விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே! (Post 12,744)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,744

Date uploaded in London –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே! 

ச.நாகராஜன் 

கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்ட ஐந்து விஷயங்கள்

கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஐந்து விஷயங்கள் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.

அவை யாவை?

விடை தருகிறது இந்த ஸ்லோகம்.

ஆயு: கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச |

பஞ்சைதாநி ஹி ச்ருஜ்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹின: ||

ஆயுள், தொழில், செல்வம், கல்வி மற்றும் மரணம் ஆகிய ஐந்தும் மனிதர்களுக்கு அவர்கள் கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்டு விட்டன.

கடவுளுக்கே தெரியாத நான்கு விஷயங்கள்

ஒரு அரசன் தன் மனதில் என்ன நினைக்கிறான், ஒரு கருமியிடம் இருக்கும் செல்வம், ஒரு கெட்ட (கிரிமினலின்) மன ஓட்டமும் செய்கையும், பெண்களின் நடத்தை – ஆகிய இந்த நான்கு விஷயங்களையும் கடவுளே கூட அறிய மாட்டார் என்றால் (சாதாரண) மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

ந்ருபஸ்ய சித்தம் க்ருபணஸ்ய வித்தம் மனோரதம் துர்ஜனமானஸஸ்ய|

ஸ்திரியஸ்சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஷ்ய: ||

பூர்வஜென்ம புண்ணியத்தால் வரும் பார்வை!

பூர்வஜென்ம புண்ணியத்தால் பெரும் செல்வம் அடைந்த ஒருவன் அடர்ந்த வனத்தை தனது சொந்த நகரமாகக் கருதுவான்; எல்லா மனிதர்களும் மிக நன்றாக தன்னிடம் நடப்பதாக நினைப்பான்;  எல்லா நிலமும் ரத்னமயமாக அவனுக்குத் தெரியும்.

பீமம் வனம் பவதி தஸ்ய புரம் ப்ரதானம்

      சர்வோ ஜன: சுஜனதாமுபயாதி தஸ்ய |

க்ருதஸ்னா ச பூர்பவதி சன்னிதிரத்னபூர்ணா

       யஸ்யாஸ்தி பூர்வசுக்ருதம் விபுலம் நரஸ்ய ||

தலையெழுத்தில் எழுதாவிடில் என்ன பிரயோஜனம் இவற்றால்!

ஒருவனுக்கு விதியால் விதிக்கப்பட்டு அவன் தலையெழுத்தில் எழுதப்படவில்லை என்றால், அதிக படிப்பு, கூரிய அறிவு, வீரம், இன்னும் பல நற்குணங்கள் அவனிடம் இருந்தும் பயன் என்ன?

(விதி இல்லையென்றால் இவை அனைத்தும் இருந்தும் பயன் இல்லை என்று பொருள்)

கிம் சாஸ்த்ரைர்பஹுதாப்யஸ்தை: கிம் சாதுர்யேண வித்யா |

கிம் சௌர்யேணாதிவீர்யேண லலாடே சேன்ன லிக்யதே ||

முயற்சியின்றி அதிர்ஷ்டம் மட்டும் ஒன்றையும் சாதித்து விடாது!

ஒரு ரதமானது ஒற்றைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு ஓட முடியாது; அது போல மனித முயற்சி இல்லாமல் அதிர்ஷ்டம் (விதி) மட்டும் தானாகவே எதையும் சாதித்து விட முடியாது.

யதா ஹோயேகேன சக்ரேன ந ரதஸ்ய கதிர்பவேத் |

ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

பிரம்மாவிஷ்ணுசிவனாலும் முடியாத காரியம்!

பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம் ஒன்று உண்டு!

அது என்ன?

ஒருவன் நெற்றியில் எழுதி விட்ட கோடுகளை (தலையெழுத்தை அல்லது விதியை) ஹரி, ஹரன் அல்லது பிரம்மா யாராக இருந்தாலும் சரி முற்றிலுமாக அழித்து விட முடியாது.

ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |

லலாடலிகிதா ரேகா ப்ரிமார்ஷ்டு ந சக்யதே ||

மனதை அடக்குவது மிகவும் கடினம்!

தாயுமானவர் கூறுகிறார்

குதிரையையும், மதயானையையும் வசப்படுத்தி விடலாம்.

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்.

ஒரு சிங்கத்தின் முதில் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம்.

பாம்பை (கட்செவி) ஆட்டுதலும் செய்ய முடியும்.

நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.

வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம்.

தேவர்களை ஏவல் செய்து வேலை வாங்கலாம்.

என்றும் இளமையோடு இருக்கலாம்.

மற்றொருவர் உடலில் புகுந்து கொள்ளலாம்.

நீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மேல் இருக்கலாம்.

நிகரில்லாத சித்திகளைப் பெறலாம்.

ஆனால், மிகவும் கஷ்டமான விஷயம் என்னவெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் தான்”.

இப்படி தேஜோமயானந்தப் பாடலில் அவர் குறிப்பிடுகிறார்

(உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேஜோமயானந்தமே)

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனல்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
                                                                        – தாயுமானவர்

இதை பிரதிபலிக்கும் சம்ஸ்கிருத சுபாஷிதம் இது:

ஷக்யா தமயிதும் தேவ! சிம்ஹவ்யாக்ரகஜாதய: |

ந து ராகாசவக்ஷீவவிஷயாபிமுகம் மன: |

ஸ்லோகத்தின் பொருள்:

ஓ கடவுளே! ஒருவன் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கலாம்; ஆனால் ஒருவன் தனது வலிமையினால் காமத்தினால் வரும் இன்ப விஷயங்கள், குடி, போதை ஆகியவற்றில் ஈடுபட்ட மனதை அடக்கவே முடியாது.

(சிம்மம் – சிங்கம்: வியாக்ரம் – புலி; கஜ – யானை)

***

Leave a comment

Leave a comment