
Post No. 12,773
Date uploaded in London – – 28 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு!
ச.நாகராஜன்
1
மத்யபிரதேசத்தின் முதல் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள் மத்ய பிரதேசத்தில் காந்த்வாரா மாவட்டத்தில் ஓம்காரேஸ்வரில் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலையை 2023 செப்டம்பர் 21 ஆம் தேதி திறந்து வைத்துள்ளார்.
வரவேற்று மகிழ வைக்கும் இந்த சிலை திறப்பு விழா பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
2
12 வயது பாலகனாக இங்கு ஆதி சங்கரர் சிலை வடிவில் எழுந்தருளுகிறார்.
இந்த ஆலயம் உருவாவதற்கான செலவான ரூ 2200 கோடியை அரசு ஏற்றுள்ளது. இது காந்த்வாரா மாவட்டத்தில் மாந்தாதா திவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏகாத்மதா கி ப்ரதிமா – ஏகாத்மத்தின் சிலை – என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
தனது 32 வருட ஆயுள் காலத்தில் சங்கரர் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்று பாரதத்தின் ஒருமைப்பாட்டை நிரூபித்துள்ளார்.
அவர் தனது வாழ்நாள் காலத்தில் சுமார் 116 நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் பத்து உபநிடதங்களுக்கான பாஷ்யம். ப்ரஹ்ம சூத்ரம் மற்றும் பகவத்கீதைக்கான விரிவுரைகளும் அடக்கமாகும்.
3
இந்தச் சிலையை அமைக்க மாந்தாதா தீவு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
மாந்தாதா தீவு நர்மதா நதியில் அமைந்துள்ளது. இங்கு 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஓம்காரேஸ்வரர் தலமும் அமரேஸ்வரர் தலமும அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி இது உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க தலத்திற்கு சுமார் 110 கிலோமீட்டர் அருகில் உள்ளது.
14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சைவ, வைணவ, ஜைன ஆலயங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
ஓம்காரேஸ்வரர் என்ற பெயருக்குத் தக்கபடி இந்தத் தீவு ஓம் வடிவில் அமைந்துள்ளது. அதனாலேயே இந்தப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
ஓம்காரேஸ்வரர் என்றால் ஓம் என்ற மந்திரத்திற்கு அதிபதி என்று பொருள்.
4
புராண வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் இதன் பெருமை நன்கு புரியும்.
சிவபிரான் ஒளிவடிவமாக ஆதியும் அந்தமுமின்றி வடிவம் எடுத்ததால் இது ஜோதிர்லிங்க தலமாக ஆனது. 12 ஜோதிர்லிங்க தலங்கள் பாரதத்தில் உள்ளன.
மகாகாலர் – உஜ்ஜயினி, சோம்நாத், நாகேஸ்வரர் – குஜராத், மல்லிகார்ஜுனர் – ஆந்திர பிரதேசம், ஓம்காரேஸ்வரர் – மத்யபிரதேசம், கேதார்நாத் – உத்தரகாண்ட், பீம்சங்கர், திரியம்பகேஸ்வரர் மற்றும் கிரிஷ்னேஸ்வரர் – மஹராஷ்டிரம், விஸ்வநாதர் – வாரணாசி, வைத்யநாதர் – ஜார்கண்ட், ராமேச்வரர் – தமிழ்நாடு ஆகியவை 12 ஜோதிர்லிங்க தலங்களாகும்.
5
மூன்று வரலாறுகள் இந்தத் தலம் பற்றி உண்டு.
முதலாவது வரலாற்றின் படி, விந்திய மலையின் தேவதையான விந்தியா சிவபிரானை தனது பாவங்கள் போக்க வணங்கவே சிவபிரான் ஓம்காரேஸ்வரராகவும் அமேரேஸ்வரராகவும் இங்கு எழுந்தருளினார்.
இரண்டாவது வரலாற்றின் படி, மாந்தாதா என்ற அரசன் சிவபிரானைத் தொழவே அவனது தீவிரமான பக்தியை மெச்சி சிவபிரான் இங்கு எழுந்தருளினார்.
அடுத்த மூன்றாவது வரலாற்றின்படி, அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்து ஓம்காரேஸ்வரராக இங்கு எழுந்தருளினார்.
6
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் அமைச்சர் திரு சிவராஜ்சிங் சௌஹான் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலை திட்டத்தை அறிவித்தார். இத்துடன் சங்கரர் கண்காட்சி மற்றும் ஆசார்ய சங்கரர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அத்வைத வேதாந்தாவும் இங்கு நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 23000 கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான உலோகம் திரட்டும் வேலை நடைபெற்றது.
2022, ஜூன் 4ஆம் தேதி லார்ஸன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இந்த திட்டத்திற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.
இந்த சிலை சுமார் 500 வருடங்களுக்கும் மேலாக நீடித்து இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
7
மாந்தாதா பர்வதத்தில் தெற்கு நோக்கி நர்மதா நதியை நோக்கி இது அமைக்கப்பட்டுள்ளது. 54 அடி உள்ள பீடத்தின் மேல் 27 அடி உயரமுள்ள ஒரு தாமரை பீடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பீடமோ சிவப்புவண்ணக் கல்லில் அமைந்துள்ளது.
இதன் எடை 100 டன். இதில நூற்றுக்கணக்கான கலைஞர்கள், எஞ்ஜினியர்கள், சிற்பிகள் ஈடுபட்டனர். சீனாவில் உள்ள நான்செங்கில் இதற்கான உலோக வார்ப்பு செய்யப்பட்டது. மும்பை வழியாக கடல் மார்க்கமாக இது பத்திரமாக கொண்டு வரப்பட்டது.
சிலையின் எடை 100 டன். 75 அடி உயரமுள்ள மேடையில் இது நிறுவப்பட்டுள்ளது. 88% தாமிரம், 4% துத்தநாகம், 8% காரீயம்(டின்) கொண்டது இது. உள் அமைப்போ வலிமையான ஸ்டீலினால் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிலையின் அடியில் சங்கர் ஸ்தம்பம் உள்ளது. அதில் 32 மாடங்கள் ஆசார்ய சங்கரரை நினைவுறுத்தும்படி கற்சிற்பங்கள் மற்றும் மர ஸ்தூபங்களுடன் உள்ளன.
ஓவியர் வாசுதேவ காமத் இதற்கான வடிவமைப்பை நிர்மாணித்தார்.
இவருடன் பகவான் ராம்புரா என்பவரும் இணைந்து பணியாற்றினார்.
இத்துடன் பிரம்மாண்டமான கண்காட்சியும் அத்வைத இன்ஸ்டியூட்டும் அமைக்கப்படுவது பாரத தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைகிறது. 22.1 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவை அமைக்கப்படுகின்றன.
வாழ்த்துவோம். சங்கரரை வணங்கிப் போற்றுவோம்!
***