
Post No. 13.269
Date uploaded in London – —24 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அயோத்தியில் ராமருக்கு சூர்யாபிஷேகம்; பக்தர்கள் ஆனந்தம்!
ச. நாகராஜன்
2024, ஜனவரியில் அயோத்தியில் ராமர் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்ட பின் முதல் ராம நவமி 17-4-2024-ல் புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது.
அனைத்து பக்தர்களுக்கும் ஒரே ஆனந்தம்.
சுமார் 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் ராம நவமி அன்று குழுமினர்.
காலை 3.30 மணியிலிருந்தே பக்தர்கள் குழும ஆரம்பித்து விட்டனர்.
ராம நவமி கொண்டாட்டத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
நண்பகலில் முறைப்படியான விழா ஆரம்பித்தது.
சூர்ய அபிஷேகம் சரியாக நண்பகல் 12-01க்கு ஆரம்பித்தது.
சூரியன் தன் பொன் கிரணங்களால் ஐந்து நிமிடங்கள் ராமருக்கு சூர்யாபிஷேகம் செய்த பின் 12-06க்கு அபிஷேகம் முடிந்தது.
ராமரின் நெற்றித் திலகத்தில் சூரியனின் பொற்கிரணங்கள் விழுந்தன. சுமார் 75 மிலிமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருந்தது திலகம்.
எப்படி இவ்வளவு சரியாக கிரணங்கள் ராமரின் நெற்றித் திலகத்தில் விழுந்தன என்றால் இதில் விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தங்கள் பங்கை சரியாகச் செய்ததால் தான்!
அயோத்தியில் சூரிய சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கவனித்தனர்.
சரியான திசை, பிரதிபலிப்பு, லென்ஸ் ஆகியவற்றை விஞ்ஞானிகள் நிர்ணயித்தனர். லென்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தும் ஆலயத்தில் மேல் அடுக்கில் நிர்மாணிக்கப்பட்டன. சூரிய கிரணங்கள் சுழற்றப்பட்டு சரியாக ராமரின் உருவத்தில் நெற்றித் திலகத்தின் மீது விழும் படியாகச் செய்யப்பட்டது. முதலில் கிரணங்கள் மேல் அடுக்கில் உள்ள லென்ஸ் மீது விழுந்தன. பின்னர் மூன்று லென்ஸ்கள் வழியே இரண்டாம் அடுக்கில் இருந்த கண்ணாடியில் வந்து விழுந்தன.
இறுதியில் ராமரின் திருவுருவச் சிலை மீது அவை விழுந்தன.
75 மிலிமீட்டர் குறுக்களவு உள்ள வட்ட வடிவத்தில் அவை ராமரின் நெற்றித் திலகத்தில் சரியாக விழுந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
செவ்வாய்க்கிழமை அன்றே வந்த பக்தர்கள் சரயு நதியில் நீராடி வழிபாட்டைத் துவங்கி விட்டனர்.
புதன்கிழமை ராமநவமி அன்று சரியாக நண்பகலில் ராமருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. 56 விதமான உணவு வகைகள் அடங்கிய சாபன்போக் ராமருக்கு நிவேதனம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக ஒரு குடத்தில் இருந்த வெவ்வேறு மூலிகைகளால் திருவுருவச் சிலை அலங்கரிக்கப்பட்டது.
வைரங்கள் முத்துக்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளால் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டது.
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட திருவுருவம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
ஐந்து வாயில்கள் வழியே பக்தர்கள் சீராக உள்ளே செல்ல வழி வகை செய்யப்பட்டது. பிரசாத விநியோகமும் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சி LEDs வழியாக ஒளிபரப்பட்டதோடு, தூர்தர்ஷன் வாயிலாகவும் ஒளிபரப்பப்பட்டது.