நடாஷா  டெம்கினா! அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 2 (Post No.12,806)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,806

Date uploaded in London –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 2 

நடாஷா  டெம்கினா

 ச.நாகராஜன்

நடாஷா நிகோலயிவ்னா டெம்கினா (Natala Nilolayevna Demkina) என்ற பெண்மணி 1987ஆம் ஆண்டு ரஷியாவில் சரன்ஸ்க் என்ற நகரில் பிறந்தவர். ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்த இவர் அலெக்ஸாண்டர் புஷ்கின் எழுதியவற்றை ஒரு வயதிலேயே படிக்க ஆரம்பித்தார். மூன்று வயதில் நன்றாகப் படிக்க வந்து விட்டது.

பத்தாம் வயதில் இவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலிருந்து மனித உடலின் உள்ளே உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தெளிவாகத் தன்னால் பார்க்க முடிகிறது என்றார் அவர்.

அவரது 17ஆம் வயதில், 2004ஆம் ஆண்டு, டிஸ்கவரி சேனல் அவரைப் பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தைத் தயாரித்தது.

அதில் அவர் தன்னைப் பற்றி விளக்கமாகக் கூறினார் :

“எனக்கு இரண்டு விதமாகப் பார்க்க முடிகிறது. முதல் பார்வை மற்ற எல்லோரையும் போலச் சாதாரணமாக அனைத்தையும் பார்க்கும் பார்வை. அடுத்த பார்வை மருத்துவ பார்வை.  ஒரு உடலை மருத்துவ ரீதியில் பார்க்க முடியக்கூடிய அனாடமிகல் பார்வை. ஒருவரின் உடலில் உள்ள இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் என்னால் பார்க்க முடிகிறது. அவற்றின் இயக்கத்தையும் என்னால் பார்க்க முடிகிறது”.

ஆனால் அவரால் தனது உடலைப் பார்க்க முடியவில்லை. ஒருவர் தன் முதுகிற்குப் பின்னால் மறைத்திருக்கும் எந்தப் பொருளையும் அவரால் பார்க்க முடிவதில்லை. இரவிலும் அவருக்கு இந்தப் பார்வை போய் விடுகிறது.

முதலில் விளையாட்டாக தன் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த பார்வையைச் சொல்லப் போக, நாளடைவில் ஏராளமான நோயாளிகள் அவரிடம் வர ஆரம்பித்தனர். அவர் நோய் பற்றிய அறிகுறிகளை சரியாகக் கண்டறியவே பலரது உயிர் காப்பாற்றப்பட்டது.

இக்னார் மோனிசெவ் (Ignor Monichev) என்ற ஒரு பத்திரிகையாளர் அவரிடம் வந்தார். தனது எந்தக் கை உடைந்த கை என்று அவர் கேட்டார்.  90 விநாடிகளில் அவரது இடது கையைச் சுட்டிக் காட்டிய டெம்கினா அதுவே உடைந்த கை என்றார்.

வியாதியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஒரு வியாதியும் இல்லை என்றனர். ஆனால் டெம்கினா அவருக்கு இடது பக்க நுரையீரலில் மேல் பகுதியில் கான்ஸர் செல்கள் உள்ளதைக் கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார்.

இன்னொரு நோயாளியை ஒரு வருடமாக ஒரு மருத்துவமனையில் வைத்து நுரையீரல் காச நோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் ஒருவிதமான முன்னேற்றமும் இல்லை. டெம்கினா அவரை ஒரு பார்வை பார்த்தார். அவருக்கு காசநோய் இல்லை என்றும் வேறொரு நோய் இருப்பதாகவும் அதன் பெயர் தனக்குத் தெரியவில்லை என்றும் தான் பார்ப்பதை வரைந்து காட்டுவதாகவும் கூறினார். படமும் வரையப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்த டாக்டர்கள் அந்த நோயை சர்காய்டோஸிஸ் (Sarcoidosis) என்று கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைத் தர ஆரம்பித்தனர். அவரும் நோயிலிருந்து மீண்டார்.

ஆரம்பத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் வீதம் பார்த்து வந்த டெம்கினா அவர்களிடம் நன்கொடை மட்டும் கேட்டு வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து அதை ஒரு மருத்துவ பள்ளிக்கு நிதியாக அளித்து வந்தார்.

ரஷிய பத்திரிகையான பிராவ்தா மற்றும் இஸ்வெஸ்தியா அவரைப் பற்றிய செய்திகள் வெளியிட அவர் உலக அளவில் பிரபலமானார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான  ‘தி சன்’ அவரை இங்கிலாந்திற்கு அழைத்தது. பிரபல ரிபோர்ட்டர் பெண்மணியான  பிரினாய் வார்டன் (Brinoy Warden) ஒரு கார் விபத்தில் அப்போது சிக்கி வீல் சேரில் அமர்ந்திருந்தார். அவர் பிரினாயைப் பார்த்தவுடன் எங்கெல்லாம் அவர் காயப்பட்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார். மெடல் பின்கள் உடலில் செருகப்பட்டிருந்ததைக் கூட அவர் கூறி விட்டார்.

டிஸ்கவரி சேனல் நியூயார்க்கில் அவரை ஒரு சோதனைக்கு உட்படுத்தியது. இதில் ஏழு சோதனைகளில் நான்கில் அவர் தேறினார்.

2005இல் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் அவர் மீது சோதனை நடத்த அவரை அழைத்தது. ஏழு நோயாளிகளின் வியாதிகளைப் பற்றிய சோதனை இது. ஏழு பேரின் நோய்களையும் அப்படியே துல்லியமாக டெம்கினா கூறி விட்டார்.

மாஸ்கோ பல்கலக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேரத் துடித்தார் டெம்கினா. அவரைப் பற்றிய அதிகச் செய்திகள் கிடைக்கவில்லை.

அவரது இணையதளம் இப்போது முடங்கிக் கிடப்பதால் அவர் என்ன செய்கிறார் என்பதை உலகம் அறிய முடியவில்லை.

அதிசயமான அதீத உளவியல் ஆற்றலைக் கொண்டவர் நடாஷா டெம்கினா என்பதில் ஐயமில்லை.

**

Leave a comment

Leave a comment