WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,962
Date uploaded in London – – 28 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புத்தக அறிமுகம்
அஹம் ஸ்புரணா – தமிழில்
ச.நாகராஜன்
தமிழ் அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. அஹம் ஸ்புரணா என்ற நூல் தமிழில் வெளியாகியுள்ளது.
பகவான் ஶ்ரீ ரமண மஹரிஷியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உபதேசங்களை ஶ்ரீ கஜபதி ஐயர் என்ற அணுக்கத்தொண்டர் 1936ஆம் ஆண்டில் தனது குறிப்பேட்டில் ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்துள்ளார்.
இதுவரை வெளியிடப்படாத பல செய்திகளும் பகவானின் உபதேச உரைகளும் இதில் அடங்கியுள்ளனர்.
இதை அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று என்ற தலைப்புடன் தமிழில் ஓபன் ஸ்கை பிரஸ் தொகுத்து வழங்கியுள்ளது.
362 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 60 அத்தியாயங்கள் உள்ளன.
1936, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் ஶ்ரீ கஜபதி ஐயர் ரமணாஸ்ரமத்தில் தங்கி இருந்தார். அப்போது மேலை நாட்டிலிருந்து வருவோரும் உள்ளூர் பக்தர்களும், பாரத நாட்டின் இதர பகுதிகளிலிருந்து வருவோரும் பகவானிடம் ஏராளமான ஆன்மீக சம்பந்தமான தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
ரமணாஸ்ரமத்திலிருந்து அதிகாரபூர்வமான ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் இல்லாத செய்திகளை இதில் படிக்க முடிகிறது.
ஓபன் ஸ்கை பிரஸ்ஸின் இயக்குநரான ஜான் டேவிட் ஶ்ரீ கஜபதி ஐயர் எழுதி வைத்துள்ள கைப்பிரதிகளை ஆராய்ந்து அவற்றில் சுவையான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் நூலாக வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இது.
திருவண்ணாமலையில் உள்ள அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் ஸ்வாமி ஹம்ஸானந்தா இதை ஒரு ஞானப்பொக்கிஷம் என்று கண்டு இதை வெளியிடுமாறு ஜான் டேவிட் அவர்களை ஊக்குவித்தார். அழகிய ஒரு முன்னுரையையும் வழங்கியுள்ளார்.

நான் யார்? என்று கேட்டு ஆத்மவிசாரத்தை மேற்கொள் என்பதே ரமண மஹரிஷியின் உபதேசங்களின் மொத்த சாரமாகும்.
நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:
நான் எவ்வாறு குருவை தேடி அடைவது?
தீவிரமான தியானமே உன்னை குருவின் சன்னிதானத்திற்கு தானாகவே எடுத்துக் கொண்டு செல்லும். (பக்கம் 22)
அஹம் ஸ்புரண நிலையை அடைந்த பின் எந்தவித முயற்சியும் சாத்தியமில்லை….அஹம் ஸ்புரணம் நிலையை அடைந்து அதனால் ஆட்கொள்ளப்பட்டு, அதனில் ஐக்கியமானவனுக்கு நான் ஆன்மாவை அடைந்து விட்டேன் என்ற எண்ணம் இருக்காது. இந்த நிலையில் எந்த எண்ணமும் எழாது. (பக்கம் 27)
பக்தரின் கேள்வி
அஹம் ஸ்புரணம் ‘ஒளி வீசும் போது’ அதை உணர்வது எப்படி?
பகவானின் பதில்
அந்த அனுபவமானது நிகழும் போது அதை அறியாமல் இருப்பது சாத்தியமல்ல. எந்தவித விவரணம் கொடுத்தாலும் அது பயனற்றது மட்டுமல்ல; எதிர்விளைவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
(பக்கம் 29)
கேள்வி :ஞானோதயத்திற்கு உதவுபவை யாவை?
பதில் :மனத்தை உள்முகமாகத் திருப்புவது ஒன்றே வழி.
கேள்வி :நான் அதை அடைவது எப்படி?
பதில் :எண்ணங்கள், ஆசைகள் மற்றும் புலன் உணர்வுகளினாலான கற்பனைகளின் பின்னால் மனம் அலைவதைத் தடுப்பதன் மூலம்.
பக்கம் 39
கேள்வி : நிலையான சந்தோஷம்?
பதில் : ‘நான்’ என்பதன் பொருள்.
கேள்வி : என்றும் உள்ள துன்பம்?
பதில் : விருப்பம்.
கேள்வி: பிரிக்க முடியாத ஜோடி?
பதில் : மெய்ப்பொருளும் ப்ரக்ருதியும் (பரிபூரண சத்தியமும் ஆதியான இயற்கையும்)
கேள்வி: என்றுமுள்ள ஒருவருக்கொருவர் எதிரான ஜோடி எது?
பதில் : அறிவும் உறக்கமும்
கேள்வி : என்றுமுள்ள ரகசியம்?
