கேரளத்தில் ஒரு திருக்கடவூர் கோவில்-53 (Post No.12,902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,902

Date uploaded in London – –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 53

கோவில் எண்கள் –98,99, 100

98.த்ரி கடவூர் மஹாதேவர் கோவில் Thrikkadavoor Sree Mahadeva Temple

தமிழ்நாட்டில் அபிராமி பட்டரின் அற்புதத்தால் பிரபலமான அபிராமி அம்மன் கோவில் திருக்கடவூரில் உள்ளது. கடவூர் என்றும் கடையூர் என்றும் கூறுவார்கள் . இதே போல கேரளத்திலும்  ஒரு திருக்கடவூர் சிவன் கோவில் இருக்கிறது கொல்லத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

ஒன்பதாம் நாள் திருவிழாவில் பள்ளி வேட்டை நடக்கும்  அந்த நாளில் வண்ண மிகு குதிரை உருவங்களை  கோவிலிலுக்கு ஊர் வலமாகக்  கொண்டுவருவார்கள் கடைசி நாள் நடக்கும் ஆராட்டு உற்சவத்தில் யானை பவனி, நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறும்  கிராம மக்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வாறு குதிரை  உருவங்களை  காணிக்கையாக கொண்டுவருகிறார்கள்.

இந்தக் கோவில் புராணமும் தமிழ்நாட்டு திருக்கடையூர் அபிராமி- அமிர்த கடேஸ்வரர் போல மார்க்கண்டேயன் கதையையே கூறுகிறது .

கோவிலில் ஐயப்பன் , கணபதி, பிரம்மா ராக்ஷஸ, யக்ஷினி நாகராஜா, நாகா யக்ஷி ஆகியோரும் வழிபடப்படுகின்றனர் ; கருவறையில் சிவ பெருமான் இருக்கிறார்

கும்பம் மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தைக் காண ஏராளமான வெளிநாட்டினரும் வருகிறார்கள் எட்டு திசைகளைக்  குறிக்கும் வண்ணம் கோவில் சார்பில் எட்டு செயற்கை குதிரை உருவங்களும் நிற்கும் நெடும் குதிரா / எடுப்பு குதிரா என்ற சப்பரத்தை பக்தர்கள் நீர் வழியே எடுத்துச் செல்லுவார்கள்

இன்னும் ஒரு சிறப்பு அம்சம்  சூட்டுக் களி ; அதில் பக்தர்கள், தீவட்டிகளுடன் ஆடுவார்கள். அவைகளை தென்னை ஓலைகளைக்கொண்டு செய்கிறார்கள். இது உற்சவம் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னரே நடக்கும் .

XXXXX

ஆனை வால் பிடிக்கும் உற்சவம்

99.உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

The rare ritual ‘Anaval pidi’ (pulling the tail of a tusker)  Umayanalloor Sree Balasubramanya Temple

கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடக்கின்றன. மார்ச் மாதத்தில் எட்டு நாள் உற்சவம் நடக்கும். இதில் ஆறாவது நாளன்று ஆனை வால் பிடிக்கும் உற்சவம் என்ற சுவையான வைபவம் நடக்கிறது

காலையில் கோவில் யானையை , முருகன் சந்நிதிக்கு முன் நிறுத்துவார்கள்; அது இறைவனை வணங்கும். பின்னர் கோவிலை வலம் வந்து சந்நிதிக்கு முன்னர் நிற்கும். மாவுத்தன் கட்டளையிட்ட பின்னர், 300 அடிக்கு வாலையும் துதிக்கையையும் உயர்த்திக்கொண்டு பிளிறல் சப்த த்துடன் முன்னே பாயும். பக்தர்கள் அனைவரும் யானையின் வாலைப் பிடிக்க பின்னே ஓடுவார்கள். பின்னர் யானை ஓட்டம் நிறைவு பெறும் .

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழைய கோவில். புத்தர்கள் இந்தக்கோவிலை ஆக்ரமித்து இருந்தனர். ஆதி சங்கரர்  வந்து அதை மீண்டும் இந்துக்  கோவிலாக மாற்றினார். இப்போதும் கோவிலில் புத்தமத எச்ச சொச்சங்களைக் காணலாம் .

xxxxx

100. கருநாகபள்ளி  மஹாதேவர் கோவில் Padanayarkulangara Mahadeva Temple

படையனர் குலங்கரா சிவன் கோவில் பள்ளிக்கல் ஆற்றின் கரையில்  கரு நாகப்பள்ளில் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது புத்தர்கள் கைப்பற்றி ஆக்ரமித்திருந்த இந்தக் கோவில் பின்னர் இந்துக்கள் வசம் வந்தது .

இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் நடக்கும். எல்லா நாட்களிலும் யானை பவனி நடைபெறும்.  கதகளி, அம்மன் குடம், குதிரை, மயிலாட்டம், காவடி ஆட்டம் முதலியன நடக்கும்.ஆராட்டு நாளில் நடக்கும் யானைகள் ஊர்வலம் , அருகிலுள்ள தேவி கோவில் வரைசென்று திரும்பி வரும்.

ஒரு காலத்தில் இது காயம்குள மன்னர்களின் தலை நகரமாக விளங்கியது. அதற்கு முன்னர் ஆய் குல மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர்

சிவராத்திரி விழாவும் இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படும்

ஆய் வள்ளல்

இந்த இடம் சங்க கால ஆய் அண்டிரனுடன் தொடர்புடையது என்பதை  என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . நாகர் குல பழங்குடி மக்கள் பாம்புத்தோல் போல ஆடை நெய்வதில் சிறந்தவர்கள் . அவர்கள் ஆய் மன்னனுக்கு அளித்த கரு நாக வண்ண உடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்கு அளித்தான் ; இதனால் கடையெழு வள்ளல் களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான்

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிழல்திகழ்

நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர். இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.

இந்தத் தகவலானது இவன் யானைகள் அதிகமுள்ள கேரளத்தையும் தன் வசம் வைத்திருந்தான் என்பதையும், முதலில் சிவன் இருந்த இடத்தையே பெளத்தர்கள் கைப்பற்றினார்கள் என்பதையும், நாகா இன மக்கள் பாம்புத்தோல் போல மெல்லிய உடைகளை நெய்பவர்கள் அல்லது பாம்புகள் கழற்றும் பாம்புச் சட்டையைக் கொண்டு ஆடை செய்பவர்கள் என்பதையும் காட்டுகிறது .

—SUBHAM—

TAGS- பள்ளிவேட்டை குதிரை உருவங்கள், சூட்டுக் களி, உமையநெல்லூர் , பாலசுப்பிரமணிய சுவாமி, கோவில், ஆனை வால் பிடிக்கும் உற்சவம் , ஆய் அண்டிரன்

Leave a comment

Leave a comment