Thor Hyerdhal
Post No. 13.138
Date uploaded in London – — 14 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்!
ச. நாகராஜன்
இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்; அதற்கு நன்றி சொல்லி அதைப் பாதுகாப்பது மனிதனின் கடமை.
ஆனால் நடப்பதோ?!
நார்வேஜியின் சாகஸவீரர் கண்ட காட்சி
நார்வேயைச் சேர்ந்த சாகஸவீரர் தோர் ஹையர்தால் (Thor Heyerdahl) என்பவர் ஒரு சமயம் பெருவிலிருந்து ஓஸியானாவிற்குக் கடலில் சென்று கொண்டிருந்தார்.
அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. கடலிலும், கடற்கரை பக்கத்திலும் சரி மனிதர்களில் செயல்பாடுகள் அவரை திகிலுறச் செய்தன. ஒவ்வொரு நாளும் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையும், தொழிலக கழிவுகளையும் கடலில் மிதக்க விட்டுக் கொண்டே இருந்தனர்.
கடல் நீரில் இருந்த அசுத்தமோ அசுத்தம்; அதில் ஒரு டூத் பிரஷைக் கூட அலசி சுத்தப் படுத்த முடியாது. அவ்வளவு அசுத்தம்; அசிங்கம்!
இப்படி கடல் நீரை அசுத்தப் படுத்துவதால் உலகெங்குமுள்ள நீர் வாழ் பிராணிகளில் நூறு கோடி என்ற அளவில் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.
சற்று எண்ணிப் பார்ப்போம்; விழிப்புணர்வு பெறுவோம். அனைவருக்கும் இதைச் சொல்லி விழிப்புணர்வு பெறச் செய்வோம்.
மாஸேதுங்கின் மடமை
உலகின் ஆகப் பெரும் முட்டாள்களில் தலையாய இடத்தைப் பிடிக்க முனைபவர்களில் சர்வாதிகாரியான மாஸேதுங் ஒருவர்.
ஹிட்லரை விட கொடிய மாபாதகன் ஸ்டாலின் என்றால் அதை விட கொடிய மாபாதகன் மாஸேதுங் என்று சொல்லலாம்.
அவர் செய்த முட்டாள்தனமாநன காரியங்கள் ஏராளம், ஏராளம்.
எடுத்துக்காட்டிற்கு ஒன்றே ஒன்று:
1958-ம் ஆண்டு. நிலத்தையும் பயிர்களையும் காக்க ஒரு நல்ல ஐடியா உதித்தது மாஸேதுங் மூளையில்!
பீகிங்கில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அளித்தார் அவர்.
எதற்காக?
பயிர்களைக் காக்க!
சிட்டுக்குருவிகள் நிலத்தைப் பாழ் செய்கிறதாம்.
அதற்காக பள்ளிச் சிறுவர்களுக்கு விடுமுறை அளித்த மாஸேதுங் அவர்களை வயல்களுக்குச் சென்று இடை விடாமல் கை தட்டச் சொன்னார்.
ஒரு புல்லட் இல்லை. ஒரு பொறி இல்லை.
வெறும் கைதட்டல் தான்.
இடைவிடாமல் ஷிப்ட் முறையில் சிறுவர்கள் கை தட்டவே அந்த இடைவிடாத ஒலியால் அனைத்துச் சிட்டுக் குருவிகளும் மயங்கி விழுந்தன; இறந்தன!
இறந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 30 லட்சம்!
எவ்வளவு பெரிய சாதனை!
தனது சாதனையை மக்களிடம் சொல்லி பெருமை அடித்துக் கொண்டார் மாஸேதுங்!
ஆனால் அடுத்த வருடமே மக்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர். பூச்சிகள் பெருகின. சிட்டுக்குருவிகள் உணவாகத் தின்றதை விட அதிகமாக அவை தானியத்தை நாசம் செய்தன.
விளைவு?
1958-ல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. 1962-ம் ஆண்டு வரை அந்தப் பஞ்சம் நீடித்தது.
360 லட்சம் பேர்கள் மாண்டனர்.
இப்படிப்பட்ட முட்டாளை உலகம் இனி தான் காண வேண்டும்!!
நேருவின் தவளை சாகஸம்
பாரத பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அன்னிய செலாவணியைப் பெருமளவு பெருக்க எண்ணி, தவளைகளை பிரான்ஸுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆணை பிறப்பித்தார்.
ஆனால் மஹராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயிகளோ உடனே இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஏனெனில், “பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகி விட்டன. தவளைகள் இருந்தால் இப்படிப்பட்ட பூச்சிகள் இருக்காது” என்று அவர்கள் எடுத்துக் காட்டினர்.
தவளைகளை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது!
இப்படி உதாரணங்கள் ஏராளம் உள்ளது.
இயற்கையின் வழிகள் அபாரமானவை!
அதில் “மாஸேதுங் மூளை” புகுந்து தன் திறமையைக் காட்டக் கூடாது!
அதைக் காப்பதில் தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும்.
***