WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.078
Date uploaded in London – — 10 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம விதிகளிலிருந்து விடுதலை!
ச.நாகராஜன்
கர்மபாஷோச்சேத் – அதாவது கர்ம விதிகளிலிருந்து விடுதலை என்ற முக்கியமான அத்தியாயம் யோக வாசிஷ்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது.
1. கர்மபல நியம:
2.
கர்மத்தைத் தொடர்ந்து வரும் பலன்கள்
இதில் கர்ம ரகசியம் விரிவாக விளக்கப்படுகிறது.
ந ச ஷைலோ ந தத்வியோம ந சோப்பிதஸ்ச ந விஷ்டபம்|
அஸ்தி யத்ர பலம் நாஸ்தி க்ருதநாமாத்மகர்மணாம் ||
செய்யப்பட்ட ஒரு கர்மத்திலிருந்து அதன் விளைவு அல்லது பலனிலிருந்து தப்பிக்க ஒரு மலையும் இல்லை, ஒரு வானமும் இல்லை, ஒரு கடலும் இல்லை, ஒரு சொர்க்கமும் இல்லை.
அதாவது கர்மம் ஒன்றைப் புரிந்து விட்ட பின்னர் ஒருவனால் அது தரும் பலனிருந்து எங்கு சென்றாலும் விடுதலை பெற முடியாது. செய்ததற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஐஹிகம் ப்ராவதனம் வாபி கர்ம யத்ரசித்தம் ஸ்புரத் |
பௌருஷோசௌ பரோ யத்னோ ந கதாசன நிஷ்பல: ||
பிரகாசிக்கின்ற ஒரு செயலானது, இந்த உலகத்தில் செய்தாலும் சரி அல்லது பூர்வ ஜென்மத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக இருந்தாலும் சரி, அது பலனைத் தரும்போது அந்த உயரிய மனித முயற்சியானது ஒரு போதும் பலனை அளிக்காமல் போகாது.
3. கர்ம ஸ்வரூபம்
கர்மத்தின் இயற்கை
க்ரியாஸ்பந்தோ ஜகத்யஸ்மிமன்கர்மேதி கதிதோ புதை: |
பூர்வ தஸ்ய மனோ தேஹம் கர்மாதஸ்சித்தமேவ ஹி ||
அறிஞர்களால் இந்த உலகில் செயல்களின் இயக்கமானது கர்மம் என்று விளக்கப்படுகிறது. முதலில் மனமே அதன் உடலாக இருந்தது. (அதாவது செயலானது மனதில் முதலில் உதிக்கிறது) ஆகவே செயல் என்பது மனமே தான்.
மனமே அனைத்து கர்மங்களுக்கும் காரணம் என்பது இங்கு விளக்கப்படுகிறது.
மானசோயம் சமுத்தமேஷ: கலாகலநரூபத: |
ஏதத்தகர்மணாம் பீஜம் பலமஸ்யைவ வித்யதே ||
இயக்கத்தின் புரிதல் பற்றிய இயற்கையினால், செயலின் விரிவு மனதைச் சார்ந்து இருக்கிறது. இதுவே அந்த செயல்களுக்கான விதையாகும். அதன் பலன் (அல்லது விளைவு) இந்த மனதிற்கே சம்பவிக்கிறது.
கர்மபீஜம் மன:ஸ்பந்த: கத்யதேதானுபூயதே |
க்ரியாஸ்து விவிதாஸ்தஸ்ய ஷாகாஸித்ரபலாஸ்தரோ: ||
கர்மத்தின் விதையானது மனதின் இயக்கமே ஆகும். அது அப்படித்தான் என்று பிரகடனப்படுத்தப்படுகிறது. அனுபவமாகவும் கூட ஆகிறது. வெவ்வெறு உடல் சம்பந்தமான இயக்கங்கள் அந்த மரத்தின் வெவ்வெறு பழங்களைத் தரும் கிளைகளாகும்.
மனத்தில் எண்ணங்கள் எழுகின்றன. அது கர்மத்தில் முடிகிறது. வெவ்வெறு எண்ணங்கள் வெவ்வேறு உடல் இயக்கங்களைச் செய்ய கர்மம் என்னும் மரத்தின் பல்வேறு கிளைகளாக ஆகின்றன. அந்தக் கிளைகளில் செய்கைக்குத் தக்கவாறு வெவ்வேறு பழங்கள் விளைகின்றன.
மிகத் தெளிவாக மனமே அனைத்திற்கும் ஆதி காரணம் என்று இங்கு விளக்கப்படுகிறது.
ஒரு கர்மத்தைச் செய்து விட்டு அதன் பலனிலிருந்து தப்பி விடலாம் என்று யாரும் எண்ணக் கூடாது. ஏனென்றால் அந்தக் கர்மத்தைச் செய்தவன் எங்கு சென்றாலும் அது பூமியில் உள்ள மலையோ, கடலோ அல்லது வானமோ ஏன் சொர்க்கமோ கூட சென்றாலும் அவனால் செய்த கர்மத்தின் விளைவிலிருந்து தப்பிக்க முடியாது.
நல்ல செயல் செய்தால் நல்லதே திரும்பக் கிடைக்கும்.
தீய செயல் செய்தால் தீமையே திரும்ப வரும்.
இதுதான் கர்ம ரகசியம்!
**