கொங்குப் புலவர் சபை! (Post No.12,739)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,739

Date uploaded in London –  –  20 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 31

கொங்குப் புலவர் சபை!

ச.நாகராஜன்

27-10-2019 அன்று கட்டுரை எண் 7144இல் கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரி என்ற தலைப்பில் கொங்கு மண்டல சதகம் பாடல் 30 விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டுரை இது.

கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரியை அவ்வப்பொழுது கொடுக்கக் கூடிய உரிமையை கொங்குப் புலவர் சபை பெற்றது.

அதை விளக்கும் பாடலாக கொங்கு மண்டல சதகம் பாடல் 31 அமைகிறது.

பாடல் இதோ:

வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி

தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயுமுரிமை

கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு

வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : குலோத்துங்க மன்னனின் சாசனப்படிக்குண்டான, கல்யாண வரியை ஐந்து பிரிவுகளை உடைய புலவர் வகுப்பினரில் தகுதி வாய்ந்தவர்கள் இவர்கள் என்று தேர்ந்தெடுத்து உரிமை தரும், கொங்குப் புலவர் சங்கம் கூடும் திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.

இதை விவரமாகப் பார்க்கலாம்.

பாணர் அல்லது வாணர் என்பவர்கள் பழந்தமிழ்க் குடிகளுள் மிகவும் சிறந்த பிரிவினர். தங்கள் பாடல்களால் அவர்கள் பெருந்தன்மையையும் வீரத்தையும் வளர்த்து வந்தனர்.

தமது முன்னோர்கள் பாடிய பாடல்களைத் தலைமுறை தலைமுறையாகப் பாடி வருவார்கள். புதிய பாடல்களையும் புனைந்து வருவர். வாணி தேவியே அவர்கள் நாவினின்று செய்யுளாக உதிக்கிறாள்; ஆகவே அவர்கள் தர்மசீலர்கள் என்று போற்றப்பட்டு வந்தனர்.

ஒருவனை, “நீ கெடுவாயாக” என்று அங்கதம் என்னும் அரம் பாடுவார்களாயின் அவர்களால் பாடப்பட்டோர் நிச்சயம் கெட்டுப் போவார்கள்.  ஆகவே இவர்களிடத்து மக்களிடத்தில் பயம் உண்டு.

வேந்தர்களும் வீரர்களும் இவர்களால் பாடப்படுவதைச் சிறந்த கௌரவமாகக் கருதினர்.  ஒவ்வொரு ஊராகச் சென்று பயமின்றி இவர்கள் இன்பச் சுவை தரும் அகப்பாட்டுகளையும் வீரம் தரும் புறப்பாட்டுகளையும் பாடி வந்தனர். யாழ் இசைத்து இவர்கள் பாடும் பாடல்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

இவர்கள் வேற்றரசர்களிடம் தூதும் செல்வதுண்டு. தனது அரசனின் சேனை வலிமையையும் வீரத்த்தையும் கூறுவதோடு மாற்றரசனின் பலமின்மையையும் கூசாமல் நேருக்கு நேர் நின்று எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்கள் இவர்கள்.

ஒருவேளை இரு மன்னர்களிடையே போர் உண்டானால் அதை சமரசம் செய்து தீர்த்து வைப்பவர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர்.

அரசர்கள் நீதி தவறி தவறு இழைத்தார்களெனில் அவர்களை இடித்துரைத்துத் திருத்துவர்.

தமது அரசர் வேறு ஒரு அரசனால் சிறைபிடிக்கப்பட்டால் அந்த அரசனிடம் சென்று உரிய முறையில் பேசி தமது அரசனை விடுவிக்கச் செய்வதும் உண்டு. அதே போல ஒரு மன்னன் மாண்டு விட்டால் அவரது மக்களுக்கு பேருதவி புரிவதும் இவர்களே.

கோயிலில் இருக்கும் சாசனங்களை விட இவர்களது பாடல்களே நிலையான சாசனமாகும் என்று இவர்கள் பாடும் பாடல்களை மக்கள் போற்றி மதித்து வந்தனர்.

சங்க நூல்களில் இவர்களின் அருஞ்செயல்கள் குறிக்கப்படுகின்றன.

சிறுபாணாற்றுப் படை உரையில் குறிப்பிடப்படும் பாணர் – பாடுவோர் எனப்படுவர் இவர்களே. இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என இவர்கள் பலவகைப்படுவர்.

பொருநராற்றுப்படை உரையில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இவர்கள் குறிக்கப்படுகின்றனர்.

மதுரைக்காஞ்சியில், பாணர் வருக, பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வைரியர் வருக என்பனவற்றின் உரையில் கவியாகிய புது வருவாயினை உடைய புலவர்களுடன் பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராக எனக் குறிக்கப்படுகின்றனர்.

