கங்கை  மீது அணை – சரியா? (Post No.13,141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.141

Date uploaded in London – — 15 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கை  மீது அணை – சரியா? 

ச.நாகராஜன்

 சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள் என்ற எனது முந்தைய கட்டுரையில் டாக்டர் கிருஷ்ண நாராயண் சென் (Dr krishna Narayan Sen) அவர்கள் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.

அவர் கங்கை மீது அணை கட்டுவது சரியா என்பதைக் குறித்த தனது கருத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

அதை இங்கு கீழே தருகிறேன்.

ஒரு முறை ஜோஷி மடம் ஜகத்குரு சங்கராசாரியர் இப்படிக் குறிப்பிட்டார் : “எந்தப் பணியை நாம் செய்தாலும் அதில் நமக்கு பண லாபம் எவ்வளவு கிடைக்கிறது, ஆத்ம லாபம் எவ்வளவு கிடைக்கிறது என்று பார்த்தே செய்கிறோம். ஆனால் கங்கையின் மீது அணைகளைக் கட்டுவதால் இந்த இரண்டையுமே நாம் இழந்து விட்டோம்.”

ஒடி வரும் நீரைத் தடுத்துத் தேக்கி ஒரு அணையை உருவாக்குகிறோம். அது வெள்ளத்தைத் தடுக்கிறது, வயல்களுக்கு நீரைப் பாய்ச்ச வகை செய்கிறது, தொழிலகங்களுக்கு உதவுகிறது, மனிதனுக்கு நீரைத் தந்து உதவுகிறது, ஹைட்ரோ எலெக்ட்ரிக் ஆற்றலை உருவாக்கப் பயன்படுகிறது.

இவை எல்லாம் பேப்பரில் எழுதச் சரியானவை தான். ஆனால் நடைமுறையில் ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன.  சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.  செடி, கொடி, மலர்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட அணைகளால் 3,50,000 தாவரம் மற்றும் உயிரினங்களும் 110 லட்சம் மிருக இனங்களும் அழிந்து விட்டன என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.

மரங்கள், மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள் க்ரீன்ஹவுஸ் வாயு எனும் நச்சுப் புகையினால் உருமாறி அழிகின்றன. உயிர் பிழைத்திருக்கும் நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன.

இயல்பாகச் செல்லும் நீரோட்டம் பாதிக்கப்படுவதால் தாவர வகைகளும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

ஒரே இடத்தில் ஏராளமான நீர் தேக்கப்படுவதால் பூமியில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக பூகம்பம் ஏற்படுகிறது. அணையின் அடிப்பகுதியில் உள்ள பூமிப் பரப்பில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.

அஹ்மத் ஜொக்லஃப் என்னும் பல்லுயிர் இனப் பெருக்கம் பற்றிய ஐ நா அறிஞர் (AHMED DJOGHLAF, HEAD OF UN BIOLOGICAL DIVERSITY), ஒவ்வொரு மணி நேரமும் மூன்று உயிரினங்கள் அழிகின்றன – அதாவது ஒரு நாளுக்கு 72 உயிரினங்கள் அழிகின்றன- என்கிறார். அத்தோடு ஒவ்வொரு வருடமும் பல்லுயிர் இனப்பெருக்க அழிவால் 17000 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நீரை மாசுபடுத்துவதால் ஒவ்வொரு வருடமும் 4 கோடி குழந்தைகள் இறக்கின்றன. 10 கோடி நீர் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுபடுவதால் ஒவ்வொரு வருடமும் அழிகின்றன. இது கடலில் சேரும் தொழிலகக் கழிவுகளால் ஏற்படும் அசுத்தத்தாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது.

மூன்று பெரும் விஞ்ஞானிகள் கடவுள் மீதான நம்பிக்கை அறிவியல் முன்னேற்றத்துடன் இணைந்தே இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானியான டாக்டர் பிரான்ஸில் எஸ் காலின்ஸ் (Dr Francis S Collins, renowned geneticist of American Government), ஹார்வர்ட் வானியல் பேராசிரியரான டாக்டர் ஓவன் ஜிஞ்ஜெரிச் (Dr Owen Gingerich, emeritus professor of Astronomy in Harvard) மற்றும் ஸ்டான்ஃபோர்ட் உயிரியல் வல்லுநரான டாக்டர் ஜான் ரப்கார்டன் (Dr John Roughgarden, Evolutionary biologist at Stanford) ஆகிய மூவரே இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் படைப்பானது தகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒன்று. அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகுந்த அவசியம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார் : “கடவுள் உலகத்தை எப்படிப் படைத்தார் என அறிய நான் விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்வில் எனக்கு ஆர்வம் இல்லை. அவனது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் வெறும் விவரங்களே”

(I want to know, how God created the world. I am not interested in this or that phenomenon. I want to know His thoughts, the rest are details.)

ஆக, பெரும் அறிஞர்களே கவலைப்படும் அளவு மனிதனின் சுயநலம் மிக்க செயல்பாடுகள் உள்ளன, அவை படைப்பின் அருமையை சிதைக்கின்றன என்பது தெளிவாகிறது.

ஒவ்வொருவரும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தி அதைக் காத்தால் இயற்கை நம்மை வாழ வைக்கும்!

***

Leave a comment

Leave a comment