மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் (Post.13,124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,124

Date uploaded in London – –   25 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முதலில் நாகார்ஜுனா (Nagarjuna) யார் என்ற விஷயத்தைச் சொல்கிறேன் . ரசவாத விஷயங்களை முதலில் நமக்கு எடுத்துரைத்த பெரிய அறிஞர். பிராமணராகப் பிறந்து புத்த மதத்தைத் தழுவியவ மஹா மேதை . மஹாயான புத்த மதக் கிளைக்கு வித்தூன்றியவர். டில்லியில் துருப்பிடிக்காமல் இன்று வரை வெட்ட வெளியில் நிற்கும் உலக அதிசய இரும்புத் தூண்( Iron Pillar in Delhi ) உருவான காலமும் இவர் காலமும் ஒன்றே என்பது புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் ரகு வீராவின் கருத்து.

இரும்பு , ஈயம் போன்ற  விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால்  அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது

குமார ஜீவ என்பவர்தான் (Kumarajiva)  கிபி 405-ல் முதல் முதலில் இவர் பெயரை எழுதியுள்ளதால் நாகார்ஜுனா 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது உறுதியாகிறது . அவர் அர்ஜுன (மருத மரம்) மரத்துக்கு அடியில் பிறந்ததால் நாக+ அர்ஜுனன் என்று பெயர் சூட்டப்பட்டதாக குமார ஜீவ கூறுகிறார். நாகர் ஒருவரிடம் விஷயங்களைக் கற்ற தால் நாகர்ஜுனன் என்றழைக்கப்பட்டார்.

இன்னும் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் அவருடைய நூல்கள் நமக்கு சீனாவிலிருந்துதான் கிடைத்தன . இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தா பல்கலைக்கழக  நூலகத்தை முஸ்லீம் வெறியர்கள் தீக்கிரையாக்கியதையும் அந்த லைப்ரரி 7 நாட்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியதையும் உலகம் அறியும். அந்த சர்வகலாசாலையில்  படித்தவர்கள்,  புத்தமதம்  தொடர்பான எல்லா நூல்களையும் சீன மொழியில்  மொழிபெயர்த்து,  கொண்டு சென்றனர். அதனால் நமக்கு பல நூல்கள் மீண்டும் கிடைத்தன.

சீன மொழியில் அவரை லூங் ஷு அல்லது லுங் மெங் Lung-shu, Lung-Meng என்று  அழைத்தனர். அவர் முதல்  நூற்றாண்டில் பிறந்தார் என்று புகழ் பெற்ற சீனப்  பயணி இட்சிங் I-Tsing கூறுகிறார்.

அவரும் நாகார்ஜுனா,  கனிஷ்கர் என்னும் குஷான மன்னர் காலத்தவர் என்றே பகர்கிறார் ; அதாவது முதல் நூற்றாண்டு . குணபத்ரா , போதிருசி,  சிக்ஷனந்தா ஆகியோரும் நாகார்ஜுனா பெயரைக் குறிப்பிடுகின்றனர் .

திபெத்திய நூல்களில்தான் இவரைப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை,  இவரை ஒரு மந்திரவாதி என்றும் விதர்ப்ப நாட்டில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கல்யாணமாகியும் நீண்டகாலம் குழந்தை இல்லாமல் இருந்தார் என்றும் எழுதியுள்ளன . மகத சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகமான நாளந்தாவில் சேரும்படி குருமார் ஸ்ரீ சரக பத்ரா கூறியவாறு அவர் நாளந்தாவில் சேர்ந்தார். அங்கு பெளத்தராகவும் மாறினார்;  சரக பத்ரா இறந்தவுடன் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது  அவருடடைய குருவின் பெயர் ராஹுல என்று திபெத்திய நூல்கள் செப்பும். அவர் உண்டாக்கிய மஹாயான புத்த மதப் பிரிவு திபெத், சீனா, ஜப்பான், கொரியா , மங்கோலியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது

