
Post No. 12,821
Date uploaded in London – – 11 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 30
கோவில் எண்–30 திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தொடர்ச்சி
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் பற்றிய மேலும் சில சுவையான விஷயங்களை ஆராய்வோம்.

இது 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ வழிபாட்டிடங்களில் ஒன்று
பாகவத புராணம் உள்பட பல புராணங்களில் கோவிலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஸ்தல வரலாற்றின்படி கலியுக ஆண்டு 950.ல் இந்தக் கோவிலை திவாகர முனிவர் என்பவர் கட்டினார் . அவருடைய பூஜைக்குரிய சாளக்ராம கல்லை ஒரு குழந்தை வாயில் போட்டு குதப்பியபோது முனிவர் கண்டிக்கவே அந்தக் குழந்தை ஓடி மறைந்தது; தன்னைக் காட்டில் வந்து காணும்படியும் சொன்னதாம். அங்கு அவர் சென்றபோது பிரம்மாண்டமான அனந்த பத்ம நாப சுவாமி உருவத்தைக் கண்டாராம்.
லட்ச தீபமும் முற ஜபமும்
மார்த்தாண்ட வர்மா (1729) சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தை ஆண்டார் ; அவர் பெரிய ராஜ தந்திரி; போர் வீரர்; சோம்பேறிகளாக வாழ்ந்த குறுநில மன்னர்களை யுத்தத்தில் தோ கடித்து நாடு பிடித்தார் 1750 ஆம் ஆண்டுக்குள் நாகர் கோவில் முதல் கொச்சி வரையுள்ள நிலப்பரப்பு அவரது ஆட்சிக்குள் வந்தது.
. தன்னுடைய ஆட்சியில், போரில் நடந்த, பாவங்களை நீக்க அவர் தன்னுடைய செங்கோல், கிரீடம், வாள் எல்லாவற்றையும் கோவிலில் இறைவன் பாதங்களில் சமர்ப்பித்து மீண்டும் எடுத்துக் கொள்ளுவார். தான் இறைவனின் சார்பில் ஆளும் அடியார் என்பதைக் குறிக்க பத்மமனாப தாச என்று தம்மை அழைத்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்தோரும் இதே வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்
தமிழ் நாட்டிலிருந்து நிறைய பிராமணர்களை வரவழைத்து ஆதரித்தார். இது மலையாளி நம்பூதிரிகளுக்கும் போத்திகளுக்கும் வருத்தம் அளிக்கவே ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை எல்லோரையும் அழைத்து ரிக், யஜுர், சாம வேதத்தை எட்டு வாரங்களுக்கு பாராயணம் செய்ய வைத்தார் . ஒவ்வொரு வேதமும் எட்டு முறை பாராயணம். பிராமணர்களுக்கு பெரும் விருந்து அளித்தார் ; கோவிலில் லட்ச தீபம் ஏற்ற வைத்தார். வேத பிராமணர்களுக்கு விருந்தோடு விருதுகளையும் வழங்கினார். 56 நாள் ஜபம் லட்ச தீபத் திருநாளில் நிறைவு அடையும்; அன்றைய தினம் மகர சங்கராந்தியாக இருக்கும்.இவை தவிர அரை ஆண்டுக்கு ஒரு முறை பத்ர தீபம் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் எண்ணெய் தீபங்களும் இப்போது மின்சார விளக்குகளும் எரிகின்றன. இப்போது ஊட்டுப் புராவும் சுருங்கிவிட்டது. பிரம்மாண் டமான அண்டாக் களையும் பானை களையும் மட்டும் காணலாம்.
ஏழு நிலைக் கோபுரம்
அனந்த அல்லது ஆதி சேஷன் என்னும் பாம்பின் மேல் பத்மநாப சுவாமி / பெருமாள் பள்ளிகொண்டதால் திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.
ஏழு நிலைக் கோபுரம் ; தமிழ் நாட்டுப் பாணியில் இருக்கும். கோவிலின் தோற்றம் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை; கல்வெட்டுச் சான்று 1729ல் நடந்த திருப்பணிகளையே குறிப்பிடுகிறது
1200 சாளக்ராம கற்களை கடுசர்க்கரா மூலம் பிணைத்து தற்போதைய விக்கிரகத்தை உருவாக்கினார்கள்; கடு சர்க்கர என்பது சுண்ணாம்பு, கருங்கல், வெல்லப்பாகு, கடுகு கலவை ஆகும்.
பாம்பின் மீது யோக நித்திரையில் படுத்திருக்கும் பெருமாளை மூன்று துவாரங்கள்/ வாசல்கள் வழியில் தரிசிக்கலாம். பெருமாளுக்கு முன்னர் ஒரே கல்லிலான ஒற்றைக்கல் மண்டபம் இருக்கிறது.
பெருமாளின் இடது கையில் தாமரை மலரும் வலது கரம் தொங்கும் நிலையிலும் உள்ளன . ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பக்கங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருக்கிறார்

கோவிலைப் பற்றிய புள்ளி விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்; 6000 கட்டிட ஊழியர்கள், 4000 மேஸ்திரிகள் 100 யானைகள் உதவியுடன் 7 மாதம் பணியாற்றி கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி கற்சுவரை எழுப்பினர்; கோவில் 7 ஏக்கர் பரப்பில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி ஒவ்வொரு கோபுர வாசல் வழியே வரும் . கோவிலுக்கான த்வஜஸ்தம்ப / கொ டி மரம் 48 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து பூமியில் படாமல் யானைகள் மூலம் கொண்டுவரப்பட்டது. கொடி மரத்தை தங்கத் தகடுகள் மூலம் போர்த்தியிருக்கிறார்கள்.
கோவில் தூண்களில் அழகிய புராண சிற்பங்கள், கையில் விளக்கு ஏந்திய தீப ஸ்திரீக்கள் செதுக்கப்பட்டுள்ளன.ஓவியங்களும் உள்ளன.
கிருஷ்ணர், க்ஷேத்ரபாலர், சாஸ்தா, நரசிம்மர், வியாசர் ,சிவன், கணேசர் , ராமர், சீதா, லட்சுமணர், முதலிய பல சந்நிதிகளும் கோவிலுக்கு உள்ளன.
கோபுரத்தின் உயரம் 100 அடி. குலசேகர மண்டபத்திலுள்ள சிற்பங்கள் எல்லோருடைய கண்களையும் கவரும். அங்கு சிவன், விஷ்ணு, லட்சுமி உருவங்களை செதுக்கியுள்ளனர்.
திருவிழாக்கள்
மீனம் மாதத்தில் ஒன்றும் (மார்ச்-ஏப்ரல் ) துலாம் (செப்டம்பர் – அக்டோபர்) மாதத்தில் ஒன்றும் ஆக இரண்டு முக்கிய விழாக்கள் நடைபெறும். ஒவ்வொன்றும் பத்து நாட்களுக்கு நடக்கும்.
xxxx

பொக்கிஷம் பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தி
இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.
கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விவரங்களை மீண்டும் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
—subham—
Tags- கோவில் எண் 30 , திருவனந்தபுரம், அனந்த பத்மநாப சுவாமி கோவில் தொடர்ச்சி , லட்ச தீபம், முற ஜபம்
Athmanathan Seetharaman
/ December 12, 2023Kindly clarify why Lord Padmanabha holds his right hand over a Shiva linga?