கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND (Post No.13,210)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.210

Date uploaded in London – — 6 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புத்தக அறிமுகம்

திரு கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND

ச. நாகராஜன்

1

“தொன்று நிகழ்ந்த தனைத்தும்

    உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

   இயல்பினளாம் எங்கள் தாய்”

என்று மகாகவி பாரதியார் பாரத தேசம் பற்றிப் பாடியுள்ளார்.

இவள் என்று பிறந்தவள்? இவள் என்று பிறந்தவள் என்று கேள்வி கேட்ட அறிஞர்கள் எல்லோரும் திகைத்துப் போனார்களே தவிர பதில் கண்டவர்கள் இல்லை!

இந்த வகையில் நம் மனதில் தோன்றும் கேள்விகள் பல.

நம்முடைய இதிஹாஸ, புராணங்கள், மற்றும் இலக்கியங்கள் கோடிக் கணக்கில் உள்ளன. உலகெங்கும் உள்ள நமது இலக்கியம் நான்கு கோடி சுவடிகளில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதை நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி கால வரிசைப்படி தொகுக்க முடியுமா? அப்படி தொகுக்கும் போது அதை அறிவியல் வடிகட்டியில் சற்று வடிகட்ட முடியுமா?

ஆயிரக்கணக்கான அரசர்கள், ரிஷிகள் பெயர்கள், சரிதங்கள் உள்ளன.  மக்களின் வாழ்க்கை முறை, நமது அபூர்வமான கலைகள், இலக்கியப் படைப்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் இவற்றை உள்ளது உள்ளபடி நடந்தது நடந்தபடி யாரேனும் தொகுப்பார்களா?

இந்தத் தொகுப்பும் அறிவியல் ரீதியாகவும் ஆதாரங்களுடனும் மிக மிக உண்மை என்பதன் அடிப்படையிலும் தொகுக்கப்படுமா?

இப்படித் தொகுத்ததை அனைவரும் படிக்கும் படி சுவைபடத் தர முடியுமா?

படித்தவுடன் ஒரு உத்வேகத்தையும் நல்ல உணர்வையும் பெருமிதத்தையும் அடையும்படியான தொகுப்பை உருவாக்க முடியுமா?

2

இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவதுண்டு.

இதை மனதில் எழுப்பிக் கொண்ட ஆர்வலர்களுள் ஒருவர் எட்டு வருடங்களுக்கும் மேலாக கடின உழைப்பை மேற்கொண்டு தேவையான ஆதாரங்களைச் சேர்த்துத் தொகுத்து உத்வேகம் மேலிட சுவை பட ஒரு நூலை எழுதி உள்ளார்.

அவர் தான் திரு N. கணேஷ் ராஜா.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் 2003இல் தனது பொறியியல் படிப்பை முடித்தார். மென்பொருள் துறையில் இருபது வருட அனுபவத்தைப் பெற்றார்.

ஒரு பத்திரிகையில் “வழக்கம் போல” இந்தியாவைப் பற்றி இழிவாக எழுதிய ஒரு கட்டுரையைக் கண்டார். இந்த இழிநிலைக் கட்டுரைகளுக்கு ஒரு முடிவைத் தர தனது சம்ஸ்கிருத, தமிழ் அறிவைப் பயன்படுத்தி இலக்கிய பூர்வமான

ஆதாரங்களுடன் கூடிய ஒரு படைப்பை உருவாக்கத் தீர்மானித்தார்.

அது தான் THE JAMBU ISLAND.

89 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் 239 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நமது பாராட்டுக்குரிய நூலாக இது அமைகிறது.

கி.மு. 6000-லிருந்து கி.மு3102 முடிய உள்ள பாரத தேச வரலாற்றை இதில் காண முடிகிறது.

3

உலகின் ஆகப் பெரும் அற்புதமான நூலான ரிக் வேத ரிஷிகளை முதலில் அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர்.

மந்த்ர த்ருஷ்டாக்களின் மகிமையைச் சொல்லி அவை அபௌருஷேயம் – மனிதர்களால் இயற்றப்படாதவை – என்பதைக் குறிப்பிடுகிறார்.

