ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.050

Date uploaded in London – — 29 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1 

ச. நாகராஜன்

திகிலூட்டும் திரைப்பட டைரக்டர் 

திரைத் துறையில் நகல் எடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னால் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களை தியேட்டருக்கு வரவழைத்து நாற்காலியின் நுனியில் நடுநடுங்கும் படி அமர வைத்த மர்மக் கதை மன்னர் ஒருவர் உண்டு! அவர் யார் தெரியுமா? அவர் தான் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் – Master of Suspense – என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆல்ப்ரட் ஹிட்ச்காக்!

இதில் சுவையான விஷயம் என்னவெனில் தனது திகில் படங்களை தன்னால் தியெட்டரில் அமர்ந்து பார்க்க முடியாது என்பதை அவரே ஒத்துக் கொண்டது தான்! எப்படித்தான் மக்கள் தனது திகில் படங்களைப் பார்க்கிறார்களோ என்று வியந்தார் அவர்.

இவரைப் பற்றிய சுவையான விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்ப்போம். 

பிறப்பும் இளமையும்

 ஆல்ப்ரட் ஜோஸப் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் இங்கிலாந்திலுள்ள லேடன்ஸ்டோன் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு பலசரக்கு வியாபாரி.

 இளம் வயதிலேயே மோசமான ஒரு அனுபவத்தை இவர் தந்தையார் இவருக்குத் தந்தார். இவரது ஐந்தாம் வயதில் இவர் வீட்டில் ஒழுங்காக இல்லை என்று எண்ணி ஒரு கடிதத்தை இவர் கையில் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுக்குமாறு கூறினார் தந்தை. இவரும் அப்படியே செய்தார்.

அந்தக் கடிதத்தில் இவரை சிறிது நேரம் சிறையில் அடைத்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. லாக்-அப்பில் சிறிது நேரம் இருந்த இவருக்கு வாழ்நாள் முழுவதும் போலீஸைக் கண்டால் பயம் ஏற்பட்டது. ஆனால் இவர் தான் பின்னால் மர்மக்கதை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார்.

 லண்டனில் பொறியியலும் கலையையும் கற்ற இவருக்கு கதை எழுதுவதில் ஈடுபாடு ஏற்பட்டது.

1920இல் இவர் டைடில் கார்ட் என்று கூறப்படும் ஒரு திரைப்படத்தின் போக்கு பற்றி பிலிமும் வசனமும் எழுதும் கார்டுகளைத் தயாரிப்பவர் ஆனார். அந்தக் காலத்திய திரைப்படங்கள் மௌனப் படங்கள். ஆகவே இந்த டைட்டில் கார்ட் மிக முக்கியம். அத்தோடு காபி ரைட்டர் எனப்படும் நகல் எடுப்பவராக வசனங்களை எழுதுவதும் இவரது தொழிலாக ஆனது.

பாரமவுண்ட் பிலிம்ஸில் 1922இல் அவர் ஒரு சின்ன படத்தை எடுத்தார். 1925இல் கொலையை மையமாக வைத்த ‘தி ப்ளஷர் கார்டன்’ என்ற முழு நீளப் படத்தையும் எடுத்தார். 

திருமணம்

1926இல் திரைப்பட எடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த  ஆல்மா ல்யூசி ரெவிலி என்பவரை ஹிட்ச்காக் மணம் புரிந்தார். கணவரின் எல்லா திரைப்பட முயற்சிகளிலும் ஆல்மா ஒரு பங்கு வகித்தார். குறிப்பாகச் சொல்லப் போனால் சைகோ என்ற உலகப் புகழ் பெற்ற படத்தின்  குளியலறைக் காட்சியை அமைக்க இவரே ஆலோசனை கூறினார்.

இயல்பாகவே மற்றவரை பயமுறுத்தி ஆனந்திப்பது ஹிட்ச்காக்கின் வழக்கமாக ஆனது. குறும்புத்தனமும் ஏராளம். 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்த நடிக நடிகையரின் கையில் விலங்கு மாட்டி விட்டு சாவி தொலைந்து விட்டதே என்று கூறி அவர்களைத் திடுக்கிட வைத்தார்.

