோவில் வாசலில் நின்று கொண்டிருந்த சிப்பந்திகளிடம் ஒரு தட்டான் தங்கம் போல் ஜொலிக்கும் விளக்கினைக் கொண்டு வந்து, இதை கோவிலில் வையுங்கள் என்றார். ஒவ்வொருவரும் அவரைக் கேலி பேச்சுப் பேசி உதாசீனம் செய்தனர். இவ்வளவு பெரிய விளக்கிற்கு யார் எண்ணெய் ஊற்றுவார்? இது என்ன தண்ணீரில் எரியுமோ? என்றெல்லாம் பகடி பேசினர். அப்போது இடி மின்னலுடன் மழை ஆரம்பமானவுடன் ஒருவர் விளக்கினை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடினார் . மழை நின்றபின்னர் அந்த விளக்கு திரிகளுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அன்று முதல் இன்றுவரை அணையவில்லை.
இது போல வடலூரில் ராமலிங்க சுவாமிகள் ஏற்றி வைத்த அடுப்பும் விளக்கும் 200 ஆண்டுகளாக இன்றுவரை எரிந்து கொண்டு இருக்கிறது .
2 அடி உயர லிங்கம்
எட்டுமானூரில் இரண்டு அடி உயர லிங்கம் மஹாதேவன் என்று வழிபடப்படுகிறார். அதற்கு முன்னால் அழகிய விக்கிரகமும் இருக்கிறது. 2 நந்திகள் உண்டு. இதில் பஞ்ச லோகத்தால் ஆன நந்தி செம்பகசேரி மன்னர் கொடுத்தது; அவருக்கு வயிற்று வலி வந்த போது கோவிலுக்கு வந்து 41 நாள் விரதம் இருந்தார் ; அந்த நோய் நீங்கியவுடன் இதை நெல் நிரப்பி அளித்தார்.
அதிலுள்ள ஓட்டையிலிருந்து நெல்லை எடுத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு சென்றனர். பின்னர் அது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது இந்தக் கோவிலின் அமைப்பு, வைக்கம் மஹாதேவர் கோவில் போலவே வட்ட வடிவான கர்ப்பக்கிரகத்துடன் இருக்கும்; ஆயினும் வைக்கம் கோவிலை விடச் சிறியது.
கோவில் கூரை, தூண்கள் ஆகியன செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது
ராமாயண சிற்பங்கள்
கோவிலில் உள்ள தூண்கள், சுவர்கள் ஆகியவற்றில் நல்ல சிற்பங்களைக் காணலாம். ராமாயண காட்சிகள் மரச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ கோவில் எனப்படும் தேவி கோவில், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, கணபதி சந்நிதிகளும் இருக்கினறன. சுவாமிக்கு தங்க வைர மாலைகள் அணிவிக்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்..
10 நாள் உற்சவம்
கும்ப மாதத்தில் (பிப்ரவரி மார்ச்) வருடாந்திர உற்சவம் நடக்கிறது. அதில் எட்டாம் நாள் உற்சவம் முக்கியமானது. அன்று நள்ளிரவுக்குப் பின்னர் சுவாமி, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அலங் கா ரத்துடன் தரிசனம் தருகிறார். அன்று பக்தர்கள் பெருந்திதிரளாக வருகிறார்கள்.
தங்க யானைகள் – ஏழரைப் பொன்
எட்டாம் நாள், பத்தாம் நாள் திருவிழாக்களின் முக்கிய அம்சம் ஏழரைப் பொன்னால் ஆன தங்க யானைகளைக் காண்பதாகும். இவைகளை திருவாங்க்கூர் மன்னர் அனிச்சம் திருநாள் மார்த்தாண்ட வர்மா , போர் வெற்றிக்குப் பின்னர் கோவிலுக்கு தானமாக அளித்தார் ஏழரைத் துலா தங்கத்தினால் ஆன ஒவ்வொரு யானையும் 2 அடி உயர தங்க யானை.கள் . எட்டாவது யானை ஒரு அடி உயரமே இருப்பதால் ஏழரை பொன் யானை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது
பணக்கார கோவில்
எட்டுமானூர் மஹாதேவர் கோவில் பணக்கார கோவில். சிவன் அருள்பெற்ற மன்னர்கள், எல்லாவற்றையும் தங்கத்தினால் செய்து கொடுத்துவிட்டார்கள் தங்க நகைகள், வைர நகைகள், தங்கக் குடங்கள், தங்கம் பதித்த வலம்புரிச் சங்குகள் ,யானைக்கு தங்க முக பட்டாம், வெள்ளி நந்திகள் முதலியன கோவில் கஜானாவில் உள்ளன.
மான் + ஊர் = மானூர்

ஊருக்கு வெளியே ஐந்து கி.மீ தொலைவில் தேவகிரி உள்ளது. சிவபெருமான் ஒரு மானை உருவாக்கி அங்கே விளையாட விட்டதாக ஒரு கதை. புராணங்களில் வரும் மணிமான் தீர்த்தம் அது. இதனால் எட்டு மானூர் (எட்டி இருக்கும் ) என்று பெயர் ஏற்பட்டதாம். கோவிலுக்கு சிவலிங்கத்தைக் கொண்டுவந்த கரண் தான் இப்படி மான் உருவம் எடுத்தானாம். இது போல இன்னும் பல கதைகளும் உண்டு
வில்வ மங்கள சாமியார் இங்கு வந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து வெல்லமும் வாழைப்பழமு நைவேத்தியம் செய்தார். விஷ்ணு சிலை ஒன்றையும் நிறுவினார் அவர் அஷ்ட மங்கல மூத்தது இடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தார் அந்தக் குடும்பம் எட்டு குடும்பங்களாகப் பெருகியது. மக்கள் எட்டு மனைகளோட ஊர் என்று அழைக்கவே எட்டு மானூர் என்ற பெயர் நிலைத்து நின்றது என்ற விளக்கமும் உண்டு.
சிவ பக்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் என்பதில் ஐயமில்லை
சம்போ மஹாதேவ சிவா சம்போ மஹாதேவா !
—subham —
Tags- கேரள மாநில, புகழ்பெற்ற, 108 கோவில்கள், Part 9, எட்டுமானூர், சிவன் கோவில், தங்க யானைகள்