
Post No. 12,953
Date uploaded in London – – 25 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 4
வாங்க சார், யமலோகத்திற்கு ஒரு விஸிட்! – உயிரோடிருக்கும் போதே!!
ச.நாகராஜன்
மரணம் என்று சொன்னவுடனேயே யமன் பற்றிய நினைவு தான் நமக்கு வரும்.
அவனது லோகம் எப்படி இருக்கும்? அது எவ்வளவு தூரத்தில் உள்ளது. செத்த பின்னர் நமது உயிர் அல்லது ஆத்மா அதை எப்படி அடையும் ..இத்யாதி கேள்விகள்.
இதே கேள்விகள் தர்மபுத்திரருக்கும் தோன்றி இருக்கிறது. அவர் இவற்றைக் கேட்டே விட்டார், பதிலும் பெற்று விட்டார். அதை மஹாபாரதத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
வனபர்வத்தில் மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வம் என்ற உப பர்வத்தில் (வனபர்வம் 203வது அத்தியாயம்) வரும் காட்சி இது.
மார்க்கண்டேயரை தர்மபுத்திரர் தரிசிக்கிறார். மார்க்கண்டேயர் யமனை வென்றவர் ஆயிற்றே. யமனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவருக்கு அத்துபடி.
அவரிடம் தர்மர் கேட்கிறார்:
1) யமலோக மார்க்கமானது எப்படிப்பட்டது?
2) என்ன அளவுள்ளது?
3) மானிட லோகத்திற்கும் யம லோகத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது?
4) அது எவ்விதமாக இருக்கிறது?
5) மனிதர்கள் எந்த உபாயத்தால் அந்த வழியைக் கடக்கிறார்கள்?
இதற்கு மார்க்கண்டேயர் பதிலை விளக்கமாகத் தருகிறார்.
ரகசியங்களுக்குள் மிக்க ரகசியமாக இருக்கும் விஷயத்தை அவர் உரைக்கத் தொடங்குகிறார்.
1) யம லோகத்திற்கும் மனித லோகத்திற்கும் மத்தியிலிருக்கிற வழியானது எண்பத்தாறாயிரம் யோஜனை தூரம் உள்ளது. (ஒரு யோஜனை தூரம் என்பது 8 மைல்கள் அல்லது 12.8 கிலோமீட்டர் ஆகும்) 6,88,000 மைல் தூரத்தில் யமலோகம் உள்ளது.
2) கோரமாக இருக்கும். காடாக காணப்படும்.நாற்புறங்களிலும் தண்ணீர் இல்லாத வெளி. அந்த வழியில் மரங்களில் நிழலும் இல்லை, தண்ணீரும் இல்லை. களைப்படைந்தவனும், இளைத்தவனுமான மனிதன் இளைப்பாறத்தக்க வீடும் இல்லை.
3) யமனுடைய கட்டளையை மேற்கொண்ட யமதூதர்கள் ஆண்களையும், பெண்களையும் பூமியில் உள்ள இதர உயிருள்ள மற்றவைகளையும் பலாத்காரமாகக் கொண்டு போகின்றனர்.
சிறந்த தானங்களை பிராமணர்களுக்குத் தந்தவர்களுக்கு குதிரை வாகனம்; அன்னதானம் செய்தவர்கள் அன்னத்தினால் அங்கு திருப்தியுற்றுச் செல்ல அன்னமிடாதவர்களோ பசியினால் துன்பமுற்றுச் செல்கின்றனர்;ஆடைகளைக் கொடுத்தவர்கள் ஆடையோடு செல்ல ஆடையைத் தானமாக வழங்காதவர்கள் ஆடையின்றிச் செல்கின்றனர். தீர்த்தத்தை தானம் செய்தவர்களுக்கு அங்கு புஷ்போதகை என்ற நதியின் அம்ருதம் போன்ற குளிர்ச்சியான நீர் கிடைக்கிறது.தீவினை செய்தவர்களுக்கு அந்த நதியில்
சீழானது குடிப்பதற்குக் கிடைக்கிறது.
ஆக எவ்வித நற்கர்மங்களை மேற்கொண்டால் எவ்வித பலனை யமலோகத்தில் பெறலாம் என்பதை மார்க்கண்டேயர் இப்படி விளக்குகிறார்.
அடுத்து மஹாபாரதத்தில் சபா பர்வத்தில் மந்த்ர பர்வம் என்ற உப பர்வத்தில் யமலோகம் பற்றி நன்கு விவர்க்கப்படுகிறது. (சபா பர்வம் அத்தியாயம் 6)
தனது சபைக்கு நிகர்த்த சபை ஒன்று உண்டா என்று தனது சபைக்கு வந்த நாரத மஹரிஷியிடம் தர்ம புத்திரர் கேட்க அவர் புன்னகையுடன் யம சபை, வருண சபை, இந்திர சபை, குபேர சபை ஆகிய சபைகளை விவரமாகக் கூறுகிறார். மானிட லோகத்தில் தர்மரின் சபையே சிறந்தது என்ற நற்சான்றிதழையும் அவர் வழங்குகிறார்.
யம சபையைப் பற்றி அவர் கூறியதன் சுருக்கம் இதோ:
யம சபை ஒளியே உருக்கொண்டதானது.
நூறு யோஜனைக்கு மேல் அகலமுள்ளது.
சூரியனைப் போன்ற ஒளியினால் எங்கும் பிரகாசிப்பது.
நினைத்த உருவம் அமைவது.
மிக்க குளிர்ச்சியும் அதிக வெப்பமும் இல்லாமல் மனதை மகிழ்விப்பது.
துயரம், மூப்பு, பசி, தாகம், வெறுப்பு, மனச்சோர்வு, களைப்பு, கெடுதல் இவற்றில் ஒன்றும் அச்சபையில் உள்ளவர்களுக்கு இல்லை.
தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உரிய போகங்கள் அனைத்தும் அங்கு உள்ளன.
சுவையையும் பலத்தையும் தரும் பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம், பேயம் ஆகிய ஐந்து வகை உணவுகளும் அங்கு கிடைக்கும்.
பூமாலைகள் உண்டு. சுவையுடைய தண்ணீரும் வெந்நீரும் உண்டு.
ராஜ ரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் அங்கு சூரியனின் புத்திரனான யமனை வணங்கிப் போற்றுகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஒரு பெரிய ரிஷிகள், அரசர்கள் பட்டியல் தரப்படுகிறது. மிக நீண்ட பட்டியல் அது.
அங்குள்ளோரின் பெயர்களைக் கணக்கிடமுடியாது.
விஸ்வகர்மா நெடுங்காலம் தவமிருந்து நிர்மாணித்த சபை அது. தன்னொளியால் ஜ்வலிப்பது.
பொய் சொல்லாத, நியம் தவறாத, சாந்தமுள்ள, சுத்தருமான சந்யாசிகள் தங்களது நல்ல கர்மங்களினால் துலக்கப்பட்டு அந்த சபைக்கு வருகின்றனர்.
இப்படி வர்ணிக்கப்படுகிறது யம சபை!
என்ன, யம சபை விஸிட் எப்படி?
***