
Post No. 12,781
Date uploaded in London – – 30 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள்
ச.நாகராஜன்
விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் நூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் உள்ள பாடல்களையும் அவை கூறும் அற்புதமான வரலாறுகளையும் இது வரை பார்த்து வந்தோம்.
ஆரம்பத்தில் உள்ள சில பாடல்கள் இது வரை தரப்படவில்லை.
அவற்றை இங்கு காணலாம்.
பாடல்
பாயிரம்
காப்பு
அறுசீரடியாசிரிய விருத்தம்
பூமலி செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி
நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்
கோமலி யுருவ மூன்று கூறிரு திணைபொ ருந்தித்
தேமலி மருப்பொன் றேந்து தேவனைப் பணிகு வேமால்
பாடலின் பொருள் : நல்ல மனமுடையவர் தொடங்கிய செயல்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்கியும், அச்சமான கொடிய உள்ளத்தினர் ஆசை கொள்ளும் தொழில்களுக்குத் தடையை உண்டாக்கியும், மேன்மையுள்ள (பூதக்கால் – தெய்வ உடல் – யானைத் தலை) மூவகை வடிவில் (அஃறிணை – உயிர்திணை) இரு திணை பொருந்தி ஒற்றைக் கொம்பராக விளங்கும் மூத்த பிள்ளையாரை வணங்குவாம்.
அவையடக்கம்
கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்
மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீரு மோராதேன்
திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம் மண்டலத்தின்
அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கி லறிஞ ரிகழாரே
பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த விரிந்த பூமியில் உள்ள, கண்டங்கள் மற்றும் தீவுகள் முதலிய பிரிவுகளை, நிற்கும் சுவரில் கோடிட்டு எழுதிக் களிக்கின்ற அறியாச் சிறுவர்களைப் போல, கொங்கு மண்டலத்தின் வளமும் சிறப்பும் அறியாதவனாகிய எளியேன் (அவற்றை) நன்றாகக் கேட்டுப் பார்த்துச் சொல்ல வல்லார் முன் அக்கொங்கு மண்டலத்தின் முறையான கதைகளடங்கிய சதகம் என்னும் பிரபந்தத்தை இயற்றுவேனேல் அதைத் தவறு என்று அறிஞர்கள் இகழ மாட்டார்கள்.
இதை கம்பரது கீழ்க்கண்ட பாடலுடன் ஒப்பு நோக்கலாம்:
“அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையிற் கீறிடிள் தச்சரும் காய்வரோ!”
ஆக்கியோன்
திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்
வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்
வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ் நின்ற
கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே
பாடலின் பொருள் : வரியை உடைய குயில்கள் கூவுகின்ற அசோக மரத்தினடியில் மூன்று குடைகள் நிழலைச் செய்ய வீற்றிருந்தருளும் அருகதேவனைச் சிந்தித்து இருக்கும் கார்மேகக் கவிஞன், கொங்கு மண்டலத்தின் சிறந்த சரிதங்களைத் தெரிந்து கொள்வாருக்கு வருத்தம் நேராதபடி எளிதாகக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலைச் சொன்னான்.
சிந்தாமணியில் வரும் கீழ்க்கண்ட பாடலை இங்கு ஒப்பு நோக்கலாம்:
முழாத்தி ரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்
வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்
குழாத்தொடு மிரைகொளக் குளிர்ந்து கூங்குயில்
விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே
பாயிரம் முற்றும்
நூல்
நாடு
கட்டளைக் கலித்துறை
பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்
நற்பய னுற்றுச் சுகித்திடுமென்ன நவிற்றுபழஞ்
சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு
வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே
– பாடல் 1
பாடலின் பொருள் : பொலிவு மிகுந்த ‘கொங்கு நாடு செழித்தால் இந்த பூமியிலுள்ள எந்த நாடும் நல்ல பலனைப் பெற்றுச் சுகம் அடையும்’ என்று சொல்கின்ற பழமொழிக்கு இணங்க மாடு கன்றுகள் விருத்தி கொண்டது கொங்கு மண்டலம் ஆகும்.
‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது காலம் காலமாக வழங்கி வரும் ஒரு பழமொழி.
எல்லை
மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு. மண்டலமே
– பாடல் 2
பாடலின் பொருள் : கிழக்கில் மதிற் கோட்டைக் கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலம் ஆகும்.
இதை விளக்கும் வெண்பா ஒன்றும் உண்டு:
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்
குடக்குப் பொறுப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
குளிர்த்தண் டலையளவு கொங்கு
நாடு – இணைநாடு
நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம் பொருந்தத்
தோலா மொழிக டிகழ்நா வலரென்றுச் சுகம் பொருந்த
நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்
மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே
– பாடல் 3
பாடலின் பொருள் : பல கலைகளாகிய கடலை உண்டு சுவை உடையதாய் தோல்வி பெறாது பேசவல்ல நாவலர்கள் எந்த நாளும் இன்பம் நிறைந்து வாழும் இருபத்து நான்கு நாடுகளிலும், அவற்றைச் சூழ்ந்த இணைநாடுகளிலும் முருகவேள் கோயிலும், திருமால் கோயிலும், சிவாலயங்களும் நிறைந்துள்ளது கொங்கு மண்டலம்.
24 நாடுகள் பின்வருமாறு :
பூந்துறை நாடு தலையனாடு வாழவந்தி நாடு
தென்கரை நாடு தட்டயனாடு அண்ட நாடு
காங்கேய நாடு பூவாணிய நாடு வெங்கால நாடு
பொன்கலூர் நாடு அரையனாடு காவடிகனாடு
ஆறை நாடு ஒருவங்க நாடு ஆனைமலை நாடு
வாரக்கனாடு வடகரை நாடு இராசிபுர நாடு
திருவாவினன்குடி நாடு கிழங்கு நாடு காஞ்சிக்கோயினாடு
மணனாடு நல்லுருக்கனாடு. குறுப்பு நாடு
6 இணைநாடுகள் :
பருத்திப்பள்ளி நாடு விமலை நாடு சேல நாடு
ஏழூர் நாடு தூசூர் நாடு. இடைப்பிச்சனாடு
தலம்
செஞ்சொற் கரைசை திருவானி கூடல் திருமுருகர்
தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே
வெஞ்சனற் கூடல்செங் குன்றூ ரறப்பளி வெண்ணெய்மலை
மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே
– பாடல் 4
பாடலின் பொருள் : திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி, அவிநாசி, குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அறப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர் முதலிய திருப்பதிகள் சேர்வது கொங்கு மண்டலம்.
மலை
கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்
வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய்மலை
அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யாவகிரி
வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே
– பாடல் 5
பாடலின் பொருள் : கொல்லி மலை, வைகைப் பொன்மலை, அலைவாய் மலை, பழநி மலை, பொன்னூதி மலை, கொங்கணவர் மலை, சேர்வராயன் மலை, ஓதியூர் மலை, வராக மலை, தலை மலை, வெண்ணெய் மலை, சென்னி மலை, கஞ்ச மலை, வெள்ளி மலை, நாக கிரி, ஆனை மலை ஆகிய மலைகள் சூழ்வது கொங்கு மண்டலம்.
– அடுத்த கட்டுரையுடன் இந்த நெடுந்தொடர் முடிகிறது
***