சிவபிரகாச சுவாமிகளின் சிவ பார்வதி புதிர்ப் பாடல்! (Post No.13,144)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.144

Date uploaded in London – — 16 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிவபிரகாச சுவாமிகளின் சிவ பார்வதி புதிர்ப் பாடல்! 

ச. நாகராஜன்

சிவப்பிரகாச சுவாமிகள் சிறந்த சிவ பக்தர்.

அவர் தமிழில் சிலேடையிலும் புதிர்ப் பாடல் இயற்றுவதிலும் கூட வல்லவர்.

குறும்பாகக் கேள்வி கேட்டு பதில் அளிக்கும் வகையிலான பாடலை சிவ- பார்வதி சம்வாதமாக அவர் இயற்றியுள்ள பாடல்கள் பல.

ஒன்றை இங்கே காணலாம்.

பாடல் இது தான்:

ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடங்கையா ரென்னவுமை வினவும்

  அன்னதொரு மடமங்கை யென்றுவெண் டிரைகொழித் தழகொழுகு  

       தண்புனலெனத்

துய்யவொளி யானனங் கரியவிழி காதுவாய் தோயத்தி 

                லுண்டோவெனச்

    சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை தூயகெங்  

       குமுதமென்னப்

பொய்யென நினைத்துநற் கொங்கையுங் கூந்தலும் புனலிடை யுண்டோவெனப்

  புற்புதஞ் சைவலம் தெனவேமறுத்துப் புகன்றிடுதி நங்காயெனத்

தையலவ ளேயென்ன நாணொடு வணங்கி யென்றன்பிழை பொறுத்தி யென்றே

 சங்கரனுடைத்திடத் திருவுள மகிழ்ந்தசிவ சிங்கரி யுமைக் காக்கவே.

பார்வதி சிவபிரானைக் கேட்கிறாள் – உங்கள் தலையின் உறைகின்ற மடமங்கை யார் என்று.

சிவபிரான் கூறுகிறார் : அப்படி உனக்குத் தோன்றுவது ஒரு இளம் பெண் இல்லை. அது குளிர்ந்த நீராகும்.

பார்வதி கேட்கிறாள் : அப்படியானால் அதில் முகம், கரிய விழிகள், காது வாய் உண்டோ அதில்?

சிவபிரான் கூறுகிறார் : தாமரை மலரும், கருங்குவளை மலரும் வள்ளைக் கொடியும், செவ்வல்லி மலருமே அவை.

பார்வதி கேட்கிறாள் : அழகிய மார்பகங்களும் கூந்தலும் நீரில் உண்டோ?

சிவபிரான் மறுத்துக் கூறுகிறார் : அவை நீர்க்குமிழியும் , பாசியும் தான்.

பெண்ணே என்று சிவபிரான் பார்வதியை அழைத்து இப்படிச் சொல்லும் போது, தலையிலிருந்த கங்கையானவள் தன்னைத் தான் சிவபிரான் அழைத்தார் என்று எண்ணி ஏன் என்கிறாள்.

தனது குட்டு வெளிப்பட்டதைக் கண்ட சிவபிரான் என் பிழையைப் பொறுத்து அருள் என்று பார்வதியிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

இதனால் பார்வதி மனம் மிக மகிழ்கிறாள்.

இப்படிப்பட்ட சிவனும் பார்வதியும் உங்களைக் காக்கக் கடவது!

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

ஐய – ஐயனே

நின் சென்னிமிசை உறைகின்ற மடமங்கை – உன் தலையில் வசிக்கின்ற இளம் பெண்

யார் என்ன – யார் என்று

உமை வினவ – உமாதேவியார் கேட்க

அன்னது ஒரு மடமங்கை அன்று – அப்படி உனக்குத் தோன்றுவது ஒரு இளம் பெண் அல்லள்

வெள்திரை கொழித்து – வெண்மையாகிய அலைகல் வீசி

அழகு ஒழுகு தண்புனல் என – அழகு ஒழுகும் குளிர்ந்த நீரே அது என்று சொல்ல

துய்ய ஒளி – பரிசுத்தமாகிய ஒளியை உடைய

ஆநநம் – முகமும்

கரிய விழி – கருங்கண்களும் ‘

காது – செவிகளும்

வாய் – வாயும்

தோயத்தில் உண்டோ என – நீரில் உண்டோ என்று வினவ

சொல் அரு – முகம் முதலியன போலத் தோன்றுவது சொல்லுதற்கரிய

கமல மலர் – தாமரை மலரும்

காவிமலர் – கருங்குவளை மலரும்

கொடி வள்ளை – வள்ளைக் கொடியும்

தூயசெங்குமுதம் – பரிசுத்தமாகிய செவ்வல்லி மலருமேயாம்

என்ன – என்று சிவபிரான் கூற

பொய்யென நினைத்து – பொய் என்று நினைத்து

நல் கொங்கையும் கூந்தலும் – அழகு கொண்ட மார்பகங்களும் கூந்தலும்

புனலிடை உண்டோ என — நீரிடத்தில் உண்டோ என்று பார்வதி கேட்க

புர்புதம் சைவலமதெனவே மறுத்துப் புகன்றிடுதி – அப்படித் தோன்றுவது நீர்க்குமிழியும் பாசியுமாம் என்றே மறுத்துச் சொல்வாய்

நங்காய் என – பெண்ணே என்று சொல்ல

தையலாள் ஏன் என்ன – தன்னை அழைத்ததாக எண்ணி அந்தத் தங்கையானவள் ஏன் என்று கேட்கவும்

நாணொடு வணங்கி – வெட்கத்தோடு வணங்கி

என்பிழை பொறுத்திடு என்று – என் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று

சங்கரன் உரைத்திட – சிவபெருமான் சொல்ல

திருவுள்ளம் மகிழ்ந்த – மனம்  மகிழ்ந்த

சிவசங்கரி உமைக் காக்க – சிவசங்கரி உங்களைக் காக்கக் கடவது

 இப்பாடலில் சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு அற்புதமான காட்சியை அரங்கேற்றுகிறார்.

பாடலைப் படித்து மகிழ்கிறோம்; சிவ பார்வதி அருளைப் பெறுகிறோம்.

வாழ்க தமிழ்

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

***

Leave a comment

Leave a comment