பதில் : அருணாசலா!
(பக்கம் 54)
கேள்வி : நான் ஞானோதயம் உதிக்கும் வரை முயற்சி செய்து கொண்டேதான் இருக்க வேண்டுமா?
பதில் : ஆம். எந்த சிந்தனையும் எண்ணமும் இன்றி மனம் ஆத்மாவில் ஒடுங்கி இருக்கும் வரை தொடர்ந்து விசாரத்தைப் பயிற்சி செய்வது அவசியம்.
இது போன்ற ஏராளமான ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு அற்புதமான பதில்களை பகவான் அருளியிருப்பதை இந்த நூலில் படித்து மகிழலாம்.
ஆசிரமத்தில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளையும் நூல் விவரிக்கிறது.
இந்த நூலில் உள்ள குறிப்புகளைத் தொகுத்த ஶ்ரீ கஜபதி ஐயர் யார் என்ற கேள்விக்கும் நூலில் பதிலைக் காணலாம்.
ஶ்ரீ கஜபதி ஐயர் ஒரு புகழ்பெற்ற வக்கீல். மஹரிஷியின் மிகச் சிறந்த பக்தர். 1936ஆம் ஆண்டு அவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்தார். அவர் அங்கு சுமார் ஆறு மாதம் தங்கி இருந்தார். அங்கு ஹாலில் நடந்த உரையாடல்களைக் கூர்ந்து கவனித்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தார் 1936ஆம் ஆண்டின் இறுதியில் அவரது குடும்பம் அவருக்குத் திருமணம் செய்ய நிச்சயித்தது. இருபதே வயதான இளைஞரான அவர் பகவானைப் பிரிய மனமில்லாமல் பகவானிடமிருந்து விடை பெற்றார். வக்கிலாக ஆனார்.
இந்த நூலை வெளியிட்டுள்ள ஓபன் ஸ்கை பிரஸ் 2005ஆம் ஆண்டு முதல் அநேக ஆன்மீக நூல்களை வெளியிடத் தொடங்கியது. இதன் இயக்குநரான ஜான் டேவிட் இந்தியாவில் ஓஷோ உள்ளிட்ட பல ஆன்மீக ஞானிகளுடன் தொடர்பு கொண்டவர்.
ஊக்கமுடன் ஆன்மீக நூல்களை வெளியிட ஆரம்பித்த அவர் ஆங்கிலம், ஜெர்மானிய, ரஷிய, ஸ்பானிய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் நான் யார் என்ற நூலை வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக இந்த அரிய நூலை அளிக்கிறார்.
நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள் : சும்மா இரு; நான் யார்; மனதில் மட்டுமே உலகம் உள்ளது; விசாரம், ஆத்ம விசாரம், காலமும், விஞ்ஞானமும், சரணாகதி; வாழ்க்கையின் நோக்கம் என்ன?: குருவின் கருணை; ஒரு அற்புதமான நியூயார்க் பயணம்; விதி; நல்லதும் கெட்டதும், ஆத்மாவை உணர்.
நூலை வெளியிட்டுள்ள் ஓபன் ஸ்கை பிரஸ் இந்த நூல் அதிகாரபூர்வமான ஒன்று தானா என்ற கேள்விக்கு ‘பொறுப்புத் துறப்பு’ என்ற தலைப்பில் பதிலைத் தருகிறது.
அஹம் ஸ்புரணா கைப்பிரதி, அதன் பழமை காரணமாக நேரடியாக அதை அங்கீகரிக்க முடியவில்லை. கையெழுத்துப் பிரதியின் நம்பகத்தன்மை பற்றி நிபுணர்களிடம் ஆலோசனை செய்த போது அவர்களில் பெரும்பாலானோர் இவற்றை பகவானின் உரையாடல்கள் தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கைப்பிரதியில் உள்ள சில பகுதிகள் மிகைப்படுத்தப்பட்டதா இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்..
ஆகவே இதை திறந்த மனத்துடன் ஆராயவும் மகத்தான மற்றும் ஆச்சரியமிக்க ரகசியமாகக் கருதவும் வாசகர்களை அன்புடன் வேண்டுகிறது ஓபன் ஸ்கை பிரஸ்.
நூல் மிக அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஓம் என்னும் பகவானின் மேலை நாட்டு பக்தர்.
தமிழில் இதை திருத்தமுற வெளியிட வழி வகுத்தவர் pustaka.comஇன் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்.
நூல் பற்றிய விவரங்களை www.openskypress.com இல் பெறலாம்.
இணையதளத்தில் உள்ள பெரும் விற்பனை நிலையங்களில் ஆர்டர் செய்து நூலைப் பெறலாம்.
Opensky pressஇன் Whatsapp நம்பர் : 49 152 22 473 253
நூலை வெளியிட்ட திரு ஜான் டேவிட் அவர்களைப் பாராட்டுகிறோம்.
***