மலைபடுகடாம் உரையில் கூத்தர் ஆடன்மாக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாணர்கள் விறல்பெற ஆடுதலால் விறலியர் என்றும் கூறப்படுவர்.

மேலே தரப்பட்டுள்ள கொங்குமண்டல சதகம் பாடல் 31இல் இரண்டாம் அடியில் ‘பழந்தமிழை வாணர் கொள்ள’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை,

“புரவலன் பரிசு கொண்டு மீண்ட

விரவலன் வெயிறெறு விமுங்கா னத்திடை

வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்

பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்

புரவல நாடூர் பெயர்கொடை பராசு

யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை”

என்று இலக்கண சூத்திரம் வலியுறுத்துக் கூறுகிறது.

தற்காலத்தில் கொங்குமண்டலத்தார் கொள்ளும் ஐவாணர்கள் :-

பட்டன், புலவன், பண்பாடி, தக்கைகொட்டி மற்றும் கூத்தாடி என்ற ஐவரே ஆவர்.

இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :

“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்

திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர

அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை

திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்

வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று

நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”

என்ற வரிகளால் காணலாம்.

இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.

புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்

பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்

தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்

கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.

இவர்களில் உயர்வு தாழ்வு வகையாகப் பல உட்பிரிவினரும் உண்டு.

கொங்குமண்டலத்தார் பெரிய நாடு என்று பாராட்டும் கீழ்கரைப் பூந்துறைத் தலைமை நகரான திருச்செங்கோட்டில், மலை முதல் படி அருகில் உள்ள அழகிய விநாயகர் சந்நிதியில் படிகாரர்கள் சபை என்ற ஒரு சபை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படுகிறது.

அப்போது இனிமேல் கம்பர் உரிமையில் பங்கு பெறக் கூடியவர்கள் இவர்கள் எனத் தேர்ந்தெடுத்து சபைத் தலைவரால் வெற்றிலை கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே புலவர் அட்டவணையில் பெயர் பதியப்படும்.

இச்சங்க காலத்தில் அப்போது ஏற்படும் சங்கத் தலைவரால் நியமன தாம்பூலம் பெறாதவர் பன்னூலாய்ந்த பெரும் பாவலர் என்றாலும் படி (வரி) பணித்தல் பங்கு கொடுக்கமாட்டார்கள். கல்யாணம் முதலிய முக்கிய சபைகளில் வாழி சொல்லும் தகுதியும் இவருக்கு இல்லை என்பது சங்கத்தாரின் கொள்கை.

கொங்கு வேளாளர் கல்யாணங்களில் இப்புலவர்கள் வாழி சொல்லாவிடில் கல்யாணம் பூர்த்தியானதாகக் கருதப்படமாட்டாது.

புலவர் அப்போது வரவில்லையெனில் அவர்களது உரிமை சன்மானத்தை எடுத்து வைத்த பின்னரே அந்தணர் முதலியோருக்கு பூரி முதலியன தரும் வழக்கம் ஐந்துபடிகாரர் இருக்கும் நாடுகளில் இன்றும் நடந்து வருகிறது.

விவாகம் செய்வோரிடத்து ஏதேனும் சில ஆசாரக் குறைபாடுகள் இருப்பின் புலவர் வாழி சொல்ல மாட்டார்.

புதிதாகப் பெண் கேட்கச் செல்லும் போதும் சில முக்கிய ஆசார நற்காரியங்கள் செய்யும் போதும் புலவரில் ஒருவரேனும் இருக்க வேண்டும் என்று கொங்கு வேளாளர்கள் விரும்புகின்றனர்.

இது நாட்டதிகாரம் பெற்ற பழைய பரம்பரையைச் சார்ந்தவர்களிடத்து இன்றியமையாதது. பெண்களும் புலவர்களை உபசரிப்பர்.

புதிதாக உள்ள செல்வந்தர்களை விட பழையபரம்பரையைச் சேர்ந்த ஏழையை புலவர்கள் மனதார மதிக்கின்றனர்.

இவர்கள் சேர வேளாளர்கள் எனப்படுகின்றனர். இவர்களும் கொங்கு வேளாளர்களைப் போல நன்மை தீமை சடங்குகளுக்கான ஆசாரங்களை நடத்துகிறார்கள்.

இந்தப் புலவர் வகுப்பினர் கொங்குமண்டலத்தில் மட்டுமல்லாது, பாண்டிமண்டலத்து சங்கரநாராயணர் கோவில், ஊற்றுமலை-சொக்கம்பட்டி-புளியங்குடி- எட்டயபுரம் முதலிய இடங்களில் இன்றும் வசித்து வருகின்றனர்.

இவர்களை  மதித்து இவர் தம் பழம்பெரும் பண்பாட்டை வழிவழியாக காத்து வருவது தமிழர் தம் கடமையாகும்.

***

Leave a comment

Leave a comment