6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதை பாலகங்காதர திலகரும் எஸ். பாலகிருஷ்ண தீக்ஷிதரும் வானவியல் அடிப்படையில் ஆய்ந்து குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

நூலில் தரப்படும் கருத்துக்களும் நாம் அறிந்து கொள்வதும் இதோ:-

சாம வேதம் இந்திய சங்கீதத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

மனுஸ்மிருதி,,  அர்த்த சாஸ்திரம்,, ப்ரஹ்மாவர்த்த ரிஸர்ச் ஃபவுண்டேஷன் பற்றி அறிகிறோம்.

சப்த சிந்து நதிகளைப் பற்றி அறிவதோடு சிந்து நதிக் கரை நாகரிகம் பற்றி அறிகிறோம்.

அத்ரி, அனசூயா, தத்தாத்ரேயர், துர்வாஸர் ஆகியோர் பற்றி விளக்கத்மாக அறிவதுடன், கண்வர் பற்றி அறிகிறோம்.

இன்று கன்னோஜ் என்று புகழ் பெற்று விளங்கும் நகரத்தின் பழைய பெயர் கன்யாகுப்ஜம். அற்புதமான அதன் வரலாறு சொல்லுக்கு அப்பாற்பட்டது. கன்யாகுப்ஜம் பற்றி அறிகிறோம்.

இக்ஷ்வாகு மற்றும் யாதவ வம்சங்கள் தோற்றத்தைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.

வரிசையாக மன்னர்களின் பெயர்கள் கால வரிசைப்படி தரப்படுகிறது.

கார்த்த வீர்யார்ஜுனன் பற்றிய ரிக் வேதக் குறிப்புகளைக் காண்கிறோம்.

பரசுராமர், ஜமதக்னி வரலாறு சுவைபட தரப்படுகிறது.

கண்பார்வையற்ற ரிஷி தீர்க்கதமஸ் பற்றிய வரலாறு நம்மை நெகிழ வைக்கிறது.

பக்கம் 156 – இங்கு நூலாசிரியர் இந்த நூலுக்காகத் தான் கொண்ட அடிப்படையை விளக்குகிறார். அதாவது மனிதனின் பூரண ஆயுள் 125. அதற்கு மேல் சொல்லப்பட்டிருந்தால் அது கட்டுக்கதை. அதை அறிவியல் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.

இதன் அடிப்படையில் விஸ்வாமித்திரர் I, II, III, IV, V   வசிஷ்டர்  I, II, III, IV என்றும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றனர்.

ஜொராஸ்டரின் வரலாறு பற்றி சுவைபடத் தரப்படுகிறது. ஜொராஸ்டிரிய கொள்கைகளுக்கும் வேதக் கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அட்டவணையாகக் கண்டு வியக்கிறோம்.

இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ள  சிபிஸ்தான் மன்னர் சிபியைக் குறிக்கிறது.

இந்த சிபியின் மகன்கள் சைபியா என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டனர். இதுவே சோழ நாட்டில் செம்பியன் என்று குறிப்பிடப்பட்டு சோழ மன்னர்கள் செம்பியன் என்ற பட்டப் பெயரைப் பெற்றனர்.

சரளமாக ஆங்காங்கே நூலில் அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களையும் குறிப்புகளையும் காண்கிறோம். அழுத்தமான ஆதாரங்கள் தரப்படுகினறன.

பலியின் குமாரர்களின் பெயர்கள்  அங்க தேசத்தின் பகுதிகளுக்குச் சூட்டப்படுகின்றன. அங்க தேசத்தின் தலைநகரமாக மாலினி அமைகிறது.

மனுவின் சரித்திரத்தை நன்கு அறிந்து கொண்ட நாம் இப்போது பகீரதனின் சரித்திரத்தையும் கங்கை வந்த வரலாற்றையும் பார்க்கிறோம்.

பின்னர் ராமாயணமும், மஹாபாரதமும் சுருக்கமாக தரப்படுகிறது.

ஆங்காங்கே ரிஷிகள், தவம் புரிந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த குகைகள், அரசர்கள் ஆண்ட பிரதேசங்கள் பற்றி அறிய முடிகிறது.

இதிஹாஸ புராண சரித்திரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் இன்று எங்கு உள்ளன என்பதை ஆங்காங்கே கண்டு மகிழ்வதோடு அவை இன்றும் பிரசித்தி பெற்ற இடங்களாக இருப்பதை உணர்கிறோம்.

