
Post No. 12,932
Date uploaded in London – – 19 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் நாளிதழில் 17-1-2024 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 2
ச.நாகராஜன்

ஜனாதிபதி கலாம்
போக்ரான் அணுகுண்டு வெடிப்புத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்தார் கலாம். இந்திய அரசாங்கம் 1999 நவம்பரில் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை அவருக்கு வழங்கியது. ஆலோசகராக 2001 நவம்பர் வரை இருந்த அவர் இந்தியா விண்வெளித் துறையில் முன்னேற பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினார். அவரது தளராத உழைப்பும் அதன் மூலம் நாட்டிற்கு அவர் ஆற்றிய பணியும் பெரிதும் அனைவராலும் போற்றப்பட்டது. பல்வேறு விருதுகள் அவரை வந்தடைந்தன. 1981இல் பத்மபூஷண் 1990இல் பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற கலாம் பாரதத்தின் மிக உயரிய கௌரவ விருதான பாரத ரத்னா-வை 1999இல் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஜூலை 25ஆம் நாள் முதல் 2007 ஜூலை 25 முடிய ஜனாதிபதியாகத் திகழ்ந்த அவரை மக்கள் தலைவர் என அனைவரும் அன்புடன் அழைத்தனர்.

ஜனாதிபதி பதவியில் ஆற்றிய அரும் செயல்கள்
ஜனாதிபதி பதவியில் அவர் ஆற்றிய செயல்கள் பல. நாடு முழுவதும் பயணப்பட்டு ஆங்காங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது ஆளுமையைக் காட்டும் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடைபெற்றன.
ஜனாதிபதி ஆனவுடன் அவர் பெரிதும் மதித்த மானெக்ஷாவைப் பார்க்க விரும்பினார். மானெக்ஷா (தோற்றம் 3-9-1914 மறைவு 27-6-2008) அப்போது நீலகிரியைத் தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு வசித்து வந்தார்.
தலைநகர் டில்லியிலிருந்து வெல்லிங்டன் வந்த ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் நேராகச் சென்று ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷாவைச் சந்தித்தார்.
மானெக்ஷாவின் உடல் நலம் பற்றி மிக்க அக்கறையோடு விசாரித்த கலாம் அவர் சீக்கிரமாகவே உடல்நலம் தேற வேண்டும் என்று வாழ்த்தினார்.
.
சந்திப்பு முடிந்து கிளம்பும் போது கலாம், “நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.
உடனே மானெக்ஷா, “ மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! எனக்கு ஒரு குறை உண்டு.” என்றார்,
திடுக்கிட்ட கலாம், “என்ன, என்ன? நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்” என்றார்.
வீல்சேரில் அமர்ந்திருந்த மானெக்ஷா கூறினார்: “நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் எனது ஜனாதிபதியை எழுந்து நின்று சல்யூட் வைக்க முடியவில்லையே என்ற குறை தான் எனக்கு.”
ஜனாதிபதி நெகிழ்ந்து போனார்.
அந்தச் சந்திப்பில் மானெக்ஷா தனக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை வரவில்லை என்பதையும் தெரிவித்தார்.
பென்ஷன் தொகை வராத மொத்த வருடங்கள் இருபது.
அதிர்ந்து போன கலாம் டெல்லிக்குச் சென்றவுடன் பென்ஷன் தொகையை உடனே வழங்குமாறு உத்தரவு போட்டார்.
மொத்த தொகை ஒன்றே கால் கோடி ரூபாய் அளவு இருந்தது.
ஒரு தனி விமானத்தில் பாதுகாப்புத் துறை செக்ரட்டரியை அனுப்பி பென்ஷன் தொகையை வழங்கச் செய்தார் கலாம்.
சந்தோஷமாக செக்கைப் பெற்றார் உடல்நலம் குன்றியிருந்த மானெக்ஷா.
உடனே அதை வெல்லிங்டனில் இருந்த மிலிடரி மருத்துவமனைக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.
இப்படி அவரது சந்திப்பு ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கதாக விளங்கியது.

மாணவர்கள், இளைஞர்களின் வழிகாட்டி
கலாம் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய மையமாக அமைந்தது அவர் மாணவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது தான்!
பல்கலைக் கழக விழா ஒன்றில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி கலாமிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அவரும் ஏற்றார். மாணவர்களைச் சந்திப்பது என்றால் அவருக்குத் தான் தனிப்பட்ட உற்சாகம் உண்டே! விழா மேடையில் ஜனாதிபதி அமர்வதற்காக சற்று பெரிதாக இருந்த விசேஷ நாற்காலி போடப்பட்டிருந்தது. கலாம் அதில் அமர மறுத்து விட்டார். துணைவேந்தரை அதில் அமருமாறு கூறி அவரது நாற்காலியில் தான் அமர்வதாகக் கூறினார். துணைவேந்தரோ அதற்கு மறுத்து விட்டார். உடனடியாக மற்றவருக்குப் போடப்பட்டிருந்தது போன்ற நாற்காலி வரவழைக்கப்படது. அதில் அமர்ந்தார் கலாம். விழா தொடங்கியது.
எளிமையிலும் எளிமை என்பதற்கு அவர் ஒரு இலக்கணமாக விளங்கினார்.
அடுத்த ஜனாதிபதியாக ஆகப் போகிறார் என்று நிச்சயமாகி விட்ட நிலையில் அவர் ஒரு பள்ளியில் உரையாற்றச் சென்றார். அங்கு பவர் கட்! கலாம் அசரவில்லை. நானூறு மாணவர்களுக்கு மத்தியில் சென்ற அவர் தன்னைச் சுற்றி நெருங்கி வருமாறு அனைவரையும் அழைத்தார். அனவரும் அப்படியே வந்தனர். உதவேகமூட்டும் உரையை அவர் நிகழ்த்த மாணவர்கள் மனம் மிக மகிழ்ந்தனர்.
டி.ஆர்.டி.ஓ-வில் அவர் பணியாற்றிய போது அவரது உதவியாளர்களுள் ஒருவருக்கு வேலைப்பளு காரணமாக தன் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போனது. அன்று மாலை பொருட்காட்சிக்குத் தன் மகனைக் கூட்டிக் கொண்டு போவதாக அவர் சொல்லி இருந்தார். போகமுடியவில்லை. இதை அறிந்த கலாம் அவரது வீட்டிற்குச் சென்று அவர் மகனைத் தானே பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்று விட்டார். குடும்பங்களின் மூத்த அண்ணன் அவர்!
சைவ உணவுக்கார். பிரம்மச்சாரி. மக்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்.
ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவரிடையே 2015 ஜூலை மாதம் 27ஆம் நாள் உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவர் மாலை சுமார் 6.30 மணியளவில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடல் இராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களும் நல்லடக்க நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் முக்கியமானது அக்னிச் சிறகுகள்.
அவர் இளைஞர்களுக்குக் கொடுத்த முக்கிய உத்வேகமூட்டும் உபதேசம் :-
“கனவு காணுங்கள். தேசம் மேம்பட, நீங்கள் மேம்பட கனவு காணுங்கள். படைப்பாற்றலுடன் தீவிரமாக உழைத்து அதை மெய்ப்பித்து நனவாக்குங்கள்.”
இதன்படி வாழ்ந்து காட்டி நாட்டின் உயரிய குடிமகனாகத் திகழ்ந்த அவர் பொன்மொழி பொய்யா மொழி அன்றோ!
***