கார்த்திகைத் தீபம்- அறுமீன் விழா (Post No.12,762)


WRITTEN BY B.KANNAN, NEW DELHI

Post No. 12,762

Date uploaded in London – –  –  25 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

                        அறுமீன் விழா 

கார்த்திகைத் தீபம் பண்டிகையை அறுமீன் விழா எனத் தமிழுலகம் கொண்டாடு கிறது. அது செவ்வேளுக்கு உகந்த நன்னாள். கார்த்திகை மாதத்துக்குத் தமிழில் அறுமீன் எனப் பெயர். அழகன் முருகனை எடுத்து வளர்த்த ஆறு ரிஷி பத்தினி மாரும், நட்சத்திரமாக ஜொலிக்கும் கற்பின் இலக்கணமான அருந்ததியும் சேர்ந்து, ஆர(ற)ல் மீன் வடிவில் வடதிசை வான்வெளியில் மின்னுவதைப் பரிபாடல் (5.43) “மாதவர் (மாமுனிவர்) மனைவியர் பெற்றனர்” என்ற தலைப்பில் புலவர் கடுவன் இளவெயினனாரும், ‘அகலிரு விசும்பின் ஆஅல் போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’- கார்த்திகை மாதத்தில் தோன்றும்‘ஆஅல் [ஆர(ற)ல்] என்னும் விண்மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம் என மலைபடுகடாம் (பாடல் 10) இயற்றியப் புலவர்  இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிக னாரும் எடுத்துரைக்கின்றனர்:

அறல் என்றால் ஆற்று மணலில் உள்ள வரிவரியான கோடுகள்,பெண்ணின் கூந்த லுக்கு உவமையாய் சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிறது. ஆற்றுநீருக்குக் கீழே மணலருகே கிடக்கும் விலாங்கு மீனுக்கு ஆர(ற)ல் என்று பெயர்

மேலும், கௌசிகனார் கூறுகிறார்: “மைபடு மாமலை பனுவலின் பொங்கி கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி., இருங்கல் இகுபத்து..”   கார்த்த(கருமை) இகை(திரட்சி)= கார்த்திகை என்பதாகும். இதை, நீருண்ட கருமைநிற மேகங் கள்  திரட்சியாகக் காணப்படும் மாதம், நீண்ட வரிசையில் திரண்டிருக்கும் அகல் விளக்கொளி வீசுகின்ற  திருவிழா நாள் என்றும் கொள்ளலாம். 

பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளத் தன் தலைவன், உழவுப்பணி முடிந்து ஏர் கலப்பைகள் இளைப்பாறும் வேளையில், குறுமுயல் நிழல்படியும் முழு பால்நில வுக்குப் போட்டியாக வீதிதோறும் ஜெகஜ்ஜோதியாய் விளக்கேற்றி, வீடு நிறையத் தோரணங்கட்டி, கார்த்திகைத் தீபத் திருவிழாவை மகிழ்ச்சியுடன் எல்லாருடன் கொண்டாட வந்து சேருவானோ என எண்ணி மருகுவதை,  ‘உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,மழை கால் நீங்கிய மாக விசும்பில்’ என உணர்ச்சியுடன் விவரிக்கி றார் நக்கீரர் (அகநானூறு 141)

( உலகு தொழில்=உழவு, உலந்து=முடிந்து,நாஞ்சில்=கலப்பை, மாக=உயரே, மறு=கறை மறுகு=வீதி, விறல்=வெற்றி, துவன்றிய= கூடிய, விழவு=விழா, அயர=கொண்டாட)

இதிலிருந்து இத்திருக்கார்த்திகைத் தீப வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டவருக்கு உரியப் பண்டிகையாக நடைபெற்று வருவதை அறிகிறோம்.

மேலும், கார்த்திகை விழாவில் நீண்ட வரிசையில் ஏற்றப்படும் அகல் விளக்குகளின் சுடரொளி, இலவம்,நெல்லி மரங்களின் செந்நிறப் பூக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்து அழகூட்டுவதற்கு நிகராக உள்ளன என்று பிற சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன.

