கோரை,ஆரை,சூரை: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 4 (Post No.13,215)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,215

Date uploaded in London – –   7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

சூனிய சம்பாஷணை

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே.    2870

  • குளத்து நீரில் பாறை போன்றவன் சிவன். 

மனம் என்னும் குளத்தில் அறிவாகிய கோரை வளர்ந்து இருக்கிறது. அதை ஆசை என்னும் ஆரைச்செடி (அறிவினை) மூடி மறைத்துள்ளது. அங்கோ ஓடும் , மீன்களைக் கொத்தி உண்ணுவதற்கு நாரை ஒன்று காத்திருக்கிறது.இந்த சூழ்நிலையில் அந்தக் குளத்தில், பக்தர்களுக்குதவ  பாறை போல சிவபெருமான் காத்திருக்கிறான் .

ஆரை, கோரை, நாரை, பாறை / பாரை என்று ‘நர்சரி ரைம்’ Nursery Rhyme போலச்  சொல்லி, சிவன் பாறை போல உதவுவான் என்கிறார். வழுக்கி விழும் மனக்குளத்தில் பாறையாக நிற்கிறார்.

பாரை = வலிமை  என்றும் பொருள் கொள்ளலாம் பாரை என்பதற்குப் பலரும் பலவிதமாகப் பொருள் எழுதியுள்ளனர்

XXXXX

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.   

வாழைமரமும், சூரை முள்ளும் ஓரித்தில் வளர்ந்திருந்தன. வாழை மென்மையானது. சூரை வலிமையானது. மக்கள் வாழையை விரும்புகின்றனர். 

வாழை- இன்பம்; சூரை – துன்பம்

இன்பமும் துன்பமும் வந்து நம்மை ஆட்டுகிறது; இதில் துன்பமே வலியது  இந்த இரண்டினையும் மனத்திலிருந்து விலக்கிவிட்டு இரண்டினையும் ஒப்ப நோக்கினால் சிவம் என்னும் இன்பத்துடன் வாழலாம்.

பகவத் கீதையில் பல இடங்களில் இதே கருத்து வருகிறது

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।

निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥

அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |

நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||

எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், இருக்கும் பக்தன் எனக் கினியவன்

XXXX

பெருஞ்சுடர் மூன்றிலும் உள்ளொளி யாகித்

தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட டிகலிட மெல்லாம்

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.

ஞாயிறு திங்கள் தீ என்று சொல்லப்படும் பெருஞ்சுடர் மூன்றும சிவபெருமானுக்குரிய எண்பெரும் வடிவங்களைச் சார்ந்தனவாகும். ஏனைய ஐந்தும் முறையே நிலம், நீர், காற்று, விசும்பு, ஆருயிர்கள் என்று சொல்லப்படும். சிவபெருமான் அம் முச்சுடர்களையும் வடிவாகக் கொண்டிருப்பது போன்று அவற்றை ஒளிரச் செய்து அவற்றிற்கு உள்ளொளியாக நிற்பவனும் ஆகின்றான். அவனே தேவர் பிரானுமாவன்.

உலகிடை எங்கணும் எக்காலத்தும், பிறப்பால், சிறப்பால், பேசும் மொழியால், குறிக்கோளால் ஒருவரோடொருவர் மாறுபடு கின்றனர் அவற்றிடையே சிவபெருமான் கலந்து நின்று அருள்புரிகிறார் அவரவர் அன்பிற்கேற்றவாறு எளியவனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.. அவன் பல்வேறு வகையாகக் காணப்படும் சிறிய கோரைப்புல் போல  நுண்ணியனாய்க் கலந்து அருள்புரிகிறார்

எவ்வளவோ தாவரங்கள் இருந்தும் ஆரை, சூரை , கோரை என்ற சிறிய செடி வகைகளை எடுத்து திருமூலர் கருத்து சொல்லுவதை பார்க்கையில் , அவைகளில்  மருத்துவ குணம் இருப்பதால் அவைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் போலும்

XXXX

5 மரங்கள், 5 மலர்கள்

மரங்களின் பெயர்களைச் சொல்லி அந்த சங்கேத மொழியில் வேறு பல விஷயங்களைச் சொல்லுவது திருமூலரின் தனிச் சிறப்பு ; உரைகள் இல்லாவிடில் தலையும் வாலும் காணாது தவிப்போம்.

வானச் சிறப்பு

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  105

பொருள்

மழைநீர் அமுதம் ஆகும் அதனால் பூமியில் அமிர்தம் போன்ற உணவினை வழங்கும் பயிர்கள் தழைக்கும்

கமுகு என்னும் பாக்கு மரம், தென்னை மரம் , கரும்பு, வாழை முதலியன அமிர்தம் போன்றவை மழையில்லாவிடிலோ காஞ்சிரங்காய் நிலை / வறட்சி / துன்பம் நேரிடும்

திருவள்ளுவரும் திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தில் இதே கருத்தைச் சொல்கிறார்.      

