
Post No. 12,997
Date uploaded in London – — 11 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவ பக்தி!
ச.நாகராஜன்
சிவபக்தி என்றால் என்ன?
சிவபக்தி பலவகைப்பட்டதாகும்.
சாலோகம் முதலிய பத முத்திகளை விரும்புவது சிவ பக்தி தான்.
வேதாந்தம் முதலியவற்றைக் கேட்பது,
சிவ ஞானத்தில் ஈடுபாடு,
விபூதி தரிப்பது,
பஞ்சாட்சர ஜபம்,
ருத்திராட்சம் தரித்தல்,
சிவலிங்க பூஜை,
சிவனை தரிசித்தல்,
சிவ பூஜைக்கு வேண்டிய உபகரணங்களைக் கொடுத்தல்,
சிவபூஜையின் அன்பு வைத்தல்,
ஆகிய இவை எல்லாமே கூட சிவபக்தி தான்.
சிவன் திருவிழாவை தரிசிக்க விரும்புதல்,
திருவிழாவை தரிசிக்க வந்திருப்போருக்கு உணவு, தண்ணீர் தருதல்,
சிவ நாமங்களில் விருப்பமுண்டாதல்,
நந்தவனம் வைத்தல்,
சிவாலயத்துக்குரிய தடாகம் முதலியவற்றை அமைத்தல்,
சிவாலய பணி விடை செய்தல்,
ஜீரணமானவற்றைப் பழுது பார்த்தல்,
கோபுரம், மதில், மண்டபம் முதலியனவற்றைக் கட்டுதல்
ஆகிய இவை அனைத்துமே சிவ பக்தி தான்!
வேத முதலானவற்றை ஓதுதல், ஓதுவித்தல்,
புராணம் முதலியவற்றை எழுதுதல்,
அவற்றைக் காப்பாற்றல்,
சிவபக்தர்களுக்கு அந்த புத்தகங்களை தானமாக வழங்குதல்,
சிவஞானியர்க்கு பக்தி செய்தல்,
அவர்களுக்கு உணவு படைத்தல்,
மடம் கட்டுவித்தல்,
ஆகிய இவை அனைத்தும் சிவ பக்தியே.
சிவமந்திர தியானம் செய்வோருக்குப் பணிவிடை செய்தல்,
சிவதலங்கள் தோறும் சென்று தரிசனம் செய்தல்,
திருநீற்றை தூஷித்தவர்களை தண்டித்தல்,
சிவ அபராதங்கள் செய்தவர், சிவ ஞானியையும் சிவஞானத்தையும் நிந்திப்பவர்கள், சிவாலய திரவியங்களை திருடியவர்கள் ஆகியோரை தண்டித்தல்,
விஷ்ணு முதலான தேவர்களை நிந்திப்பவர்களை தண்டிப்பது ஆகியவையும் சிவ பக்தியே தான்.
ஏழைகளை ஆதரித்தல்,
பயந்தவர்களுக்கு அபயம் அளித்தல்,
இனியவை கூறல்,
எல்லா பிராணிகளிடத்தும் அன்புடன் இருத்தல்,
நன்மையைச் செய்ய விரும்புதல்,
ஒருவர் மேலும் குற்றம் கூறாமல் இருப்பது,
பிறருடைய நல்ல குணங்களையே சொல்வது,
குருமொழியை மீறாது நடப்பது,
குருவிற்கு பணிவிடை செய்வது
ஆகிய இவையும் சிவபக்தியைச் சேர்ந்ததேயாம்.
பக்தியைப் பெறுவதற்கும், பந்தம் நீங்குவதற்கும், முக்தி அடைவதற்கும் சிவ பக்தியே காரணமாகும்.
பக்தி உள்ளவர்களது இதய பங்கய பீடத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு வீற்றிருப்பார்.
இப்படிக் கூறுகிறது ஸ்காந்த புராணத்தில் உள்ள சூத சம்ஹிதையில் உள்ள 25வது அத்தியாயம்.
புராணங்களிலேயே பெரிய புராணமான ஸ்காந்த புராணம் 81000 ஸ்லோகங்களைக் கொண்டது.
“எந்தப் பொருளும் கந்த புராணத்தில்” என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு தமிழ்ப் பழமொழியாகும்.
***