
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.272
Date uploaded in London – —25 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 1
ச. நாகராஜன்
ப்ரெண்டா மில்னெர்
உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிஸியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமானபல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட “மூளைப் பெண்மணி” இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!
பிறப்பும் இளமையும்
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று ப்ரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமரிசகர், பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகர். தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட ப்ரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.
1918-ல் ஏற்பட்ட இன்ஃபுளுயென்ஸா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த ப்ரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.
19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.
நியூரோ பிஸியாலஜி என்று அறியப்படும் நரம்பு இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.
நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மூளை
மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:
மூளையில் 73% நீர் தான்.
2 சதவிகிதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும்.
மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200 கிராம்.
உடல் எடையில் இது 2 சதவிகிதம் தான். ஆனால் 20 சதவிகித ஆக்ஸிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.
நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.
மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம்.
மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.
கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் – நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது.
மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன.
25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது.
தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்ஸிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.
மூளையின் சேமிக்கும் திறனை முழுதுமாக இன்னும் அறிய முடியவில்லை. எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது.
இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் – முடிவில்லாமல்!
ஒன்பது வகை அறிவு
மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.
மொழி வகையிலான அறிவு- LINGUISTIC 2) தர்க்கரீதியிலான அறிவு – LOGICAL – MATHEMATICAL 3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு – VISUAL AND SPATIAL 4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு – BODILY KINESTHETIC
5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு – INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு – INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு – NATURALISTIC. 9) புறநிலை பற்றிய அறிவு – EXISTENTIAL.
ஆக இவற்றை கல்விப் பயிற்சியின் மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம்.
மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது.
மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த ப்ரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.
to be continued…………………………….
******