களவழி நாற்பது பாடியப் புலவர் பொய்கையார், போர்க்களத்தில் சேரநாட்டு வீரர் களும், சோழர்ப் படைப் போராளிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தாக்கிக் கொள் ளும் போது குருதி ஒழுகியோடி ஒளிரும் காட்சியானது, தீபத்திருநாளில் சுடர்விடும் விளக்கொளிக்கு ஒப்பானது எனச் சொல்கிறார் (பாடல் 17)

கார் நாற்பது இயற்றிய மதுரை கண்ணங் கூத்தனார் அதன் 26-வது செய்யுளில் தீபத் திருநாளின் முக்கியப் பின்னணியை எடுத்துக் கூறுகிறார். ‘நலமிகு கார்த்திகை நாட் டவ ரிட்ட தலைநாள் விளக்கிற்…’ என்று- அழகு மிக்க கார்த்திகைத் திருவிழாவில் ‘தேந் திளமுலையார் தையலார்’ ஏற்றி வைத்த ஏற்றமிகு முதல் நாள் அகல் தீபத் தைச் சாரல் மழையினூடே, கார்காலத்துக்கே உரிய மருதோன்றி,மருதாணி பூக்கள் வழியெல்லாம் பூத்துக் குலுங்கி மேலும் அழகுறச் செய்தனவாம்! என்பவர், கார்த்தி கைத் தீபம் முதல்நாள் மகேசன் உமையம்மைக்குத் தன் இடப்பாகம் அளித்து அர்த்த நாரியாகத் தோற்றமளித்ததையும், அரியும்,அயனும் அடிமுடி தேடி வீழ்ச்சியுற்றதை யும், ‘அழலவிர் (தீப்பிழம்பு) சோதி அருமறை இறைவன்’ பொருட்டு எண்ணிறைந்த விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தருணத்தில் நாடு அழகுடன் விளங்குவதால் ‘நலமிகு கார்த்திகை’ என்றும், மூன்றுநாள் விழாவில் முதல்நாள் நிகழ்வே அரனுக் குச் சிறப்புடையது ஆதலின் ‘தலைநாள் விளக்கு’ என்றும் கூறுகிறார்.

யாழ்ப்பாணம் வித்துவ சிரோமணி திரு.பொன்னம்பலப் பிள்ளை இயற்றிய மாவை (மாவிட்டபுரம்) யமக அந்தாதி  அங்கு அருள் புரியும் காங்கேயமூர்த்தி என்றழைக் கப்படும் கந்தன் புகழ் பாடுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் நீர்விழா நடத்துவதும்,கடலாடுவதும், சுடர்க்காடு போல் விளக்கேற்றி வைத்துப் பரவுதலும் நிகழக்கூடிய கார்த்திகைப் பண்டிகையை இப்படி விவரிக்கிறது.

 கார்த்திகை கார்த்திகை யார்குமி டோன்றி கவினநிலக்

 கார்த்திகை கார்த்திகை நீர்விழ வோங்கும் கடல்குடைந்துங்

 கார்த்திகை கார்த்திகை மீனல வன்சுடர்க் காடுதிருக்

 கார்த்திகை கார்த்திகை மாவையற் காண்முத்தி கண்டனையே

இப்பாடலில் ஒரு தனித்துவம் உண்டு. யமக அணித்தொகையில் அமைந்துள்ளக் கார்த்திகை என்ற சொல் ஒவ்வொரு அடியிலும் வெவ்வேறுப் பொருளில் வந்து கார்த்திகைத் தீபவிழா சூழ்நிலையைச் சிறப்பித்துக் கூறுகிறது.

