லவ குசனுக்கு கோவில்கள்: வயநாடு கோவில்கள் – 42 (Post No.12,865)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,865

Date uploaded in London – –   30 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 42

கோவில் எண்கள் –51. 52, 53, 54

51.புல்பள்ளி சீதா தேவி கோவில்

சுல்தான் பேட்டரியிலிருந்து 8 கி.மீ . தொலைவில் புல்பள்ளி இருக்கிறது. இங்குள்ள கோவிலில் ராமனின் புதல்வர்களான லவ, குசர்கள், மற்றும் சீதா தேவி ஆகியோர் தரிசனம் தருகின்றனர் .

கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அழகான ராமாயண ஓவியங்கள் உள்ளன

இந்த  சீதா தேவி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் பழசி ராஜாவால் கட்டப்பட்டது.

மத வெறிபிடித்த மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் இந்த கோவிலை அழிக்கத் திட்டமிட்டார். ஆனால்  தேவியின் அற்புத சக்தியால் நண்பகலில்  இருள் மண்டியது. இதனால் துலுக்கப்படைகள் பின்வாங்கின.

சிறப்பு அம்சங்கள்

சீதா தேவி லவனையும் குசனையும் பெற்ற இடம்  வட இந்தியாவில் உள்ளது. ஆயினும் இங்குள்ள மக்கள், அது இங்கு நடந்ததாக நம்புகின்றனர்

இந்த வட்டாரத்தில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் அதிகம்; ஆயினும் கோவில் வட்டாரத்தில் அவை இல்லை. சீதை இட்ட சாபத்தால் அவை வருவதில்லை என்றும் நம்புகின்றனர்.

வால்மீகம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் புற்று என்று பொருள்; புற்று சேரும் அளவுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து தவம் செய்ததால் வால்மீகிக்கு இப்பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் ஒரு புலவர் பெயர் வால்மீகி !

இந்த வட்டாரத்தை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தும் வண்ணம் புற்றுக்கள் நிறைந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் ஆண்டு உற்சவம் நடக்கும். இதற்கு திர உற்சவம் என்று பெயர். மூன்று வகையான தெய்யம் Theyyam நடனங்கள் அப்போது நடக்கும். வித விதமான முக வர்ணங்கள்; பலவகை வளையல்கள், வித்தியாசமான கிரீடங்கள் ஆகியவற்றைக் காண பெரிய பக்தர்கள் கூட்டம் கூடுகிறது

தெய்யம் நடனத்தில் ஆடுவோர், தெய்வங்களை தம் மீது ஏற்றி (ஆவாஹனம் செய்து) ரசிகர்களை ஆசீர்வதிப்பார்கள் .

பணியர் களி என்ற பழங்குடி மக்கள் நடனமும்  அதற்கே உரித்தான இசையுடன் நடக்கிறது.

XXXXX

52.திருநெல்லி விஷ்ணு கோவில்

வடகேரளத்தில் வயநாடு பகுதியில் உள்ள முக்கிய மஹா விஷ்ணு கோவில் திருநெல்லி கோவில் ஆகும். மணத்தவாதியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது. இதை சஹ்யாமல (மேற்கு மலை) க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்

3000 ஆண்டுப் பழமை உடையது என்றும் காசி, கயா க்ஷேத்திரங்களுக்குச் சமமானது என்றும் பக்தர்கள் சொல்லுவர் ; இந்தக்கோவிலை வணங் கியோர் பட்டியல் நீண்ட பட்டியல் ! பிரம்மாவே ஸ்தாபித்த இந்தக்கோவிலுக்கு ராம லட்சுமண , சுக்ரீவ, சபதரிஷிகள் , கருடன் ஆகியோர் வந்தனர். கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையையும் இந்த இடத்துடன் தொடர்புபடுத்துவார்கள் .

ஒரு பர்லாங் தூரத்தில் பாபநாசினி ஓடை ஓடுகிறது; இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் அனைத்தும் ஓடிவிடும் தென்பகுதியில் உள்ள புனிதப்   பாறையில் இறந்தோருக்கான சடங்குகள் நடக்கும். ஜமதக்கினிமுனிவர் வந்து சிறப்பித்த இடம் இது.

விஷு புண்ய நாளில் ஆண்டு உற்சவம் நடக்கிறது. ஒட்டந்துள்ளல் , கதகளி நடனங்கள் அப்போது நடக்கின்றன.

கார்கிடகம், துலாம்,கும்பம், மாதங்களில் அமாவாசை நாளில் நீத்தாருக்கு பலி கொடுக்க தாய் தந்தையரை இழந்தோர் வருவார்கள். அருகிலுள்ள த்ரிசேரி மஹாதேவன் கோவிலுக்கும் அவர்கள் செல்கின்றனர்.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் இயற்கை வனப்புமிக்கது.

கோவிலில் கண்கவரும் ஓவியங்களும் உள்ளன.

தெற்குப் பக்கமுள்ள பஞ்ச தீர்த்தக்குளம் ஒரு புனிதக் குளம். ஐந்து புனித ஆறுகளின் நீர் இக்குளத்தில் கலப்பதாக ஐதீகம். குளத்தின் நடுவே ஒரு மேடு உள்ளது. அதை அடைய ஒரு கல்பாலம் உள்ளது. இந்த மேட்டில் உள்ளது சரிவான கல்லை விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.

XXXX

53.சுல்தான் பேட்டரி மஹா கணபதி கோவில்

சுல்தான் பேட்டரி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை திப்பு சுல்தானும் வணங்கியதாகத் சொல்லுவார்கள்.

ஐனவரி -பிப்ரவரி மாதங்களில் எட்டு நாள் உற்சவம் நடக்கிறது. சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகியன நடக்கும். மூன்றாம், நாலாம் நாள் திருவிழா முக்கியமானது. அந்த நாட்களில் களம் எழுத்துப் பாட்டு செய்வார்கள்.பூமியில்/ களத்தில்  இறைவனின் படத்தை எழுதுகையில்/ வரைகையில் பாட்டுப்  பாடுவார்கள். விழாவின் கடைசி நாளன்று அலங்கார யானையின் மீது திடம்பு (இறைவனின் திரு உரு) ஏற்றப்பட்டு நகர் முழுதும் பவனி வரும். காலை முதல் மாலை வரை பவனி நடைபெறும் .

XXXX

54.சுல்தான்பேட்டரி  மாரியம்மன் கோவில்

அம்மை போன்ற நோய்கள் அண்டாமல் பாதுகாக்க மாரியம்மாவை வணங் கும்  வழக்கம் தென் இந்தியா முழுதும் உள்ளது. சுல்தானபேட்டரி மாரியம்மன் கோவிலில்  பிப்ரவரி- மார்ச் மாதத்தில் 3 நாள் விழா நடக்கும். மூன்றாம் நாளன்று கழச்ச வரவு ஊர்வலம் நடக்கும். அதில் கும்பம் களி , கோல் களி , திர , காவடி முதலியன இடம்பெறுகின்றன. பறிச்சமூட்டுக்களி , பரத நாட்டியம், மோஹினியாட்டம் ஆகியவையும் உற்சவ காலத்தில் நடப்பது கோவிலின் சிறப்பு அம்சங்களாம் .

—-சுபம்—

TAGS– வயநாடு, கோவில்கள், சுல்தான் பேட்டரி, லவ குச, சீதாதேவி, கோவில்

Leave a comment

1 Comment

  1. gopalsam8's avatar

    gopalsam8

     /  January 2, 2024

    சுல்தான் பத்தேரி என்பதே சரியான உச்சரிப்பு.

Leave a comment