ஆரண்முழா/ திருவாறன்விளை பார்த்தசாரதி  கோவில் -14 (Post No.12,761)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,761

Date uploaded in London – –  –  25 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 14

PART 14

கோவில் எண் 13 –  ஆரண்முழா/ திருவாறன் விளை பார்த்தசாரதி  கோவில்

சிறப்பு அம்சங்கள்

மூலவர் திரு நாமம் / பெயர் – திருக்குறளப்பன் , நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய சந்நிதி

தாயார் – பத்மாசனி  நாச்சியார்

தீர்த்தம் – பம்பா நதி, வேத வியாச சரஸ்

விமானம் – வாமனம்

பிரசன்னமாகியது — வேத வியாசருக்கு, பிரம்மாவுக்கும்

மங்களாசாசனம் — நம்மாழ்வார்  11 பாசுரங்களைப் பாடியுள்ளார் (3436-46)

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று .

கோவில் மதில் அருகில் அழகிய பம்பாநதி ஓடுகிறது

கோவிலுக்கு பெரிய கோபுரங்கள்;கிழக்கு கோபுரம் வழியாகக் கோவிலுக்குள் செல்ல 18 படிகள் ஏற வேண்டும்  வடக்கு கோபுர வாசல் 57 படிகள் உடையது.

ஆரண் முழா கண்ணாடியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. செம்பும் ஈயமும் கலந்த கலவையில்  பாலிஷ் செய்யப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது . இதை முதலில் செய்தவர் திருவாங்கூர் மஹாராஜா

திருவாறன் விளை என்பது  தலத்தின் இன்னும் ஒரு பெயர் ; அது  ஆரண் முழா ஆகிவிட்டது .

மலையாள தேசத்தில் பிரபல கிருஷ்ணன்/ விஷ்ணு கோவில்கள் உள்ளன. அவை :குருவாயூர் , திருவார்ப்பு , அம்பலப்புழா , ஆரண் முழா.

இவைகளில் செங்கண்ணூர்  திருத்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஆரண்  முழா  பார்த்தசாரதியை தரிசிப்போம். இந்த ஊரின் பெயரைச் சொன்ன உடனே ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பனின் விலை உயர்ந்த திருவாபரண  ஊர்வலம் ஞாபகத்துக்கு வந்து விடும். அதையும் இறுதியில் காண்போம்

XXX

செங்கண்ணூர் சென்றால் அருகிலுள்ள ஐந்து வைணவ தலங்களைத் தரிசிக்கலாம் ; அவை ஆரண்  முழா , திருவார்ப்பு , திருவல்லா , திருப்புலியூர் , திருச் சிற்றாறு , திருவண் வண்டூர் .

எப்படி  காஞ்சிபுரம் சென்றால் 13 தொண்டை நாட்டு வைணவ தலங்களை எளிதில் தரிசிக்கலாமோ அப்படி அமைந்த ஊர் செங்கண்ணூர் . அங்கு பகவதி, சிவன் கோவில்களும் உள்ளன .

மஹாபாரத யுத்தத்தில் கர்ணனின் தேரின் இடச் சக்கரம் மண்ணில் புதைந்தது. அதை சரி செய்ய அவன் இறங்கினான்; அப்போது கிருக்ஷ்ணன் அம்பால் அடி என்றான்; அது தவறான செயல்;  நேருக்கு நேர் தயாராக இருக்கும்போதுதான் அம்பு விடவேண்டும் ; யுத்தம் முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்ற அர்ஜுனன் , அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக இந்தக் கோவிலைக் கட்டினான் என்பது செவி வழிச் செய்தி .

சிலர் கர்ணனுக்குப் பதில் பீஷ்மருடன் அர்ஜுனன் செய்த சண்டையையும்  தொடர்புபடுத்துவர்

இன்னும் ஒரு கதை

ஒரு காலத்தில் மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் இதனால் அவருக்கு சிருஷ்டி என்னும் படைப்புத் தொழிலே மறந்து போனது. உடனே விஷ்ணுவைத் தியானத்தில் துதித்தார். அவருக்கு படைப்பு என்னும் தொழிலை விஷ்ணுவே நினைவுபடுத்திய ஸ்தலம் இது.

பாம்பு வடிவ படகுப்போட்டி Snake Boat Race

இங்கு படகுப்போட்டி ஒன்று ஆண்டுதோறும் நடக்கும்; அதுவும் கோவிலுடன் தொடர்புடையதே.. ஒரு அர்ச்சகர் பிராமணமர் வடிவில் வந்தது பார்த்தசாரயத்தியே என்று அறிந்து படகில் கோவிலுக்கு நிறைய நெல்லைக் கொண்டுவந்த சம்பவம் வருடாந்திர படக்குப் போட்டியாக நடக்கிறது இதற்கு திருவோணச் சிலவு தோணி என்று பெயர். ஒரு முறை அந்தப் படகினைத் தடுக்க எதிரிகள் முயன்றபோது பாம்பு வடிவ படகினைச் செலுத்துவோர் பாதுகாப்பாக வந்தனராம் .பாம்புப் படகுகளுக்கு சுண்டன் வல்லம் என்று பெயர். அதன் நீளம் 103 அடி . நூறு படகோட்டிகளும் 25 வஞ்சிப் பாட்டு பாடகர்களும் படகில் இருப்பார்கள்.அன்றைய தினம் விருந்தும் ஏற்பாடு செய்யப்படும்

ஊர்ப்பெயர் காரணம்

ஆறு என்றால் நதி மற்றும் எண் ஆறு/ 6. முழை  என்றால் மூங்கில் ;; முன்னர் இந்த விக்கிரகத்தை நிலக்கல் என்னும் இடத்தில் அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகவும் மறவர்கள் தாக்கும் காட்டுப்பகுதிக்குள் அந்த ஊர் இருந்ததால் அதை ஆறு மூங்கில் கம்புகளினால் ஆன தெப்பத்தில் சுவாமியைக் கொண்டுவந்ததால் ஆறு முழா ஆகிய தாகவும் செப்புவர்.

திருவாபரண  ஊர்வலம்

சபரி மலை ஐயப்பனின் விலை மதிப்புமிக்க அணிகலன்கள்/ ஆபரணங்கள் பந்தளம் மஹாராஜா அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அவை பக்தர்கள் புடைசூழ, பெரிய பாதுகாப்புடன் சபரி மலைக்கு எடுத்துச் சென்று தர்ம சாஸ்தாவுக்கு அணிவிக்கப்படும்

ஆபரணங்கள் பந்தளத்திலிருந்து புறப்படும். அந்த ஆபரணப் பெட்டி பந்தளத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள ஆரண் முழாவில் தங்கிச் செல்லும். மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.

இந்த திருவாபரணங்கள் அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு , சிறப்பு பூஜைக்கு பிறகு பக்தர்கள்தரிசனத்துக்கு வைக்கப்படும்  அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க,  திருவாபரண ஊர்வலம் புறப்படும்

இந்த ஊர்வலம் ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப் பயணமாக  மறுநாளைக்கு  பம்பை வந்தடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்குப் பின்னர் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும் .

இப்படி ஆண்டுதோறும் நாம் பத்திரிக்கைச் செய்தியை படிக்கலாம்.

—subham—

Tags- திருவாபரண  பெட்டி ஊர்வலம் ,  ஆரண்முழா, திருவாறன் விளை , பார்த்தசாரதி  கோவில், கேரள,  புகழ்பெற்ற 108 கோவில்கள், part 14

Leave a comment

Leave a comment