அதே போல கரப்பான், எலிகளைக் கண்டால் பயப்படுவோருக்கு அவற்றை பார்சலில் அனுப்பி வைப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒரு பழக்கம்! இந்த வேடிக்கைகள் எல்லாம் ஸ்டுடியோ செட்டில் இருப்பவரை பயமுறுத்தும்; திகைப்படைய வைக்கும்! 

ஹாலிவுட்டிற்குப் பயணம்

காலம் வேகமாக மாறத் தொடங்கியது. படங்கள் அனைத்தும் பேசும் படங்களாயின. பின்னால் அனைத்தும் வண்ணப்படங்களாக ஆயின.

இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குச் செல்ல எண்ணினார் ஹிட்ச்காக்.

அவர் 1940இல் அமெரிக்கா சென்று கால் பதித்தார். அவர் கால் பதித்த நேரம் முதல் அமெரிக்காவே நடுநடுங்கி ஆட ஆரம்பித்தது. 7 வருட ஒப்பந்தம் ஒன்றை டேவிட் ஓ. செல்ஸ்நிக் என்பவருடன் செய்து கொண்ட அவரது திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது-

இவரது புகழுக்குக் காரணம் அனைவரது பயமும் திகிலுமே தான்! ஒவ்வொரு மனிதரின் மனதின் ஓரத்திலும் பயம் இருக்கிறது என்கிறார் ஹிட்ச்காக்!

ஒரு காட்சியை அமைக்க இவரது கற்பனை வளமும்  இவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பும் இணைந்து இவரது படங்களைப் பார்க்க அனைவரையும் தூண்டியது; ரசிகர்களை ஈர்த்தது. சஸ்பென்ஸ் மன்னனாக இவர்  மாறினார்.

ஒவ்வொரு காட்சியிலும் லைட் எங்கே அமைப்பது, காமராக்களை எங்கே எப்படிப் பொருத்துவது, வசனம் என்ன, இசை எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தீர்மானமாக முடிவு செய்வது இவர் பழக்கம்.

ஒரு காட்சியை மூன்று வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அதில் ஒரு குறையும் காண முடியாதபடி அது இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

தனக்கே உரித்தான பாணியில் திடீரென்று ஒரு காட்சியில் இவர் ஒவ்வொரு படத்திலும் தோன்றுவார். அது எந்தக் காட்சி என்பதும் சஸ்பென்ஸ் தான். ரசிகர்கள் அதைக் கண்டுபிடித்து ஆரவாரிப்பர்.

சைக்கோ மற்றும் தி பேர்ட்ஸ் 

ஹிட்ச்காக் எடுத்த படங்களில் சைக்கோ, தி பேர்ட்ஸ், டயல் எம். ஃபார் மர்டர், ரியர் விண்டோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

தனது படங்களில் நடிக்க வருபவர்களை கால்நடையை நடத்துவது போல நடத்த வேண்டும் என்று இவர் கூறியதாகச் சொல்வதுண்டு.

ஆனால் இவரிடம் படாதபாடு பட்டவர்கள் நடிகைகளே. அவர்களது அங்க அசைவு, கண் பார்வை, புன்சிரிப்பு, நடை,உடைகள், கேச அலங்காரம் என எல்லாவற்றிலும் முடிவு எடுப்பவர் இவரே. 

கதாநாயகி க்ரேஸ் கெல்லி இவரிடம் அகப்பட்டுக் கொண்ட பெரும் நடிகை. ரியர் விண்டோ, டு கேட்ச் எ தீஃப், டயல் எம் ஃபார் மர்டர் ஆகிய மூன்று ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் நடித்த இவர், பின்னால் மொனாகோ இளவரசரைக் கரம் பிடித்தார். ‘டு கேட்ச் எ தீஃப்’ என்ற படத்தில் வரும் கார் ரேஸ் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியாகும்.

***

Leave a comment

Leave a comment