Post No. 13.172
Date uploaded in London – — 24 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலரில் சமீபத்தில் வெளியான கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஹென்றி போர்டு – ஆர்வம், உழைப்பு, பொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 2
எடிஸனின் கடைசி மூச்சு
எடிஸன் மீதான அவரது பக்தி அளப்பரியது. ஒரே ஒரு அதிசயமான எடுத்துக்காட்டைக் கூறலாம்.
எடிஸன் மரணப்படுக்கையில் இருக்கிறார், இறக்கப்போகிறார் என்பதை அறிந்தவுடன் போர்டு அவரது மகனிடம் ஓடோடிச் சென்று ஒரு சின்ன டெஸ்ட் டியூப் குழாயைக் கொடுத்தார். “எடிஸனின் கடைசி மூச்சை இதில் எனக்குப் பிடித்துக் கொடுங்கள்” என்று வேண்டினார்.
விசித்திரமான இந்த வேண்டுகோளை எடிஸனின் மகனும் ஏற்றார். அவரது கடைசி மூச்சு அந்த டெஸ்ட் டியூப் குழாயில் பிடிக்கப்பட்டது. எடிஸனின் மகன் உடனடியாக ஒரு கார்க்கை மேலே வைத்து அதை சீலிட்டார்.
போர்டு அதை தான் அமைத்த ‘தி ஹென்றிபோர்டு” என்ற மியூஸியத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
அதை இன்றும் அந்த மியூஸியத்தில் காணலாம்.
சோயா பீன்ஸ் தகடினால் ஆன கார்!
போர்டுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்ஸன் அவரை செனட்டுக்கு நிற்குமாறு வற்புறுத்த அவரும் போட்டியிட்டார். ஆனால் 4500 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
சமாதானத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் உலக அமைதிக்காகப் பாடுபட்டார்.
இறக்கும் போது அவர் தன் பெயரில் 161 பேடண்ட் காப்புரிமைகளைக் கொண்டிருந்தார்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் பெரும் அக்கறை கொண்டவர் அவர். காரின் வெளிப்புறத் தகடுகளை சோயா பீன்ஸினால் செய்து காரின் எடையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
இரண்டாம் உலகப் போர் குறுக்கிடவே அவரால் தனது சோயாபீன்ஸினால் ஆன தகடுகள் கொண்ட காரை உற்பத்தி செய்ய முடியவில்லை.
மறுபிறப்பில் நம்பிக்கை
தான் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று தீவிரமாக நம்பினார் போர்டு. இதற்குக் காரணம் மறுபிறப்பில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஆர்வமும் உழைப்பும் வெற்றி தரும். இருக்கவே இருக்கிறது புனர்ஜென்மம். பொறுமையுடன் இருந்தால் அடுத்த ஜன்மத்திலாவது வெற்றி வராமலா போய்விடும் என்பது அவரது எண்ணம்.
தன் வெற்றிக்குக் காரணம் ஏதோ ஒரு மகத்தான சக்தி தான் என்று அவர் கூறினார். “மகத்தான சக்தி ஒன்று தனது அலைகளை என் மீது வீசிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. மறைந்திருக்கும் ஆற்றல் சக்திகளே என்னை முன்னுக்குத் தள்ளி வழி நடத்துகின்றன” என்றார் அவர்.
தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே சான்பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் (San Francisco Examiner) என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:
“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை.
ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டு கொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை.
மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர் மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது.
இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே”
போர்டு கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.
இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.
மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.
மறைவு
பெருமூளையில் ஏற்பட்ட இரத்த ஒழுக்கினால் 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அவர் தனது 83-ம் வயதில் அவர் மரணமடைந்தார்.
வரலாறு கண்ட மாமனிதர்
சாதாரண கடிகார ரிப்பேர் செய்து கடிகார பாகங்களைக் கழட்டி அதை மறுபடியும் பூட்டி தனது வாழ்க்கைப் பாதையை ஆரம்பித்த போர்டு 200 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக ஆனது எதைக் குறிக்கிறது? அவரது ஆர்வம், உழைப்பு, பொறுமை ஆகியவற்றையே குறிக்கிறது.
ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. 200 பில்லியன் என்றால் 200 நூறு கோடி டாலர். ஒரு டாலரின் மதிப்பு 83 ரூபாய் என்றால் இன்றைய இந்திய மதிப்பின் படி அவரது சொத்தை நாமே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!
வரலாற்றில் நாம் காணும் அதிசய மனிதராகத் திகழும் இவரது பொன்மொழி:
செய்யும் ஒரு வேலையில் வெற்றி காணவேண்டுமெனில்!
, எந்த ஒரு அமைப்பையும், வழிமுறையையும் எப்போதும் சீர்திருத்தவோ, அல்லது அடியோடு நீக்கவோ, ஒழிக்கவோ தயாராக இருங்கள்,
எல்லாமே உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது எனில், ஆகாய விமானம் காற்றுக்கு எதிராகவே தனது பறக்கும் வேலையைத் தொடங்குகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
***