
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,828
Date uploaded in London – – 13 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 32
கோவில் எண்–31 தொடர்ச்சி
31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில் பற்றி மேல் விவரம்
ஸ்ரீ வில்வாத்ரி மஹாத்ம்யயம் என்ற சம்ஸ்க்ருத நூலில் 18 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதன்படி கிழக்கேயுள்ள பெருமாள் கோவில்தான் முதல் கோவில் ; பரசுராமர் ஸ்தாபித்தது ; இதை இப்போது லட்சுமணர் கோவில் என்கிறார்கள்
ஆமலகன் கதை
மேற்கு நடாவில் உள்ள பெருமாள் ஸ்வயம்பூ / தானாகாத் தோன்றியது. மனிதர்கள் வடிவமைக்கவில்லை இது பற்றியும் ஒரு கதை இருக்கிறது . இதுவும் வில்வாத்ரி மஹாத்ம்யத்தில் உள்ள கதைதான். காஸ்யப பிரஜாபதியின் மகன் ஆமலகன் மஹாவிஷ்ணுவை வேண்டி கடுந்தவம் இருந்தான் இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது; யாராவது கடும் தவம் புரிந்தாலோ அஸ்வமேத யாகங்கள் செய்தாலோ , தன்னுடைய பதவியைப் பறிக்கத்தான் அவர்கள் தவம் இருக்கிறார்கள் என்று அஞ்சுவான். உடனே தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோரை அனுப்பினான். அவர்கள் டான்ஸ் ஆடியும் கூட ஆமலகன் ஆடாது அசங்காது தவம் செய்தான். உடனே ஆடல் அழகிகள் இந்திரனுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். ஆமலகனுக்கு பதவி ஆசை ஏதும் கிடையாது. அவன் உண்மை பக்தன் என்று. ரிப்போர்ட்டைப் படித்த இந்திரனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அடுத்த படியாக அசுரர்கள் பயந்தார்கள். அவர்கள் ஆமலகன் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் கண்களைத் திறக்கவே அசுரர்கள் எரிந்து கல்லானார்கள்; அந்த இடத்தை இப்போதும் ராக்ஷஸ பாறை என்கிறார்கள் .
ஆமலகன் தீவிர தவத்தை மெச்சி விஷன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இன்றுபோல் என்றும் தரிசனம் தருக என்று ஆமலகன் சொன்னவுடன் தன்னுடைய சக்தியை சிலை மீ து பிரயோகித்தார் அதுவே மேற்கு நோக்கி நிற்கும் ராமர் அல்லது மஹாவிஷ்ணு கோவில் எனப்படுகிறது.
கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் இது ஒப்பற்றது லட்சுமணனுக்கு இங்குள்ள ஒன்றைத் தவிர வெண்ணி மலாவில் ஒரு கோவில் இருக்கிறது. கோட்டயத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கோவில் பிரபலம் அடையவில்லை.
இங்கு கணபதி, சாஸ்தா, சிவன்-பார்வதி ஆகிய மூர்த்திகளும் இருக்கிறார்கள். கோவில் முழுதும் தரையில் கற் பலகைகள் வேயப் ப்பட்டுள்ளன .வட புறத்தில் குளமும் கோவிலுக்குள் கிணறும் இருக்கின்றன.

புனர் ஜனனி குகை
கோவிலிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் நீளமான புனர் ஜனனி குகை இருக்கிறது இதை பரசுராமர் வேண்டுதலின்பேரில் விஸ்வகர்மா உண்டாக்கினார். இது வழியாகச் செல்வோருக்கு மறு ஜென்மம் கிடையாது . ஆயினும் ஆண்டுக்கு ஒரு முறையே இதைத் திறப்பார்கள் ; நவம்பர்- டிசம்பரில் வரும் குருவாயூர் ஏகாதசியன்று பக்தர்கள் குகைப் பயணம் செய்கிறார்கள் ; ஏனைய நாட்களில் இங்கு தீய சக்திகள் உலவுவதாக மக்கள் சொல்லுவர்.
இந்தக் குகை மேடு பள்ளம் நிறைந்தது.சில இடங்களில் மிகவும் குனிந்தும் ஊர்ந்தும் செல்லவேண்டும். சில இடங்கள் மிகவும் இருட்டானவை; மூச்சு விடுவதும் சிரமம்; ஆயினும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் ராம நாமம் சொல்லிக்கொண்டே முன்னேறுவார்கள்; குகையைக் கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். குகைக்கு வெளியே வந்தவுடன் பாப நாசினி, பாதாள தீர்த்தம் அம்பு தீர்த்தம்,கொம்பு தீர்த்தம் ஆகியவற்றில் குளிப்பார்கள்.
