
Date uploaded in London – – 20 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL No 113.

1.அன்னப் பறவையின் அரிய குணம் என்ன ? அதை முதலில் பாடிய கவிஞன் யார் ?
XXXX
2.இந்த குணத்துக்கு ஸம்ஸ்க்ருத்தில் என்ன நியாயம் என்று பெயர்?. தமிழ் மொழியில் நாலடியார் நூலில் இதை எங்கே காணலாம் ?
xxxx
3.விவேக சிந்தாமணி நூலில் இந்தக் கருத்து எங்கே வருகிறது?
XXXX
4.அன்னத்தூவி என்பது என்ன ?
xxxx
5.அன்னப்பறவை மூலம் காதலனுக்கு தூது அனுப்பிய புராண கால பெண்மணி யார் ?
xxxx
6.யாருக்கு அன்னப்பட்சி வாஹனம் ? ராஜ ஹம்சம் எங்கே வசிக்கிறது ? பிரம்மா எப்போது அன்னப் பறவை ஆனார்?
xxxx
7.வேதத்தில் அன்னம் பற்றி வருகிறதா ?
xxxx
8.அன்னம் பற்றி 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியம் என்ன சொல்கிறது ?
XXXX
9.அன்னப் பறவைக்கான வேறு சொற்கள் என்ன?
XXXX
10.ஹம்ச சந்தேசம் (அன்னம் விடு தூது) காவியம் இயற்றியது யார்?
XXXX
ஹம்ச , பரமஹம்ச என்ற சொற்களுக்கு ஆன்மீகப் பொருள் உண்டு ; பரமஹம்ச யோகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர் ; அங்கே ஹம்ச என்பது அன்னப் பறவை அல்ல.
அன்னத்தின் மாமிசம் பயன்படுவது பற்றியும் நூல்கள் பகர்கின்றன. அவற்றைத் தனியாகக் காண்போம்.
xxxx

விடைகள்
1.பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் பிரித்து எடுத்து சாப்பிடும் குணம் ஆகும். 2100 ஆண்டுகளுக்கு முன்னர் சாகுந்தலம் பாடி உலகப் புகழ்பெற்ற காளிதாசன்தான் இதை முதல் முதல் பயன்படுத்துகிறான் அதை ஏனைய புலவர்கள் ‘காப்பி’ அடித்தார்கள்
அதற்கும் முன்னர் யஜுர் வேதத்தில் இதன் அபூர்வ குணம் வந்தாலும் அங்கே சோமரசத்தை தண்ணீரிலிருந்து பிரிக்கும் குணம் என்றே சொல்லப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சோம ரசம், பால் என்று மாற்றப்பட்டுள்ளது.
.ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப: – (சாகுந்தலம் நாடகம்), காளிதாசன்
xxxx
ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:
நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!
XXXX
2.ஹம்ச க்ஷீர நியாய என்று பெயர் ; ஹம்சம் என்பதே தமிழில் அன்னம் ஆகியது . க்ஷீரம் என்றால் பால் ; பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் உண்ணும் பறவை என்பது இதன் பொருள்; அதாவது தீயதை விடுத்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுதல் என்பதை விளக்க வந்த உவமை .
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
xxxx
3.நற்குணங்கள் பதின்மூன்று
மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.
மயில் (பொல்லாததை ஒதுக்கும் குணம்; அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்; பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் அருந்தும்), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் – உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும் ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.- விவேகசிந்தாமணி
XXXXX
4.அன்னத்தூவி
‘’நெடுநல் வாடை’’யில் அன்னப் பறவையின் இறக்கை மென்மை போல (அன்னத்தூவி மயிர் போல) வெண்மையான, மென்மையான படுக்கைகள் இருந்ததாக எழுதி இருக்கின்றனர். நெடுநல்வாடை LINE 132
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்………………………….131-133
இதே கருத்து திருக்குறள், கலித்தொகை, சிலப்பதிகாரத்திலும் வருகிறது .
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். – திருக்குறள் 1120
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை; அதாவது பெண்களின் பாதம் மென்மைக்கும் மென்மையானதாம்.
xxxx

