ராமாயணத்தில் சாபங்கள் (11) – கங்காவதரணமும், சாப நிவர்த்தியும்! (Post.13,266)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.266

Date uploaded in London – 23 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (11) 

ராமாயணத்தில் சாபங்கள் (11) – கங்காவதரணமும்சாப நிவர்த்தியும்!

ச.நாகராஜன்

கங்கா தேவி ஹிமவானிடத்தில் பிறந்தவள். ஹிமவானுடைய மூத்த குமாரி.

இந்த கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரதன் தவம் செய்ய ஆரம்பித்தான். காலம் சென்றது.

பிரம்மாவை நோக்கி அவன் தவம் செய்த தவத்தினால் பிரம்மா மகிழ்ச்சி அடைந்து அவன் முன் தோன்றினார்.

“பகீரதா! உன்னுடைய தவத்தால் ப்ரீதி அடைந்தேன். என்ன வரம் வேண்டும். கேள்” என்றார்  பிரம்மா.

உடனே பகீரதன், “ பிரம்மதேவரே! சகரருடைய குமாரர்கள் அனைவரும் என்னிடமிருந்து தர்ப்பண ஜலத்தை அடைய வேண்டும். அவர்களுடைய சாம்பல் கங்கையினுடைய ஜலத்தில் நனைக்கப்பட வேண்டும். இதனால் எனது முப்பாட்டன்மார்கள் அனைவரும் அழிவற்ற ஸ்வர்க்கலோகத்துக்குச் செல்ல வேண்டும்.

இக்ஷ்வாகு குலத்தில் எனக்கும் சந்ததியை அருள வேண்டும். எங்களுடைய குலமும் சந்ததி இல்லாத குலமாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும். இதுவே எனக்கு வேண்டிய வரமாகும்” என்றான்.

“அப்படியே ஆகட்டும்” என்று வரம் தந்த பிரம்மா, ‘கங்கை பூமியில் இறங்கினால் பூமா தேவி பொறுக்க மாட்டாள். அவளை சங்கரன் தாங்க வேண்டும். “ என்றார்.

உடனே பகீரதன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பித்தான்.

அவன் தவத்தால் உள்ளம் குளிர்ந்த சிவபிரான் பகீரதன் முன் தோன்றி, “ உனது இஷ்டம் போல கங்கையை சிரசில் தாங்கிக் கொள்கிறேன்” என்றார்.

பூமியை கங்கை அடைய முயற்சித்தாள். அது முடியவில்லை. சிவபிரான் தனது சிரசில் அவளைத் தாங்கிக் கொண்டார். அநேக வருடங்கள் அங்கேயே கங்கை சுழன்று கொண்டிருக்க, அவளைக் காணாத பகீரதன் மீண்டும் தவத்தை மேற்கொண்டான்.

இதனால் உள்ளம் குளிர்ந்த சிவபிரான் கங்கையை கீழே விட்டார்.

கங்கையில் ஏழு பிரவாஹங்கள் உண்டாயின.

ஹ்லாதினி, பாவனி, நளினி ஆகிய மங்கள தீர்த்தங்கள் கிழக்கு திசையை நோக்கிப் பாய்ந்தன.

ஸுசக்ஷுஸ்ஸு, சீதை, சிந்து ஆகிய மூன்று பிரவாஹங்கள் மேற்கு நோக்கிப் பாய்ந்தன.

ஏழாவதாக இருந்த கங்கை பகீரத மன்னனைப் பின் தொடர்ந்தது.

தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் வேகமாகப் பாயும் கங்கையை ஆச்சரியத்துடன் பார்த்துப் புகழ்ந்தனர்.

பூலோகவாசிகள், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட அனைவரும் ஈஸ்வரனின் திருமேனியிலிருந்து விழுந்த ஜலத்தைப் புண்யமானது என்று பாராட்டினர்.

(பாலகாண்டம் 43-ம் ஸர்க்கத்தில் முழு விவரங்களைக் காணலாம்.)

இராமாயணத்தில் இந்த விவரங்களைத் தொடர்ந்து பின்னர் வரும் ஸ்லோகங்கள் சாப நிவர்த்தியைக் குறிக்கின்றன.

43வது ஸர்க்கம் 27,28  ஸ்லோகங்கள் இதைத் தெரிவிக்கின்றன.

சாபாத் ப்ரபதிதா யே ச ககனாத்வசுதாதலம் |

க்ருத்வா தத்ராபிஷேகம் தே பபூபுர்கதகல்மஷா: ||

\யே – எவர்கள்

சாபாத் – சாபத்தினால்

ககனாத் – ஸ்வர்க்கத்திலிருந்து

வசுதாதலம் – பூமியை

ப்ரபதிதா: ச – அடைந்து அவஸ்தைப் படுகிறார்களோ

தே – அவர்கள்

தத்ர – அதில்

அபிஷேகம் – ஸ்நானத்தை

க்ருத்வா- செய்து

கதகல்மஷா : பாவங்களைப் போக்கினவர்களாய்

பபூவு: – ஆனார்கள்

இங்கு சாபம் அடைந்த அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் என்று வருகிறது. ஆனால் யார் யார் என்னென்ன சாபங்களைக் கொண்டிருந்தனர் என்ற விவரம் தரப்படவில்லை.

ஆனால் சாபநிவர்த்தி தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது!

அன்றிலிருந்து இன்று வரை அனைவரும் கங்கையில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.

***

Leave a comment

Leave a comment