
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,777
Date uploaded in London – – 29 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு வரி சுபாஷிதங்கள்
அஹிம்சையே உயர்ந்த தர்மம்!
ச.நாகராஜன்
அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் வழங்கப்படுகின்றன. ஒரே ஒரு வரி தான், அதில் அடங்கியுள்ள கருத்துக்களை கீழே பார்க்கலாம். இதை நினைவு வைத்துக் கொள்வதும் சுலபம் தான்
1. அக்ரோதேன ஜயேத் க்ரோதம் |
அமைதியாக இருப்பதன் மூலம் பகையை வெல்.
2. அக்ஷீணோ வித்தத: க்ஷீணோ வ்ருத்தஸ்து ஹதோ ஹத: |
செல்வத்தை இழந்ததனால் வறுமையோடிருக்கும் ஒருவன் நிஜத்தில் ஏழை இல்லை; ஆனால் எவன் ஒருவன் தன் நல்ல குணத்தை இழக்கிறானோ அவனே நிஜத்தில் ஏழை.
3. அஞ்ஞாத குலசீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் |
எவன் ஒருவனுடைய குலம் மற்றும் வசிப்பிடம் ஆகியவை தெரியாமல் இருக்கிறதோ அவனுக்கு வசிக்க இடம் கொடுக்கக் கூடாது.
4. அதி சர்வத்ர வர்ஜயேத் |
எதிலும் அளவுக்கு அதிகமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. அர்த்தோ கடோ கோஷமுபைதி நூனம் |
பாதி நிரம்பியிருக்கின்ற குடம் அதிக சத்தம் போடும்!
நிறைகுடம் தளும்பாது என்ற தமிழ்ப் பழமொழியையும்,
Empty vessel creates more noise என்ற ஆங்கில பழமொழியை இங்கு ஒப்பு நோக்கலாம்.
6. அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் |
ஒருவன் தான் செய்த செயல்களின் நல்லது, கெட்டவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.
7. அஹிம்ஸா பரமோ தர்ம: |
அஹிம்சையே உயர்ந்த தர்மம்.
8. ஆர்ஜவம் ஹி குடிலேஷு ந நீதி: |
கெட்டவரிடம் நேர்மை என்பது சிறந்த வழி ஆகாது.
9. ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹான் ரிபு: |
சோம்பலே ஒருவனின் உடலுக்கான மகத்தான எதிரி.
10. ஆஹு: சாப்தபதி மைத்ரி |
ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே நட்பு உறுதி ஆகி விடுகிறது.
11. ஈஸ்வரேச்சா பலீயஸி |
ஈஸ்வரனுடைய் இச்சை (விதி) மிகவும் வலிமையுடையது.
12. உதாரசரிதாநாந்து வசுதைவ குடும்பகம் |
உதாரபுருஷர்களுக்கு உலகமே குடும்பம்.
13. ருண சத்ரு வ்யாதிஸ்வஷேஷ: கர்தவ்ய: |
கடன், எதிரி, வியாதி ஆகிய மூன்றையும் முற்றிலுமாக ஒருவன் ஒழிக்க வேண்டும்.
14. ஏகசித்தே த்வயோரேவ கிமசாத்யம் பவேதிதி |
இருவர் ஒரே மாதிரி நினைத்து விட்டால் எந்தக் காரியம் தான் அசாத்யம் (செய்யமுடியாததாக) ஆகும்!
15. ஏகமேவ வ்ரதம் ச்லாக்யம் ப்ரஹ்ம்சரியம் ஜகத்ரயே |
மூன்று உலகங்களிலும் சிலாகிக்கப்படுவது பிரம்மசரியமே!
16. க: பர: ப்ரியவாதினாம் |
பிரியமான சொற்களைச் சொல்பவரை விட வேறு யார் உயர்ந்தவர்கள்!
17. கதாபி கலு பாபநாமலமஸ்ரேயஸே யத: |
பாவிகளின் கதைகள் கூட கெடுதி விளைவிப்பவையே.
18. கஷ்டாத்கஷ்டதரம் க்ஷுதா |
கஷ்டத்திலும் கஷ்டம் பசியே!
19. காமதுராணாம் ந பயம் ந லஜ்ஜா |
காமவெறியுடையவர்களுக்கு பயமும் கிடையாது; வெட்கமும் கிடையாது!
20. குரூபதா சீலதயா விராஜதே |
அழகற்ற உருவம் நல்ல குணத்தால் சரி செய்யப்படலாம்.
21. க்ஷமாதுல்யம் தபோ நாஸ்தி |
பொறுமைக்குச் சமமான தவமே கிடையாது.
22. கலேன மைத்ரி ந சிரேண திஷ்டதி |
கெட்டவருடனான நட்பு நீடித்து நிலைக்காது.
23. கதஸ்ய சோசனம் நாஸ்தி-கதம் ந சோசாமி |
கடந்ததை நினைத்து அழுவதால் பயன் ஒன்றும் இல்லை.
24. குணீ குணம் வேத்தி ந குணம் வேத்தி நிர்குண: |
நல்ல குணங்களைக் கொண்டவர்களை நல்ல குணம் கொண்டவர்களே அறிவர்; கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் அறிய மாட்டார்கள்.
25. க்ருஹே சேன்மது விந்தேத் கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத்?
வீட்டிலேயே தேன் கிடைக்கும் போது ஒருவன் மலையை நோக்கிச் செல்வது ஏன்?
***