
Post No. 13.248
Date uploaded in London – — 17 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (6) – தாடகா வனத்தின் சாபம் நீங்கியது!
ச.நாகராஜன்
பாலகாண்டத்தின் இருபத்தி ஆறாவது ஸர்க்கம் தாடகா வனத்தின் சாபம் நீங்கியதை 36,37,38 ஆகிய ஸ்லோகங்களில் விவரிக்கிறது.
தாடகா வனம் முன்பிருந்த செழுமையை இழந்த விருத்தாந்தத்தை விஸ்வாமித்திரர் ராமரிடம் உரைக்கிறார். அகஸ்தியரின் கோபத்தையும் சாபத்தையும் சொல்கிறார்.
ராமன் பெண்ணான தாடகையை எப்படி வதம் செய்வது என்று நினைக்கக் கூடாது என்பதற்காக அவர் உதாரணங்களை வேறு எடுத்துக் காட்டுகிறா.
“ஓ, ஶ்ரீ ராம! முன்னொரு காலத்தில் இந்திரன் பூமியை நாசம் செய்ய விருப்பம் கொண்ட விரோசனனுடைய பெண்ணான மந்தரையைக் கொன்றான்.
அன்றியும் இன்னொரு சமயம் உறுதியான விரதமுடைய சுக்கிரனுடைய தாயாரான பிருகுவின் மனைவி உலகத்தை இந்திரன் இல்லாததாக விரும்பினவளாய் விஷ்ணுவால் கொல்லப்பட்டாள்.
அப்படிப்பட்ட மஹாத்மாக்களாலும் புருஷச்ரேஷ்டர்களாலும் அதர்மமுள்ள ஸ்திரீகள் கொல்லப்பட்டார்கள். ஆகவே எனது ஆக்ஞையால் அருவருப்பை அடையாது, தாடகை வதத்தைச் செய்”” என்கிறார் விஸ்வாமித்திரர் (பாலகாண்டம் 25-ம் ஸர்க்கம்)
ராமர் வில்லில் நாணெற்றி ஒலிக்க, அதனால் கோபம் கொண்டு வந்த தாடகை கல்மழையைப் பொழிவிக்கிறாள். கல்மழையைத் தடுத்ததோடு தாடகையின் இரு கைகளையும் அவர் துண்டித்தார். லக்ஷ்மணரோ தாடகையின் காதுகளையும் மூக்கையும் அறுத்தார். அவளோ மாயையால் மயக்குபவள். ஆகவே வெவ்வேறு உருவங்களை எடுத்து கல்மழை பொழியவே ராமர் அதைத் தடுத்தார். இறுதியில் ஒரு பாணத்தால் தாடகையை அடித்து வதம் செய்கிறார்.
இதனால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ராம லக்ஷ்மணரைப் போற்றிப் புகழ்கின்றனர்.
ஒரு வழியாக தாடகா வனத்தின் சாபம் போனது.
விஸ்வாமித்ரவச: ச்ருத்வா ஹ்ருஷ்டோ தசராத்மஜ: |
உவாச ரஜனீம் தத்ர தாடகாயா வனே சுகம் ||
(பால காண்டம் ஸர்க்கம் 26 ஸ்லோகம் 36)
தசரதாத்மஜம் – தசரதகுமாரர்
விஸ்வாமித்ர வச: – விஸ்வாமித்ரரின் வார்த்தையை
ச்ருத்வா – கேட்டு
ஹ்ருஷ்ட – களித்தவராய்
தாடகாயா: – தாடகையினுடைய
தத்ர வனே – அந்த வனத்தில்
ரஜனீம் – இரவை
சுகம் – சுகமாக
உவாச – கழித்தார்
முக்தசாபம் வனம் தச்ச தஸ்மின்னேவ ததாஹனி |
சம்பகாஷோகபுன்னாகம்ல்லிகாத்யை: சுசோபிதம் ||
சூதைஸ்ஸ பனசை: பூகைர்நாரிகேலைச்ச சோபிதம் |
வாபிகூபதடாகைஸ்ச தீர்திகாபிரலங்க்ருதம் ||
மல்லிகாஹேமகூடஸ்ச மண்டபைரூபஷோபிதம் |
ரமணீயே ஹி பர்பாஜ வனம் சைத்ரரதம் யதா ||
(பால காண்டம் ஸர்க்கம் 26 ஸ்லோகம் 37-40)
தத வனம் ச – அந்த வனமும்
தஸ்மின் அஹனி – அந்த நாளில்
ததா ஏவ – அப்போதே
முக்த சாபம் – சாபம் நீங்கப் பெற்றதாய்
சம்பகாஷோக புன்னாகமல்லிகாத்யை – சம்பக, அசோக, புன்னாக, மல்லிகை இவைகளால்
சுசோபிதம் – விளங்குகிறதாய்
சூதைச் ச – மா மரங்களாலும்
பனஸை: – பலா மரங்களாலும்
பூகை: – பாக்கு மரங்களாலும்
நாரீகேலை: ச – தென்னை மரங்களாலும்
சோபிதம் – அலங்கரிக்கப்பட்டதாய்
வாபிகூபதடாகை; ச – நடைவாபி, கிணறு, குளங்கள் இவைகளாலும்
தீர்திகாபி – நீண்ட ஏரிகளாலும்
அலங்க்ருதம் – அலங்கரிக்கப்பட்டதாய்
மல்லிகா ஹேம கூடை: – மல்லிகைகள் நிறைந்த ஸ்வர்ணமயமான குன்றுகளாலும்
மண்டபை – மண்டபங்களாலும்
உபசோபிதம் – சிங்காரிக்கப்பட்டதாய்
சைத்ர ரதம் – குபேரனுடைய சைத்ர ரதம் என்கிற
வனே ததா – உத்யான வனம் போல
ரமணீயே – அழகியதாய்
பம்ராஜ ஹி – விளங்கிற்று
சாபத்தினால் பொலிவிழந்து கிடந்த தாடகா வனம் சாபம் நீங்கப் பெற்று பழைய பொலிவை அடைந்தது.
ஏரிகளாலும் குளங்களாலும் நல்ல மலர்ச் செடிகளாலும் அலங்கரிக்கப் பெற்றது.
இந்த வர்ணனையை இருபத்தாறாவது சர்க்கமான தாடகை வதம் என்ற சர்க்கத்தில் காணலாம்.
***