
Post No. 13.019
Date uploaded in London – — 19 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவகிரகங்கள் – கலைக்களஞ்சியம் :புத்தக அறிமுகம் – ச.நாகராஜன்
10-12-2023 அன்று அமரரான திரு சந்தானம் சீனிவாசன் அவர்களைப www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இந்த ப்ளாக்கில் அவர் ஏராளமான கட்டுரைகளைப் படைத்துள்ளார். இப்போது அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவத்தைப் பெற்றுள்ளன.
ஞானமயம் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். அதைப் பாராட்டாதவர்களே இல்லை.
பலரது வேண்டுகோளுக்கிணங்க நவகிரகங்கள் கலைக்களஞ்சியம் இப்போது புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
**
திரு சீனிவாசன் ஒரு அறிமுகம்
திரு சீனிவாசன் மதுரையில் மதுரை மில்லில் பல்லாண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார். இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன.
பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும் பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.
திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.
கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.
தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர், புத்தகங்கள், இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள், பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.
இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும், தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.
ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய அனைத்தையும் அறிந்து அவரது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடிய அபூர்வ ஆற்றல் படைத்தவர். ஆகவே ஏராளமானோர் பல வருடங்களாக அவரை அணுகி ஆலோசனை பெற்று வந்தனர்.
**
அவரது நவகிரகங்கள் கலைக் களஞ்சியம் என்ற நூலுக்கு அவர் தந்த முன்னுரை இது:
தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.
இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.
இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.
உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.
இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.
இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சென்னை சந்தானம் சீனிவாசன்
31-7-2023
**
நூலுக்கு அணிந்துரை தந்துள்ள ச.நாகராஜன் தனது உரையில் கூறியிருப்பதன் ஒரு பகுதி :
நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.
வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்
இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.
**
நூலில் உள்ள அத்தியாயங்கள் இதோ:
1. சூரியனே போற்றி!
2. அம்புலிமாமா வா, வா!
3. மங்களம் தரும் அங்காரகன்!
4. புத்தி தரும் புதன்!
5. குரு பகவான்!
6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!
7. சனீஸ்வர பகவான்!
8. ராகு பகவான்!
9. கேது பகவான்!
10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!
**
அருமையான இந்த கலைக்களஞ்சியம் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம். இதை வெளியிட்ட புஸ்தகா பதிப்பக உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் பாராட்டுக்குரியவர். நல்ல முறையில் நேர்த்தியாக புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.
புத்தகம் பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண் : 9980387852
நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் பார்க்கலாம்.
***