மொத்தத்தில் நூற்றுக்கணக்கான விஷயங்களை ஆதார பூர்வமாக கால வரிசைப்படி சுவைபடத் தரும் ஒரு நூல் இது.

இதை வழங்கியுள்ள திரு கணேஷ் ராஜா பாராட்டுக்குரியவர்.

நமது பண்டைய சரித்திரத்தை அறிய விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

4

நூலைப் பற்றிய பாராட்டுக்களை மேலே கூறியாகி விட்டது.

ஆனால் அடிப்படையான ஒரு விஷயம், நம்பிக்கையின் அடிப்படையில் நமது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இதிஹாஸ, மஹாபாரத, புராண, இலக்கிய விஷயங்களை அப்படியே நம்பி வருகிறோம்.

அந்த நம்பிக்கையை ஆழமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த நூலின் சில கருத்துக்களை ஏற்க சங்கடப்படுவர்.

அகத்தியர் ராம பிரானை சந்தித்து ஆதித்திய ஹிருதயம் உபதேசித்தார்.

ஆனால் நூலாசிரியர் கருத்துப்படி இது சாத்தியமில்லை.

பல விஸ்வாமித்திரர்கள், வசிஷ்டர்கள் இருந்திருக்க வேண்டும் என்பது நூலாசிரியர் கருத்து.

நாமோ எல்லையற்ற கால வெள்ளத்தைத் தாண்டியவர்கள் நமது விஸ்வாமித்திர, வசிஷ்ட ரிஷிகள் என்கிறோம் – நம்பிக்கையின் அடிப்படையில்.

சிரஞ்சீவிகள் ஏழு பேர்

அஸ்வத்தாமோ பலிர் வியாஸோ ஹனுமான் ச விபீஷண:

க்ருப பரசுராமஸ் ச சப்தைதே சிரஞ்சீவின:

என்பதை இன்றும் நம்புவோர் கோடிக் கணக்கான ஹிந்துக்கள்.

இவர்களைப் பல மகான்கள் தற்போதைய காலத்தில் கண்டதாக சரித்திரமும் உண்டு.

ஆக அறிவியல் வடிகட்டியைத் தாண்டிய பல விஷயங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உண்டு.

இந்த விஷயங்கள் நூலின் சுவையைக் குறைக்கவில்லை என்பது உண்மை.

ஒரு புதிய நோக்குடன் நூலை அணுக வேண்டியதாக இருக்கிறது.

5

இந்த நூல் ஒரு ஆரம்பம் தான் என்கிறார் நூலாசிரியர் திரு N. கணேஷ் ராஜா. வரவேற்கிறோம் அவரது இதர படைப்புகளை.

பாராட்டுகிறோம் இந்த நூலை.

நூல் வெளியிட்டோர்:

STORY MIRROR INFOTECH PVT. LTD

7TH FLOOR, EL TARA BUILDING,

BEHIND DELPHI BUILDING

HIRANANDANI GARDENS, POWAI,

MUMBAI

MAHARASHTRA 400076

INDIA

ISBN : 978-93-6070-167-3

AUTHOR WEBSITE : www.ganeshraaja.in

பக்கங்கள் : 239 விலை ரூ299/

***

Leave a comment

2 Comments

  1. Ambi Iyer's avatar

    Ambi Iyer

     /  May 6, 2024

    மிக்க நன்றி ஸ்வாமிநாதன் அவர்களே!
    நூல் சென்னையில் கிடைக்குமா?
    சார்தம்பற்றிய + அயோத்தயா ங்கள் உரைகள் கிடைக்குமா?
    இவ்வாரம் சென்னை பிரயாணம்

    மீண்டும் நன்றிகள்

    அன்புடன்
    (லண்டன்) அம்பி
    Sent from my iPhone

  2. Tamil and Vedas's avatar

    YOU MAY TRY THE PUBLISHER OR CHENNAI BOOK STALLS FOR JAMBU ISLAND WHEN U R IN INDIA.
    MY BOOK IS AVALAIBLE ONLY ONLINE. WHICH INCLUDES CHAAR DHAAM.
    Title- மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!
    IT INCLUDES ALL HIMALAYAN SHRINES. HAVE A SAFE TRIP.

Leave a comment