WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.213
Date uploaded in London – — 7 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 1
ச .நாகராஜன்
கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் –
அறிவியல் தகவல்
3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!
உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து ‘பேடண்ட் கிங்’ என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.
அமெரிக்க ஸயின்ஸ் அகாடமிக் சொஸைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி க்யூரி, நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!
144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது
வயது 95.
பிறப்பும் இளமையும்
ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.
இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள்ள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோஸின் பம்ப் தான்!
டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்..
ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரண,ம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்..
கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.
தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்ஸிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.
அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.
சில கண்டுபிடிப்புகள்
ஃபிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.
செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும் காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும் அந்த நாற்காலியையும் இவர் கண்டு பிடித்துள்ளார்.
பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு.
செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.
இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.
கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.
‘ப்யான் ப்யான் பூட்’ என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.
இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்நோபல் பரிசு
இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு முன் போட்டோக்கள் எடுத்து வநதார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.
இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.
சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.
இது ஏன்? நீண்ட ஆயுளை உறுதி செய்யத் தான்!
**