மருத்துவக் கண்டுபிடிப்புகள்

கண்நோய் தீர்க்கும் பல மருந்துகளையும், காயசித்தி உண்டாக்கும் அற்புதக் குளிகைகளையும் நாகார்ஜுனர் கண்டுபிடித்தார். தொலைதூர பிரதேசங்களில் வறுமையை நீக்க அவர் தங்கக்  கட்டிகளைக் கொடுத்து தானியம் வாங்கி விநியோகித்ததாகவும் கதைகள் உண்டு . புத்த கயா என்னும் புனிதத் தலம்,  வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்புச் சுவர்களை எழுப்பிய பெருமையும் அவருக்குண்டு என்று திபெத்திய வரலாற்று ஆசிரியர் தார நாத சொல்கிறார். தென் இந்தியாவில் பல தங்கச் சுரங்கங்களையும் அவர் கண்டுபிடித்தார் .

வேதியியல் (Chemistry) தழைக்கும் வரை மனித இனத்தைப் பசியும் பட்டினியும் பாதிக்காது என்பது அவரது நம்பிக்கை .

யோகரத்னமாலா

அவர் எழுதிய யோகரத்ன மாலா சீன மொழியில் கிடைத்தை அப்படியே ஸ்லோகம் வாரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்; அதைப்  படிக்கும்போது மாயா ஜாலம், மந்திர தந்திரம்தான் நினைவுக்கு வருகிறது;  சுடுகாட்டில் செய்யும் மருந்துகள் , பெண் உறுப்புக்குள் வைத்து எடுக்கும் மருந்துகள், மனித மூளையை எடுத்துச் செய்யும் மருந்துகள், தவளைக் கொழுப்பை வைத்துச் செய்யும் மருந்துகள் என்று நூற்றுக் கணக்கில் இருப்பதால் இதை புத்த மதத் துறவி நாகார்ஜுனா எழுதினாரா அல்லது அவர் பெயரில் பிற்காலத்தில் வந்தவர் எழுதினாரா என்ற வியப்பு மேலிடும் .  ஆயினும் சீன மொழியில் மொழி ஆக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வைத்திருப்பதால் இது புத்த மத நூல் என்பதில் ஐயப்பாடு இல்லை .

எனக்கு இந்த யோகரத்னமாலா லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் கிடைத்தது. அதிலுள்ள விஷயங்களை நானே உங்களுக்கு எழுத முடியாத விஷயங்களாக இருக்கின்றன ; ஆகையால் நாகரீகம் மிக்க விஷயங்களை மட்டும் எழுதுகிறேன் .

ரசஞ்சனா (பாதரசத்தின் மஞ்சள் நிற ஆக்சைட்), ஷைலஜா (பெர்மெலியா பெறப்போராடா என்னும் செடி), தேன் , யஷ்டி மது (கிளைசீராசா க்ளைப்ரா என்னும் தாவரம்), ஒரு பெண்ணின் முதல் மாத விடாயில் கிடைக்கும் ரத்தம், லாங்குலி மலர்கள் (க்ளோரியோசா சுபர்பா பூ) ஆகியவற்றைக் கொண்டு ஒரு மாத்திரை தயாரியுங்கள் ; இதை வெள்ளி அல்லது தங்கம் அல்லது தாமிர தாயத்துக்குள் வைத்து அணியுங்கள். இதை யார் கழுத்தில் அணிகிறாரோ அவரை மற்றவர்கள் காண (Invisible) முடியாது

இதுபோல நிறைய ஸ்லோகங்கள் உள்ளன. இன்னும் ஒரு கட்டுரையில் அவைகளைக் காண்போம் .

–சுபம்– 

Tags- மறையும் வித்தை, மாயம், நாகார்ஜுனா, யோகரத்ன மாலா , சீன மொழி, நாளந்தா பல்கலைக் கழகம், ரசவாதம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் , மகாயானம்

Leave a comment

Leave a comment