அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! (Post No.12,770)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,770

Date uploaded in London –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 1 அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! 

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

ச.நாகராஜன்

 பிரபல டைரக்டரும் கதாசிரியரும் பத்திரிகை ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் விந்தை மனிதர்கள், விந்தைப் பெண்மணிகள் பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வந்தேன்.

இந்தத் தொடரில் மேஜிக் மன்னன் ஹௌடினி, மேஜிக் நிபுணர் அலெக்ஸாண்டர் ஹெர்மன், உல்ப் மெஸ்ஸிங், ரஸ்புடீன், எட்கர் கேஸ், மெஸ்மர், க்விம்பி, அரிகோ, ஹோம், எக்லிங்டன், முல்டூன், லியனார்டோ டாவின்சி, மைக்கேல் காக்லின், சீரோ, ஜான் டீ, நாஸ்டர்டாம், நெல்ஸன் பால்மர், ராபின் வின்போ, சார்லஸ் ஃபோர்ட், யூரி கெல்லர், ஆரூட ராணி லெனார்மனா, ஜீன் டிக்ஸன், ஃபாக்ஸ் சகோதரிகள், ஃப்ளோரென்ஸ் குக், மேடம் ப்ளாவட்ஸ்கி, பெட்டி ஷைன், ஜோன் குய்க்வி, ஜோயன்னா சௌத்காட் ஆகியோர் பற்றி சுவையான தகவல்களைத் தந்தேன்.

இது தவிர பாக்யாவில் ஒன்பது வருடங்கள் தொடர்ந்த அறிவியல் துளிகள் தொடரில் கார்ல் ஜங் உள்ளிட்ட இன்னும் பலரைப் பற்றிய விவரங்களைத் தர முடிந்தது.

என்றாலும் கூட அதீத உளவியலையும், ஆவி உலகையும் ஆராய்ந்த ஏராளமானோரின் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

நம்ப முடியாத ஆனால் நிஜமாகவே நடந்த பல விஷயங்களை இந்த அறிஞர்கள் ஆராய்ந்தனர்; உலகிற்குத் தங்கள். முடிவுகளை அறிவித்தனர்.

இவர்களில் இன்னும் சிலரைப் பற்றி அறிமுகம் செய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.

உள்ளே நுழைவோம்; இன்னும் சிலரைப் பார்ப்போம்.

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

இமானுவேல் ஸ்வீடன்பர்க் (Emanuel Swedenborg – 1688-1772) ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு எஞ்ஜினியர், தத்துவஞானி, இறையியல் வல்லுநர், அதீத உளவியலாளர்.

பைபிளில் உள்ள உரைகளுக்கு அவர் புதிய விளக்கங்களை அளித்தார். இதனால் நியூ சர்ச் உருவானது.

இவர் ஆவிகள் உலகத்தை நன்கு அறிந்தவர். ஆகவே பல அதிசய சம்பவங்களை இவரால் செய்து காண்பிக்க முடிந்தது.

ஏராளமான சம்பவங்களில் இங்கு சிலவற்றைப் பார்ப்போம்.

இது 1759ஆம் ஆண்டு நடந்தது. கோதன்பர்க்கில் ஒரு வீட்டில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஸ்வீடன்பர்க், 420 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஸ்டாக்ஹோமில் இருந்த தனது வீட்டருகில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி வருவதாக உணர்ந்தார். பிறகு சற்று நேரத்தில் தீயானது தனது மூன்று வீட்டிற்கு முன்னால் அணைக்கப்பட்டு விட்டதாக உணர்ந்து அமைதியானார். அவர் மனக்கண்ணில் கண்ட காட்சி பின்னால் சரிபார்க்கப்பட்டு உண்மைதான் என்று அறியப்பட்டது. எமில் க்ளீன் (Emil Kleen) என்ற மருத்துவர் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவர் தீவிரமாக விசாரணை செய்து ஆராய ஆரம்பித்தார். அது உண்மை என்பது தெரிய வந்தது. இதை எப்படி பகுத்தறிவு மூலம் விளக்குவது என்று அவருக்குப் புரியவில்லை; திகைத்தார்.

இன்னொரு சம்பவமும் 1759இல் நடந்தது. இது பற்றி அதிகம் பேசாமல்

ஸ்வீடன்பர்க் மௌனம் சாதித்தார். ஏனெனில் இது ப்ரஷ்யா ராணி லூசியா உல்ரிகா (Queen Lousia Ulrika) மற்றும் அவரது காலம் சென்ற இளவரசர் விஹெல்ம் (Prince Wilhelm of Prussia) சம்பந்தப்பட்ட விஷயம்!  ராணியும் இளவரசரும் தோல்வி அடைந்த ஒரு சதிவேலையில் ஈடுபட்டிருந்தனர். இறந்துபோன இளவரசர் ஆவியைத் தொடர்பு கொண்டு இளவரசரிடமிருந்து ராணி அறிய வேண்டிய விஷயத்தைக் கேட்டு அவருக்குச் சொன்னார் ஸ்வீடன்பர்க். ‘நான் சுலபமாக ஏமாறுபவள் இல்லை’ என்று ராணி கூறினார். ஸ்வீடன்பர்க் கூறிய விஷயம் மிகச் சரியாகவே இருந்தது.

மூன்றாவது சம்பவம் இது:

ஸ்வீடனில் நியமிக்கப்பட்ட நெதர்லாந்தை சேர்ந்த தூதுவரின் விதவை மனைவி தான் வாங்கிய ஒரு வெள்ளிப்பாத்திரத்திற்கான பில்லைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்தார். வெள்ளிப்பாத்திரத்தைச் செய்த வியாபாரியோ அந்தப் பாத்திரத்திற்கான பணம் தனக்கு வரவில்லை என்றும் வந்திருப்பதாக இருந்தால் பில் இருக்க வேண்டுமே என்றும் ஆணித்தரமாக வாதிட்டார். ஸ்வீடன்பர்க்கிற்கு இந்த விவரம் தெரிய வந்தது. உடனே அவர் தூதரின் ஆவியோடு தொடர்பு கொண்டார். பில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்தார். அதை அவரது விதவை மனைவிடம் கூற அவர் அந்த இடத்தில் இருந்த பில்லை எடுத்து வியாபாரியிடம் காட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது. இன்னொரு கூற்றின் படி ஸ்வீடன்பர்க் தூதரிடம் அவரது மனைவியின் பிரச்சினையை விளக்கியதாகவும் அன்று இரவு தூதர் தனது மனைவியின் கனவில் வந்து பில் இருக்கும் இடத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள் ஸ்வீடன்பர்க் வாழ்க்கையில் உண்டு.

அவரது ஹெவன் அண்ட் ஹெல் (Heaven and Hell) என்ற புத்தகம் ஏராளமானோரால் படிக்கப்பட்ட புத்தகம்.

இவரைப் பற்றித் தொடர்ந்து ஏராளமான நூல்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

ஆவி உலகம் உண்டு என்பதையும் இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் ஸ்வீடன்பர்க்!

இவர் ஒரு விந்தை மனிதர் தானே!

***

Leave a comment

Leave a comment