
Post No. 13.043
Date uploaded in London – — 27 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 6
ஐந்து வித நரகங்கள்!
ச.நாகராஜன்
உமா தேவியார் பரமேஸ்வரனிடம் கொடிய நரகங்கள் எத்தனை, அவை எப்படிப்பட்டவை என்று கேட்க பரமேஸ்வரன் விவரமாக அவற்றைத் தெரிவிக்கிறார்.
மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 230வது அத்தியாயத்தில் ஏராளமான விவரங்களைப் பார்க்கலாம்.
அவற்றின் சுருக்கம் வருமாறு:
நரகங்கள் ஐந்து.
அவை பாவம் செய்தவர்களுக்காகப் பூமியின் கீழ் படைக்கப்பட்டவை. கொடியவை.
ரௌரவம்
முதலாவது நரகம் ரௌரவம் எனப்படும்.
அது நூறு யோஜனை நீளமும் அகலமும் உள்ளது. இருள் மூடியது. பாவிகளைப் பீடிப்பது. மிக்க துர்நாற்றம் உடையது. கொடியது. பயங்கரமான புழுக்கள் நிரம்பியது.
மிகுந்த பயங்கரமானது. சொல்லக் கூடாதது. எல்லா இடங்களிலும் பிரதிகூலமாக இருப்பது.
பாவிகள் புழு பூச்சிகளால் கடிக்கப்பட்டு அவற்றின் மலத்தினால் துர்நாற்றத்தை அடைந்து வெகு காலம் அங்கே நிற்கின்றனர்.
அங்கே படுப்பதுமில்லை; உட்காருவதுமில்லை.
அந்த உலகத்தில் இருக்கும் காலமெல்லாம் இப்படி நடுங்கிக் கொண்டே இருக்கின்றனர்.
அந்த நரகத்தில் யமதூதர்களின் பாதைகளினால் உண்டாகும் துன்பம் இதற்கும் பன்மடங்கு அதிகமாக நினைக்கப்படுகிறது.
அங்குள்ள துயரம் அளவற்றதாகக் கருதப்படுகிறது.
கதறிக் கொண்டும் அழுது கொண்டும் அங்கே துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
துயரத்தை விடுவித்துக் கொள்வதற்காக ஓடுகின்றனர். அங்கே அவர்களைக் கவனிப்பவன் எவனுமில்லை.
துக்கத்திற்கு விடுதலையும் இல்லை; துக்கத்தை அறிபவனும் அங்கே கிடைப்பதில்லை.
மஹாரௌரவம்
மஹாரௌரவம் என்கின்ற பெயரை உடையது இரண்டாவது நரகம்.
அது அளவிலும் துன்பத்திலும் முன் சொன்ன ரௌரவத்தை விட இரு மடங்கு அதிகம்.
கண்டகாவனம்
மூன்றாவது நரகத்தின் பெயர் கண்டகாவனம். அது துக்கத்திலும் அளவிலும் முன் சொன்ன நரகங்களை விட இரு மடங்கு அதிகமானது. மஹாபாதகங்கள் செய்த கொடியவர்கள் அந்த நரகத்திற்குச் செல்வர்.
அக்நி குண்டம்
அக்நி குண்டம் என்பது நான்காவது நரகத்தின் பெயர். இது கண்டகாவனத்தைப் போல இரு மடங்கு அதிகத் துன்பம் தருவது. அது போலவே சுகம் இல்லாதது.
அமானுஷம்
அமானுஷம் என்பது ஐந்தாவது நரகம். இது அக்னிகுண்டத்தைப் பார்க்கிலும் பெரும் துன்பம் தருவதாகும். இதில் ஏற்படும் துக்கம் சொல்ல முடியாதது; சகிக்க முடியாதது. இடைவிடாமல் இருப்பது.
பஞ்ச கஷ்டம்
ஐந்து இந்திரியங்களும் பாதைப்படுவதனால் அது பஞ்ச கஷ்டம் என்று சொல்லப்படுகிறது.
பாவம் செய்தவர்கள் பல இடங்களிலும் கஷ்டப்படுகின்றனர். துன்பத்தைப் பஞ்ச பூதங்களினாலும் அனுபவிக்கின்றனர்.
மிகக் கொடிய செய்கைகளைச் செய்ததனால் பஞ்ச பூதங்களும் அந்தத் துயரத்தை அடைகின்றன. பஞ்ச கஷ்டத்திற்குச் சமமான துக்கம் வேறில்லை.
இது தவிர அவிசி உள்ளிட்ட வேறு நரகங்களும் உள்ளன. அங்கே துக்கப்பட்டு துன்பம் தாங்க மாட்டாமல் பலர் கதறி அழுகின்றனர்.
சிலர் வாந்தி எடுத்து புரளுகின்றனர். சிலர் தாங்காமல் ஓடுகின்றனர். இப்படி ஓடுபவர்களை சூலம் ஏந்திய யமதூதர்கள் நான்கு பக்கங்களிலும் தடுக்கின்றனர்.
முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் எவ்வகையிலும் விடப்படுவதில்லை.
பாவம் ஒழியும் வரை அங்கேயே இருக்கின்றனர். பாவம் கழிந்த பின்னர் நரகத்திலிருந்து விடுபடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து யார் யார் எந்தந்த நரகத்தில் எவ்வளவு காலம் இருக்கின்றனர் என்பதை மஹேஸ்வரன் விளக்குகிறார்.
பாவங்கள் கழிந்த பின்னர் மிருகமாகவும் பக்ஷிகளாகவும் பிறக்கின்றனர்.
மனித ஜன்மம் என்பது கிடைப்பதற்கு அரிய ஒன்று.
என்று இவ்வாறாக கிடைத்தற்கரிய மனிதப் பிறவி பற்றி மஹேஸ்வரன் கூறி அருள்கிறார்!
***