கேரள கங்கை
கேரளத்துக்கு பரசுராமர் கங்கை நதியைக் கொணர்ந்ததாகவும் அதுவே பரதப் புழா என்னும் நதி என்றும் சொல்லுவார்கள்; அதை மெய்ப்பிக்கும் வகையில் திரு வில்வமலா, திருச்சிக்குழி, தீர்த்தலா, திருநாவாயி, திருமி ட்டக்கோடு ஆகிய புனித தலங்கள் நதிக்கரை நெடுகிலும் இருக்கின்றன. ; இவை தவிர மேலும் பல சிவ, விஷ்ணு கோவில்களும் எதிர்க்கரையில் இடம்பெறுகின்றன. காசியில் மணிகர்ணிகா படிக்கட்டு எவ்வளவு மகிமை பொருந்தியதோ அவ்வளவு மகிமை மிக்கது திருவில்வ மங்களா (பரதப் புழா) நதித்தித்துறை .
பாண்டவ சகோதரர்களும் குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் நீத்தார் கடன் நிறைவேற்ற வியாசரின் ஆலோசனைப்படி இங்கு வந்து பித்ரு கடன்களைச் செய்தனராம் ; அவர்களும் சோமேஸ்வரம், ஐவர் மடம் , கோத்தகுருச்சி ஆகிய கோவில்களை நிர்மாணித்ததாக ஐதீகம்.
ஏகாதசி திருவிழா
கும்ப மாத ஏகாதசி விழாதான் பெரிய பண்டிகை பிப்ரவரி – மார்ச்சில் வரும் ஏகாதசி, அதற்கு முன்னர் அஷ்டமி நவமி நாட்களில் விளக்கு அலங்காரம் நிராமாலா / மாலை அலங்காரம், யானை ஊர்வலம் நடக்கும். ஏகாதசி அன்று பத்தர்கள் உண்ணாவிரதம் இருந்து இரவு முழுதும் கண்விழித்து பெருமாள் நாமத்தைக் சொல்லுவார்கள் .
ஒரு காலத்தில் கொச்சி மகாராஜா, கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்), திருவனந்தபுரம் மஹாராஜா ஆகியோர் ஆளுக்கு ஒரு நைவேத்தியம் படைக்கும் பணியைச் செய்து வந்தார்கள். தற்காலத்தில் அவை நடைபெறாவிட்டாலும் பெருகி வரும் பக்தர் எண்ணிக்கை கோவிலின் புகழைப் பரப்பி வருகிறது.
திப்பு சுல்தான் தாக்குதல்
கர்நாடகத்திலும் கேரளத்திலும் திப்புவின் துலுக்கப்படைகள் நிறைய கோவிலைத் தாக்கி அழித்தன அல்லது சேதப்படுத்தின. 1789ம் ஆண்டில் திருவில்வமங்கலா கோவிலைத் தாக்கிய முஸ்லீம் படைகள் அதை முக்கால் வாசி அழித்துவிட்டன ; அவரது நட்பு மன்னரான கொச்சி மஹாராஜா கோவில் அது என்று தெரிந்தவுடன் கர்ப்பக்கிரகத்தை மட்டும் மிச்சம் விட்டனர்
1861ம் ஆண்டு கொச்சி மஹாராஜா இதை செப்பனிட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்ட நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு கோவிலைச் சேதமாக்கியது. கேரள கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் கோவில் தீ விபத்து என்பது அடிக்கடி கேட்கப்படும் செய்திதான்.

கிழக்கு நடையில் இருந்த விக்கிரகத்தை அருகிலுள்ள குளத்தில் போட்டு தீயிலிருந்து பாதுகாத்தனர். மேற்கு நடா பெருமாளை காப்பாற்ற முடியவில்லை. 25 நாட்களுக்குப் பின்னர் தீ அவிந்தபோது விக்கிரகததை சோதித்தனர்; அது சேதம் அடையாமல் இருந்தது ; பின்னர் திருப்பணி செய்து 1885ல் கும்பாபிஷேகம் செய்தனர்.
பரசுராமர் காலத்திலேயே கோவில் பராமரிப்பு, பூஜைகள் முதலியன சிற்சில இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக அப்பணிகளைச் செவ்வனே செய்துவந்தனர். பின்னர் இரண்டு மன்னர்கள் பொறுப்பேற்றவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது; பிரிட்டிஷாரை, சமரசத்துக்கு அழைத்தபோது அவர்கள் சக்தி வாய்ந்த கொச்சி பக்கம் தீர்ப்பு வழங்கினார்கள் ; தற்காலத்தில் கொச்சி தேவ ஸ்வம்போர்டு இதை நிர்வகிக்கிறது.
—–சுபம் —-
TAGS-திரு வில்வ மங்கலா , வில்வாத்ரி , கோவில், தொடர்ச்சி, திப்பு சுல்தான் தாக்குதல் ,புனர் ஜனனி குகை