
Post No. 13.236
Date uploaded in London – — 13 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ச. நாகராஜன்
விளையாட்டுத் துறை அமைச்சர்
பிரேஜில் நாடு வளர்ந்து வரும் உலக கதாநாயகனைப் போற்றியதோடு ஒரு சமயம் பயப்படவும் செய்தது – எங்கேயாவது அவர் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று விடுவாரோ என்று!
1995-ல் அவர் பிரேஜிலின் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகால பதவி காலத்தில் பிரேஜில் நாட்டில் இருந்த லஞ்சம் உள்ளிட்ட களைகளை எல்லாம் பீலே சட்டம் என்பதால் அறவே ஒழித்த அவர் நாட்டின் விளையாட்டுத் துறையையே நவீன மயமாக்கினார்.
பீலே தினம்
அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் நாள், பீலே தினமாக பிரேஜில் கொண்டாடி வருகிறது.
1969-ல், நவம்பர் 19-ம் நாளன்று சாண்டோஸ் நகரில் அவர் தனது ஆயிரமாவது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார். இந்த கோலைப் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் மீறி மகிழ்ச்சி பொங்க மைதானத்தில் நுழைந்து விடவே அரை மணி நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டது.
இந்த ஆயிரமாவது கோல் நினைவாக பிரேஜில் ஒரு விசேஷ தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்தது.
நூற்றாண்டின் இணையற்ற வீரர்
சென்ற நூற்றாண்டில் இணையற்ற வீரராகத் திகழ்ந்த இவர் “நூற்றாண்டின் வீரர்” என்று கொண்டாடப்படுகிறார்.
வெண்கலத்தினாலான இவரது சிலை ஒன்று ரியோ டி ஜெனிரோவில் திறந்து வைக்கப்பட்டது.
ரொனால்ட் ரீகன், எலிசபத் மகாராணி உள்ளிட்ட ஏராளமானோர் அவரைச் சந்தித்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர்.
இவரை அனைவரும் ப்ளாக் பெர்ல் – கறுப்பு முத்து என்றே அழைப்பது வழக்கமானது.
இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை பீலேயையும் ஒருவராக அறிவித்தது.
குடும்பம்
பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஏழு குழந்தைகள் அவருக்கு உண்டு.

அதிர்ஷ்ட சட்டை எங்கே?
எல்லோரையும் போல பீலேக்கும் அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நண்பர்களும் கால்பந்து ஆர்வலர்களும் மிகவும் கவலையுற்றனர்.
பீலே தனக்கு ஏன் இப்படிஒரு சோர்வு ஏற்பட்டது என்று யோசிக்கலானார். விடை அவரது மனதில் பளிச்சென உதயமானது.
வழக்கமாக அவர் அணியும் சட்டையை ஒரு கால்பந்து ரசிகர் விரும்பிக் கேட்கவே பீலே அவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். தனது சட்டை போன அன்றிலிருந்து தான் இந்த மனச்சோர்வு தனக்கு வந்தது என்று அவர் எண்ணினார்.
உடனே ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்தார். யாருக்கு தான் தனது சட்டையைத் தந்தாரோ அவரைக் கண்டு பிடித்து அதைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே துப்பறிவாளருக்கு அவர் இட்ட கட்டளை.
பெரும் தேடலை மேற்கொண்ட துப்பறிவாளரும் ஒரு வழியாக அந்த ரசிகரைக் கண்டுபிடித்து சட்டையைத் திருப்பி வாங்கி வந்து அதை பீலேயிடம் தரவே அவருக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் பழைய பீலே ஆனார். உற்சாகம் அவருக்குக் கரை புரண்டோடியது.
சரி, உண்மையில் நடந்தது என்ன? துப்பறிவாளர் பீலேயைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஆகவே பீலே விளையாடிய முந்தைய விளையாட்டின் சட்டையையே செட்- அப் செய்து அவரிடம் தந்து விட்டார் – உண்மையைச் சொல்லாமலேயே!
எல்லாம் மனதில் தான் இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது!
பீலே அறக்கட்டளை
1977-ல் அவர் தீவிர விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கால்பந்தாட்டத்திற்கான உலக தூதுவராக ஆனார்.
மிக்க ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு வறுமை என்றால் என்ன என்பது நன்கு தெரியும். ஆகவே உலகின் ஆகப் பெரும் செல்வந்தராக அவர் ஆன போது ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவலானார்.
மரணம்
2019-ல் சிறுநீரகக் கற்களை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். தொடர்ந்து பெருங்குடலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது.
கொரானா காலத்தில் அவர் புற்று நோய் முற்றவே 2022, டிசம்பர் மாதம் 29-,ம் நாள் உயிரிழந்தார்.
சாண்டோஸ் நகரில் பெல்மிரா ஸ்டேடியத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேஜில் நாடு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது.
சுயசரிதமும் டாகுமெண்டரி படமும்
பீலே திரைப்படங்களில் தோன்றிய காட்சிகளும் உண்டு. இவரைப் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுக்கப்பட்டது. தனது சுயசரிதத்தையும் பீலே எழுதியுள்ளார். ‘மை லைஃப் அண்ட் தி பியூட்டிஃபுல் கேம்’ என்பதே அந்த புத்தகத்தின் பெயர். அழகிய விளையாட்டு – பியூட்டிபுல் கேம் – என்பதே இவர் கால்பந்துக்கு சூட்டிய அழகிய பெயராகும்.
இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், மெடல்கள் கணக்கிலடங்கா.
பயிற்சி, பயிற்சி, பயிற்சி
பீலே தனது வாழ்க்கைச் செய்தியாக அறிவித்திருப்பது ஒரே ஒரு வார்த்தை தான் : அது தான் பயிற்சி!
பயிற்சி! பயிற்சி!! பயிற்சி!!! இதுவே வெற்றிக்கான வழி என்பது அவரது கொள்கையாகும்.
அவரது புகழ் பெற்ற பொன்மொழிகளில் சில:
வெற்றி என்பது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. கடும் உழைப்பு, விடாமுயற்சி, நன்கு கற்பது, தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக செய்யும் வேலையில் அளவற்ற ஈடுபாடு – இதுவே வெற்றிக்கு வழி!
ஒரு தனிப்பட்ட நபர் ஒரு போதும் ஒரு விளையாட்டை அவரால் மட்டுமே வெல்ல முடியாது.
நான் கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்துள்ளேன் – எப்படி பீத்தோவன் இசைக்காகப் பிறந்தாரோ, எப்படி மைக்கெல் ஏஞ்சலோ ஓவியம் படைக்கப் பிறந்தாரோ அது போலத் தான் நான் கால்பந்து விளையாடப் பிறந்துள்ளேன்.
கால்பந்து பற்றி அவர் கூறியது : தலை இதயத்துடன் பேசுகிறது; இதயம் கால்களுடன் பேசுகிறது
கால்பந்து எனக்கு ஒரு மதம் போல! நான் பந்தையே வழிபடுகிறேன். அதையே கடவுளாகக் கருதுகிறேன்.
***