
Post No. 13.242
Date uploaded in London – — 15 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (2) – மாரீசன், சுபாகுவுக்கு ஏன் சாபம் கொடுக்கப்படவில்லை?
ச.நாகராஜன்
ஒரு சமயம் விஸ்வாமித்திர மஹரிஷி சித்தியின் பொருட்டு ஒரு தீக்ஷையை ஆரம்பித்தார். அப்போது வேண்டிய வடிவத்தை எடுத்துக் கொள்ளும் இரு ராக்ஷஸர்கள் அந்த யக்ஞ தீக்ஷைக்கு இடையூறு செய்ய வந்தனர். அந்த இரு ராக்ஷஸர்கள் மாரீசன் மற்றும் சுபாகு ஆவர்.
யக்ஞ தீக்ஷையின் போது திடீரென்று தோன்றிய அந்த இரு ராக்ஷஸர்களும் மேடையில் மாமிசத்துடன் கூடிய ரத்தத்தைச் சொரிந்தார்கள்.
யாகம் நின்றது.
விஸ்வாமித்திரர் தடைப்பட்ட யாகத்தால் மிகவும் வருத்தமுற்றார்.
நேராக மஹாராஜா தசரதனின் அரண்மனைக்கு வந்தார். மஹரிஷியைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட தசரதன் அவரைத் தக்க முறைப்படி வரவேற்று மரியாதை செய்து உபசரித்தான்.
விஸ்வாமித்திரர் நடந்ததைச் சொல்லி ராமரை தனது யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார்.
தசரதனுக்கு தூக்கி வாரிப்போட்டது. சிறுவர்களான அவர்களை எப்படி அனுப்புவது? யோசிக்கலானான். ஆனால் குலகுருவான வசிஷ்ட மஹரிஷி குறுக்கிட்டு ராமரை அனுப்பலாம் என்று கூறி, தசரதனை சம்மதிக்கச் செய்தார்.
ராமருடன் கூடவே லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரருடன் சென்றார்.
யாகத்திற்கு இடையூறு விளைவிக்க வந்த மாரீசனின் மார்பில் அதிக கம்பீரமும் அதிக பிரகாசமும் உள்ள மானவ அஸ்திரத்தை ராமர் விடுத்தார். (பால காண்டம் 30-ம் அத்தியாயத்தில் விவரங்களைக் காணலாம்)
பின்னர் ஆக்கினேய அஸ்திரத்தை எடுத்து அரக்கர்களின் மீது விடுத்தார். அந்த அஸ்திரம் சுபாகுவின் மார்பைத் தாக்க அவன் பூமியில் விழுந்தான்.
பின்னர் வாயவாஸ்திரத்தை விடுத்து அனைத்து அரக்கர்களையும் ராமர் கொன்றார்.
யாகம் இனிதே நிறைவேறியது!
இந்தச் சம்பவத்தில் அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.
மஹரிஷி விஸ்வாமித்திரர் மிகுந்த தபோபலம் கொண்டவர்.
அவர் மிக சுலபமாக அரக்கர்களை ஒரு நொடியில் இல்லாமல் செய்து விடலாம்.
சாபம் இட்டால் போதும், அவர்கள் ஓடி விடுவர்.
ஏன் விஸ்வாமித்திரர் சாபம் இடவில்லை?
இதற்கான பதிலை விஸ்வாமித்திரரிடமிருந்தே நாம் பெறுகிறோம்.
பால காண்டம் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் தசரதனிடம் விஸ்வாமித்திர கூறுகிறார் : (ஸ்லோகம் 7,8)
ந ச மே க்ரோதமுத்சஸ்ருஷ்ட புத்திர்பவதி பார்த்திவ |
ததாம்ருதா ஹி சா சர்யா ந சாபஸ்தன்ன முச்யதே ||
இதன் பொருள்:
பார்த்திவ – மன்னரே
க்ரோத – கோபத்தை
உத்சஸ்த்ருஷ்ட – பிரயோகிக்க
மே – எனக்கு
புத்தி ச – மனதில் எண்ணமே
பவதி ந – உண்டாகிறதில்லை
ஹி – ஏனென்றால்
சா – அந்த
சர்யா – அனுஷ்டானம்
ததா பூதா – அப்படிப்பட்ட ஒன்று.
தத்ர – அந்த விஷயம் அப்படி இருப்பதால்
சாப: – சாபம்
முச்யதே ச – இடலாகாது.
ஆக அந்த குறிப்பிட்ட யாகத்தின் அனுஷ்டானத்தில் கோபம் கொள்ளவும் கூடாது; சாபம் இடவும் கூடாது.
ஆகவே தான் மிக பிரம்மாண்டமான தபோ மஹிமை கொண்ட விஸ்வாமித்திரர் தசரதரிடம் வந்தார்.
சாபத்தால் மாரிசனையும், சுபாகுவையும் அழிக்க வல்ல மஹரிஷி சாபம் இடாததற்கான காரணம் அந்த யாகத்திற்கான குறிப்பிட்ட அனுஷ்டான முறையே.
இதை பால காண்டம் 19-ம் அத்தியாயம் விளக்குகிறது.
***