முதல் அடி; கார்த்திகை=செந்நிறக் காந்தள் மரம், கார்+திகை=பெரிய வேங்கைமரம், ஆர்குமிழ்=அரியவகைக் குமிழ மரம், நிலம் கவின தோன்றி= (கார் மாதத்தில்) நிலம் அழகுறப் பூத்துக்குலுங்கித் தோன்ற (குமிழம்=சர்வோபத்ரம், நீண்ட கூம்பு வடிவுடை யது)

2-ம் அடி; கார்த்து=கார்காலத்தில், கார்+திகை=கரிய மேகம் வானமுழுதும் திரண்டி ருக்க, ஐ=மேன்மையான, இகு நீர்விழ=சொரியும் மழைநீர் பொழிகையில், ஓங்கும் கடல் குடைந்தும்=கடலில் நீராடிக் கொண்டு

3-ம் அடி; கார்=மழை, குளிருக்கு, திகை=திகைத்த, கார்த்திகைமீன்=ஆரல் மீனும், அலவன்=நண்டும், சுடர்க்கு ஆடு=வெயிலொளியில் வெளியே தலைகாட்டிக் கரை யில் ஒதுங்கும்

4-ம் அடி:திருக்கார்த்திகை= அழகிய கார்த்திகைத் தீபநாளில், கார்த்த=கரிய, இகை= அடர்த்தியானக் கொன்றை மலர் அணிந்திருக்கும், மாவையன்= மாவைத் தலத்தில் அருள் புரியும் கந்தவேளை, காண்=தரிசிப்பாயானால்,முத்தி கண்டனை= பெரும்பேறு அடைவாய்

அப்படியே நாமும் மாவை கந்தசாமிப் பெருமானைப் போற்றி, கார்த்திகை நன்னா ளில் அவன் அருள் பெற வேண்டுவோம். நகுல முனிவரின் கீரிமுகத்தை நீக்கி ஈசன் சாபவிமோசனம் அருளியதால் அவர் நிர்மாணித்த ஆலயமே மாவை நகுலேஸ்வரர் கோவிலாகும். மேலும், குதிரை முகம் கொண்டு, குன்மநோயால் பீடிக்கப்பட்ட திசை உக்கிரசோழன் மகள் மாருதப்புரவீகவல்லி இத்தலத்து ஈசனை நியமத்துடன் தொழு ததினால் குறை நீங்கப் பெற்றாள். அதனால் இத்தலம்  மா=குதிரை(முகம்) விட்ட புரம்=நீங்கிய நகரம் எனவாயிற்று. இளமை எழில்நலம் மீண்டும் பெற்றபோது  

அவளுக்கு அழகன் முருகன் நினைவு  வர, அங்கு வேலவனுக்கு இப்போது உள்ள ஆலயத்தை எடுப்பித்தாள்.

புகழ்பெற்ற யாழ்ப்பாணத்துப் புலவர் உடுவில் முத்துக்குமார கவிராயர் “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் இந்நாளில் நகர்வலம் வரும் அழகை வர்ணிப்பதைப் பாருங்கள். அதில் இச்சாசக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக் கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும் (ஓரு வார்த்தை இருவிதப் பொருள்). இதோ அந்தப் புகழ் பெற்றப் பாடல்……

 மல்லாக மாதகலான் மருகன்சுன் னாகத்தான்

      மகன்பா வாணர்

 சொல்லாச்சீ ரீவினையான் துன்னாலை யானத்தான்

      சுரும்ப ரோதிச்

 சில்லாலை யிருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச்

      சிகண்டி மாவூர்

 வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி 

      வரக்கண் டேனே!           (மாவிட்டபுரம் தலபுராணம்)

பதவுரை: மல்லாக மாதகலான் மருகன்=வலிமையான மார்பில் அனவரதமும் லக்ஷ்மி தேவியை அகலாமல் இருத்தி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் மருகன்,

சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,

சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட, துன்னாலையானத்தான்=  வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்

ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.

(சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில்).

இங்கு பாவலர், வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.

சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒருவகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங் களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கவிநயத்து டன் கூறுகிறார் கவிராயர்

Kartikai Constellation

      அந்த வள்ளி மணாளன் முருகவேள் நம்மை என்றென்றும் காப்பானாக!

   ——————————————————————————

Leave a comment

Leave a comment