ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்! (Post No.13,067)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.067

Date uploaded in London – — 6 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்!

ச. நாகராஜன்

சொக்கநாதப் புலவர்

சொக்கநாதப் புலவர் தமிழின் தலை சிறந்த புலவர்களுள் ஒருவர். பல தனிப்பாடல்களைப் பாடியவர் அவர்.

அவற்றில் ஒரு ஆன்மீகப் பாடலையும் ஒரு அகப் பாடலையும் இங்கு பார்ப்போம்.

பலசரக்குப் பாட்டில் ஆன்மீகம்!

வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன

இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை – மங்காத

சீரகத்தைத் தந்தீரேற் றேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியா ரே.

பாடலைப் பார்த்தவுடன் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகிய சொற்களைப் பார்த்து புன்சிரிப்பு வரும் நமக்கு.

இந்த சமையல் சரக்குகளை வைத்து என்ன ஒரு பாட்டு இருக்க முடியும் என்ற கருத்து இருந்தால் அது தவறான கருத்து.

பெரும் ஆன்மீகக் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர் இங்கு.

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

ஏரகத்துச் செட்டியாரே – திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

வெம்  – கொடிதாகிய

காயம் – இந்த உடம்பு

சுக்கு ஆனால் – சுக்குப் போல உலர்ந்தால்

வெந்தயத்தால் – வெந்தை + அத்தால் என்று பிரித்துப் படித்துப் பொருள் கொள்ள வேண்டும். – வெப்பமாகிய வினையினால்

ஆவதென்ன – ஆவது தான் என்ன?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – உடம்பாகிய இந்த சரக்கை இங்கு யார் தான் சுமந்திருப்பார்?

மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் –  குறையாத சீரகத்தைத் தந்தீர்கள் என்றால் பெருங்காயத்தைத் தேடமாட்டேன்.

அழியாத சிறப்புள்ள இடமாகிய (சீர் + அகத்தை) மோக்ஷத்தைக் கொடுத்தீர் என்றால் (பெரும் +காயம்)_மிகுதியாக உடம்புகளைத் தேடி எதற்குப் போகப் போகிறேன் என்று ஒரு அர்த்தமும் உண்டு.

செட்டியார் என்றால் முருகன்!

பலசரக்குப் பொருள்களைத் தரும் செட்டியாரை வைத்து முருகனையே பாடி ஒரு ஆன்மீகக் கருத்தை விதைக்கிறார் சொக்கநாதப் புலவர்!

மார்பகப் பாட்டில் அகப் பொருள்!

பெண்களின் மார்பகத்தை – முலையை – வைத்து அகப்பொருளில் சுவை தோன்ற ஒரு பாடலைத் தருகிறார் சொக்கநாதப் புலவர்.

முன்னே யிரண்டு முலை முற்றியபின் னாலுமுலை

எந்நேர மென்மதலைக் கெட்டுமுலை – எந்நாளும்

பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாணாநின் பாகனுக்கீங்

கென்னாக மென்னா மினி

இது என்ன இரண்டு முலை,  நாலு முலை, எட்டு முலை – ஒரு பெண்ணுக்கு இரு முலைகள் தானே,  நாலு முலைகளும் எட்டு முலைகளும் எப்படி வந்தது – கேட்கத் தோன்றுகிறதல்லவா?

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

முன்னே இரண்டு முலை – முற்காலத்தில் இரண்டு முலைகளாய் இருந்தன

முற்றிய பின் நாலு முலை – நாலு என்றால் தொங்கிய என்று பொருள். முதிர்ந்த பிறகு தொங்கிய முலைகள் ஆயின.

எந்நேரம் – எப்பொழுதும்

என் மதலைக்கு – என் குழந்தையின் பொருட்டு

எட்டு முலை – எட்டுகின்ற முலைகள் ஆயின

எந்நாளும் – எக்காலமும்

பைநாகம் சூழ் – படத்தை உடைய பாம்பினால் வளைக்கப்பட்ட

மதுரை – மதுரை மாநகரில் உள்ள

பாணா – பாணனே

நின் பாகனுக்கு – உனது தோழனுக்கு

என் ஆகம் – எனது உடம்பு

இங்கு இனி என் ஆம் – இவ்விடத்தில் இனி என்ன பயன்?

சொற்களை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுவதில் தேர்ந்தவர்கள் புலவர்கள்! அவர்கள் பாடலைக் கேட்டு ஆனந்திப்பது பெரும் சுகம் அல்லவா!

**

Leave a comment

Leave a comment