
Post No. 12,827
Date uploaded in London – – 13 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை
நோய், சிகிச்சை, வைத்தியர், நோயாளி பற்றி ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்!
ச.நாகராஜன்
வைத்தியரின் நான்கு தகுதிகள்
வைத்தியருக்குத் தேவையான அடிப்படையான தகுதிகள் நான்கு.
(குண சதுஷ்டயம் என்று கூறப்படுவது) அவையாவன:
1) ஸ்ருதே பர்யவதாதத்வம் – மருத்துவம் பற்றிய மிகச் சிறப்பான அறிவு
2) பஹூஷோ த்ருஷ்டகர்மதா – மிக மிக அதிகமான செயல்முறை அனுபவம்
3) தாக்ஷ்யம் – திறமை
4) சௌசம் – சுத்தம்
சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-
ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுஷோ த்ருஷ்டகர்மதா |
தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம் ||
– சரக சூத்ரம் IX -6
நோயாளியிடம் வைத்யரின் நான்கு அணுகுமுறைகள்
ஒரு நோயாளியிடம் நல்ல ஒரு வைத்தியர் அணுக வேண்டிய முறைகள் நான்கு உண்டு. அவையாவன:
1) மைத்ரி – நட்புடன் 2) காருண்யம் – தயையுடன் 3) ப்ரீதி – அன்புடன் அணுகுதல் 4) உபேக்ஷணம் – இரக்கத்துடன்
சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-
மைத்ரிகாருண்யமார்தேஷு ஷக்யே ப்ரீதிருபேக்ஷணம் |
ப்ரக்ருதிஷ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திசதுர்விதா: ||
– சரக சூத்ரம் IX -26
நோய் பகுப்பாய்தல் நான்கு விதம்
ஒரு வைத்தியர் நோயை பகுத்து ஆராயும் முறைகள் (Diagnosis)
நான்கு. அவையாவன:
1) ஆகம: – கேட்டல் (நோயாளியிடம் அவருக்கு என்ன செய்கிறது என்று நுணுகிக் கேட்டறிதல்)
2) வ்யவஹாரம் – அவருடன் உரையாடுதல் (நோய் சிகிச்சையை ஆரம்பிக்கு முன்னர் நோய் மற்றும் நோயாளி பற்றி நன்கு அறிய நட்பு கலந்த உரையாடல் அவசியம்)
3) சிகித்ஸா – சிகிச்சை
4) நிர்ணயா – சிகிச்சை பற்றி முடிவு கட்டுதல்
ஆகம: ப்ரதமம் கார்யோ வ்யவஹாரபதம் தத: |
சிகித்ஸா நிர்ணயச்சைவ தர்ஷனம் ஸ்யாச்சதுர்விதம் ||
– நாரத ஸ்மிருதி I – 36
வியாதிகள் நான்கு விதம்
பொதுவாக வியாதிகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
அவை:
1) ஆகந்தவ: – தொற்று வியாதி
2) சாரீர: – உடல் சம்பந்தமானது
3) மானஸா: – மனம் சம்பந்தப்பட்டது
4) ஸ்வபாவிகா: – இயற்கையானது
இதை சுஸ்ருதர் இப்படி விவரிக்கிறார்:
துக்க சம்யோகா வ்யாத்யய: சதுர்விதா: – ஆகந்த்வ: ஷாரீரா: மானஸா: ஸ்வாபாவிகாஷ்ரோதி ||
– சுஸ்ருதர் சூத்ரம் I – 23
உடல்பயிற்சியின் லக்ஷணம் நான்கு
உடல்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அறிகுறிகள் (வ்யாயாம லக்ஷணம்) நான்கு விதமாகும்.
அவை :
1) ஸ்வேதா – வியர்வை
2) ஸ்வாச வ்ருத்தி – ஆழ்ந்த சுவாசம்
3) காத்ர லாகவம் – உடல் லேசாக ஆதல்
4) ஹ்ருதய உபரோத: – இதய ஒடுக்கம் (Inhibition of the heart)
இதை சரகர் இப்படி விவரிக்கிறார்:
ஸ்வேதாகம: ஸ்வாஸவ்ருத்திர்காத்ராணாம் லாகவம் ததா |
ஹ்ருதயாத்யுபரோதஸ்ச இதி வ்யாயாமலக்ஷணம்
– சரக சூத்ரம் VII – 33
எந்த விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது?
ஐந்து விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது. யார் அவர்கள்? இதோ விவரணம்:
1) குசேல: – சரியாக உடை அணியாமல் இருப்பவர்
2) கர்கஸ: – முரட்டுத்தனமாக இருப்பவர்
3) ஸ்தப்தா: – பிடிவாதமாக இருப்பவர் (Stubborn)
4) க்ராமணீ – வக்கிரமானவர் (pervert)
5) ஸ்வயமாகதா – கூப்பிடாமல் தானாகவே வருபவர்
இந்த ஐந்து விதமான வைத்யர்களை பூஜிக்க – மதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதைப் பற்றித் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:
குசேல: கர்கஷ: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத: |
பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்தரிஸ்மா அபி ||
உடல் அங்கங்களுக்குரிய தேவதைகள்!
மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திற்கும் உரிய தேவதை ஒன்று உண்டு. அதைத் தொழுவது நமக்கு நல்லது.
ஐந்து முக்கிய அங்கங்களுக்கு உரிய தேவதைகள் இவை:
1) வாக் – பேச்சுக்கு அக்னி
2) பாணி – கைகளுக்கு இந்திரன்
3) பாயு – ஜனன உறுப்புகளுக்கு விஷ்ணு
4) குடா – குதத்திற்கு சூர்யன்
5) சிஸ்னா – ஆண் ஜனன உறுப்பிற்கு ப்ரஜாபதி
இப்படி நமது நூல்கள் நோய், டாக்டர், சிகித்ஸை முறை ஆகிய அனைத்தும் பற்றி நுட்பமாக விளக்குகின்றன. அத்துடன் மருந்துகள், அவற்றைத் தயாரிக்கும் விதம், இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், அவற்றின் பயன்கள் ஆகியவை பற்றியும் ஏராளமான நூல்கள் விவரிக்கின்றன.
இவை அனைத்தையும் படித்து ஓர்ந்து அதைத் தன் சிகிச்சை முறையில் பயன்படுத்தும் அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் ஆயிரக் கணக்கில் பாரத தேசத்தில் பண்டைய காலத்தில் இருந்தனர் என்பது நிஜமான ஒரு உண்மை!
***