xxxxx

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.     302

இங்கே விளாம்பழம் என்பது சிவபெருமான் ;வில்வம், கூவிளம், கிளுவை, வன்னி, விளா ஐந்தும் சிவனுக்குரிய மரங்கள் ; கண்ணுக்கு முன்னே தெரியும்  விளங்கனியைக் காணாமல் கீழே கிடக்கும் வெம்பி உதிர்ந்த காய்களையே,  கல்லாதவர்கள்  காண்கிறார்கள் ; அவர்கள் கடவுளைப் பற்றி இப்படி, அப்படி என்று எழுதி எழுதி இளைத்துப் போய்விட்டார்கள்; விண் டவர் கண்டிலர்கண்டவர்  விண்டிலர் என்ற ஆன்றோர் வாக்கியத்தை நினைவுபடுத்தும் பாடல் இது. பித்தம் தெளிய மருந்து ஒன்று கண்டேன் என்பதையும் ஒப்பிடலாம். விளங்கனி பித்ததைப் போக்கி நல்லறிவினைத் தரும்.

xxxxxx 

கொட்டியும் எட்டியும்

2861. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையுங்

கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறன்றே.

(ப. இ.) குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை, அறிவு, இன்ப, வடிவ உருவமாகும்.

உலக இன்பங்களை வேண்டுவோர் எட்டிப்பழத்துக்கு ஆசைப்படுவோர் ஆவர்.

எட்டிப்பழம் பார்க்க அழகானது ஆனால் விஷத்தன்மையுடையது.  உலக இன்பங்களும் அப்படித்தான் 

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

xxxxxxx

தாமரையும் குவளையும்

2863. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குடடத்து நீரிற் குவளை எழுந்தது

விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாகுமே.– திருமந்திரம்

இதில் பிராணாயாமப் பயிற்சியை திருமூலர் விளக்குகிறார்

(ப. இ.) தட்டத்து நீராகிய வலது மூக்கின்வழி எடுத்தலைச் செய்யும் இரேசக மூச்செனப்படும் தாமரை பூத்துளது. குட்டத்து நீராகிய இடது மூக்கில் விடுத்தலைச் செய்யும் பூரக மூச்செனப்படும் குவளை எழுந்துளது. வலது மூக்கைப் பிங்கலை யென்றும், இடது மூக்கை இடைகலை யென்றும் கூறுப. விட்டமாகிய நடுநாடியினுள் தடுத்தலெனப்படும் கும்பகஞ் செய்து அவ் வுயிர்ப்பினை அருளால் அகத்தே விளங்கிக் காண வல்லார்க்குச் சிவபெருமான் அல்லது திருவடிப்பேறு மிகஎளிதாகக் கிடைக்கும். இடையறாப் பேற்றின் பேரின்பம் எய்துவர். இதற்கு ஒப்பு கொல்லையில் தானாகவே காய்த்து அளவின்றிப் பல்கிக் கிடக்கும் கொம்மட்டிப் ( Citrullus colocynthis ) பழமாகும். அதுவே ‘குட்டத்திலிட்டதோர் கொம்மட்டி யாமே’ என்றருளினா.

(அ. சி.) தட்டத்துநீர் – வலதுமூக்கு, பிங்கலை,

தாமரை – இரேசக வாயு.

குட்டத்து நீர் – இடதுமூக்கு, இடைகலை.

குவளை – பூரகவாயு.

விட்டம் – சுழுமுனை.

விளங்க – கும்பகம் செய்ய.

XXXXXX

வேம்பும் பாம்பும்

மூங்கின் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறன்றே. 2847

(அ. சி.) மூங்கில் – மனம்.;  வேம்பு – சிவம். பனை – திரோதானம்/ மறைப்பாற்றல்.

பாம்பு – அஞ்ஞானம். வெடிக்கின்றவாறு – அறியப்படாத தன்மை.

(ப. இ.) மூங்கில் முளையாகிய மனத்தின்கண் திருவருளால் ஆருயிர்களை உயிர்விக்கவேண்டி எழுந்ததோர் வேம்பாகிய சிவன் உண்டு. சிவனார் வேம்பென்னும் மருந்தொன்றுண்டு. அது பூண்டு வகையைச் சார்ந்தது. அச் சிவனார் வேம்பினைச் சார்ந்துகிடந்தது. ஒப்பில்லாத பனையொன்று. பனையென்பது கற்பகத்தருவாகும். பனையென்பது நடப்பாகிய மறைப்பாற்றலாகும். அந்நடப்பாற்றலாற் செலுத்தப்படுவது.

அறியாமையாகிய பாம்பென்ப. அப் பாம்பாகிய அறியாமையைத் திருவருட்டுணையால் துரத்தித் தின்பாரரியராகின்றனர்.

துரத்தித் தின்றல் – நீக்குதல். அருளால் அறியாமையை நீக்குவாரின்மையால் சிவம் என்னும் வேம்பு கூடுதலின்றிப் பிரிந்துகிடக்கின்றது.

வெடிக்கின்றது – பிரிகின்றது. அறியாமையாகிய ஆணவம் பாம்பாகிய மாயையின் வழித் தொழிற்படுதலால் காரணத்தைக் காரியமாக ஏற்றிக் கூறப்பட்டது.

சிவனார் வேம்பு (Indigofera aspalathoide)

TO BE CONTINUED………………………….tags- கோரை,ஆரை,சூரை, திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 4

Leave a comment

Leave a comment