5.நள- தமயந்தி கதையில் தமயந்தி தனது காதலனுக்கு அன்னப்பறவை மூலம் காதல் கடிதம் அனுப்புகிறாள் ; இது மஹாபாரத காலம் முதல் நடந்து வந்துள்ளது . புறநாநூற்றுப் புலவர் ஒருவரும் இப்படி அன்னம் மூலம் செய்தி அனுப்புகிறார் – பாடல் 67
பறவைகளைத் தூதுவிடப் பழக்கல்
பறவைகளின் மூலம் செய்தி அனுப்பும் கலை மஹாபாரதத்துக்கும் முன்னரே (கி.மு.3100-க்கும் முன்னதாக) நளன் காலத்திலேயே இருந்தது.
xxxx
6.சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை ; அவளை அன்ன வாஹினி என்பர்.
இமய மலையிலுள்ள மானச சரோவர் ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.
சிவ பெருமானின் அடி முடியைத்தேடும் போட்டியில் பிரம்மா அன்னம் ஆனார் ; விஷ்ணு பன்றியானார்.
xxxx
7.வேதத்தில் அன்னம்
உலகிலேயே மிகப்பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் அன்னப்பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன . ரிக் வேதத்தில் எட்டுக்கும் மேலான இ டங்களில் எல்லா மண்டலங்களிலும் புலவர்கள் அன்னத்தின் புகழ் பாடுகின்றனர் பின்புறம் கறுப்பு வண்ணம் உடைய பறவைகள், கூட்டமாக ,அணிவகுத்துச் செல்லும் ;தண்ணீரில் நீந்தி மகிழும் ; பெருத்த ஒலி எழுப்பும் ; இரவிலும் முழித்திருக்கும் பறவைகள் என்று ரிக்வேதம் புகழ்கிறது . பாறைகளை குடியேற்றம் நடக்கையில் அவை இரவிலும் முழித்திருந்து பறப்பதை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் அறிவர்.
சோமரசத்தை தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி அன்னப்பறவைக்கு உண்டு என்று யஜுர்வேதம் புகழ்கிறது . வெள்ளைக்காரன் சொல்லுவது போல சோமரசம் போதைப்பொருள் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.. அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் 200-க்கும் மேலான பொருட்களில் இதுவும் ஒன்று
XXXX
8.சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் அன்னம், எகினம், குருகு பற்றிய செய்திகள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம்:
1.குதிரையின் வேகம் வானத்தில், மழைத்துளியில் பறக்கும் அன்னத்தின் வேகம் போல விரைவாக இருந்தது- குறுந்தொகை 205
2.தென் திசைக்கடலில் மீன்களை உண்ணும் அன்னங்கள் வடதிசை இமய மலையை நோக்கிச் செல்வதாக தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். இதை பறவைகள் குடியேற்றம் என்பர்; நீர்வாழ் பறவைகளை இப்பொழுதும் இதைச் செய்கின்றன. காளிதாசன் இன்னும் ஒருபடி சென்று அவை கிரௌஞ்ச கணவாய் வழியாக ( இப்பொழுது இதற்கு நீதி கணவாய் என்று பெயர்) வடக்கு நோக்கி (ரஷ்யா, ஐரோப்பா,) செல்வதையும் பாடியுள்ளார் . அவை பல்லாயிரம் மைல்களுக்கு ஆண்டுதோறும் இப்படி போய் வருவதாக, இப்போழுது கண்டுபிடித்துள்ளார்கள் இதை நம்மவர் அன்றே அறிவர்
காண்க – புறநானூறு 67/பிசிராந்தையார்
நற்றிணை 356 /பரணர்
நற்றிணை70/ வெள்ளிவீதியார் மாற்றும் 54, அகம் 273.
முத்துமாலை வடிவம்
பல்லாயிரம் மைல்களுக்கு இரவிலும் பகலிலும் பறக்கும் பறவைகள் ஆங்கில V வடிவத்தில் பறக்கும் . இதை முத்துமாலை என்று காளிதாசன் வருணிக்கிறார். அதை நக்கீரரும் அப்படியே எழுதி முருகன் கழுத்து முத்து மாலை போல இருந்ததாகப் பாடுகிறார் -காண்க -அகம் 120.
அன்னப்பறவைகள் பறக்கும்போது சப்தம் எழுப்பிக்கொண்டே பறக்கும். இந்த ஒலியை சிலம்பு ஒலியோடு (ரகுவம்சம் 13-33)காளிதாசன் ஓப்பிடுவான். அன்ன நடையைப் பெண்களின் நடைக்கும் ஒப்பிடுகிறான்; இவை அனைத்தும் தமிழிலும் உள்ளன
காளிதாசன் குறிப்பிடும் இடங்கள் — மேகதூதம் 23, 59, 70, 81; 59,71
சாகுந்தலம் 6-28;17, 33 மாளவிகாக்நிமித்ரம் -2-12
விக்ரம ஊர்வசீயம் 4- 2, 3, 4, 6, 20; 4-14 to 17; 59, 1
குமார சம்பவம் 1-30; 4-19; 8-59; 16-33,561-25, 19-40
ரகுவம்சம் 13-33; 1-25
XXXX
9.அஞ்சம் , எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், உன்ன வக்கிராங்கம் ,குருகு, கிரௌஞ்சம்
XXXX
10.சுவாமி நிகமாந்த தேசிகன்
சீதைக்கு ராமன் அன்னம் மூலம் அனுப்பிய தூது

—– subham—–
Tags, Quiz, அன்னம் ,எகினம், பிரம்மா, சரஸ்வதி, வாகனம், வேதத்தில், நள -தமயந்தி, தூது, காதல், ஹம்ச, பாலையும் நீரையும் பிரிக்கும்



















