
Post No. 13.293
Date uploaded in London – —1 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (17)
ராமாயணத்தில் சாபங்கள் (17) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!
ச.நாகராஜன்
சதானந்தர் அடுத்து ஶ்ரீ ராமருக்கு சுனச்சேபனின் விருத்தாந்தத்தைக் கூறலானார்.
முன்னொரு காலத்தில் அயோத்தி மன்னனாகிய அம்பரீஷன் என்பவன் ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தான். அவனது யாக பசுவை இந்திரன் அபகரித்து எடுத்துக் கொண்டு போய் விட்டான். யாக பசு காணாமல் போகவே புரோஹிதர் அம்பரீஷனைப் பார்த்து, “யாக பசு காணாமல் போய் விட்டது. தோஷ நிவர்த்தியாக, சீக்கிரமாக ஒரு மனிதனையே நீ கொண்டு வர வேண்டும்” என்றார்.
அரசன் எல்லா தேசங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பட்டணங்களிலும் தகுந்த ஒரு மனிதனைத் தேட ஆரம்பித்தான்.
அப்போது பிரகுதுந்தம் என்ற இடத்தில் ரீசிகர் என்ற முனிவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவரை வணங்கிய அம்பரீஷன், “ஒரு லட்சம் பசு மாடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு புதல்வனை எனக்குக் கொடுங்கள்’ என்று வேண்டினான்.
ரிசீகர், “என்னுடைய மூத்த புதல்வனை விற்க மாட்டேன்” என்றார்.
அவரது மனைவி, “கடைசிப் பிள்ளையான சுனகன் எனக்கு அருமையான பிள்ளை. அவனைத் தர முடியாது” என்றாள்.
அப்போது நடுப்பிள்ளையான சுனச்சேபன் என்பவன் தானாகவே முன் வந்து,” என்னை அழைத்துக் கொண்டு செல்லலாம்” என்று கூறினான்.
அப்படியே ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து விட்டு அம்பரீஷன் சுனச்சேபனை தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு செல்லலானான்.
அவர்கள் புஷ்கர க்ஷேத்திரத்தை அடைந்த போது அம்பரீஷன் சற்று இளைப்பாறினான். அப்போது சுனச்சேபன் அங்கே இருந்த தனது அம்மான் ஆகிய விஸ்வாமித்திரரைப் பார்த்து, அவர் மடியில் விழுந்தான்.
“என்னை ரக்ஷியுங்கள். அரசனும் எடுத்த காரியம் முடிக்க வேண்டும். நானும் ஸ்வர்க்க லோகம் செல்ல வேண்டும். அருள் புரியுங்கள்” என்றான்.
உடனே விஸ்வாமித்திரர் தன் பிள்ளைகளைப் பார்த்து, “நீங்கள் அரசனுடைய யாக பசுக்களாக இருந்து அக்னி பகவானுக்கு திருப்தி அளியுங்கள். சுனச்சேபனும் காப்பாற்றப்பட்டவன் ஆவான்” என்றார்.
மனுஷ்யந்தன் முதலான அவரது குமாரர்கள் அந்த வார்த்தையைக் கேட்டு பரிகாசமாக, “பிரபுவே! தனது பிள்ளைகளை பறி கொடுத்து அயலான் புதல்வனை ஏன் தான் காப்பாற்றப் பார்க்கிறீர்? சாப்பாட்டில் நாய் இறைச்சி எவ்வண்ணமோ அவ்வண்ணமோ செய்து முடிக்க வேண்டாதது இது என்று நாங்கள் அபிப்ராயப் படுகிறோம்” என்றனர்.
இதனால் கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், “நீங்கள் எல்லோரும் பிறப்புகளில் வசிஷ்ட புதல்வர்கள் எவ்வண்ணம் நாய் இறைச்சி உண்கின்றவர்களாய் ஆயிரம் வருஷங்கள் இருப்பார்களோ அது போலவே நாய் இறைச்சி உண்டு பூமியில் ஆயிரம் வருஷங்கள் வசியுங்கள்” என்று சாபம் கொடுத்தார்.
விஸ்வாமித்திரர் கூறுவது இது:
நிஸ்ஸாத்வஸமிதம் ப்ரோக்தம் தர்மாதபி விகர்ஹிதம் |
அதிக்ரம்ய து மத் வாகியம் தாருணம் ரோமஹர்ஷணம் ||
து – இது விஷயத்தில்
மத் வாக்யம் – எனது நியமனத்தை
அதிக்ரம்ய – அதிலங்கனம் செய்து
ப்ரோக்தம் இதம் – பதிலாகச் சொல்லப்பட்டதாகிய இது (உங்களின்)
நிஸ்ஸாத்வஸம் – நெஞ்சழுத்தத்தை நன்கு காட்டுகிறது
தர்மாத் – தர்ம வழியிலிருந்து
விகர்ஹிதம் – விலகியதாய் இருக்கிறது
ரோமஹர்ஷணம் – மயிர்க்கூச்செறியும் வண்ணமாய்
அபி – கொஞ்சம் கூட
தாருணம் – சஹிக்க முடியாததாக இருக்கிறது
ஸ்வமாம்ஸபோஜின: சர்வே வாஸிஷ்டா இவ ஜாதிஷு |
பூர்ணம் வர்ஷசஹஸ்ரம் து ப்ருதிவ்யாமனுவத்ஸ்யத ||
சர்வே – நீங்கள் எல்லோரும்
ஜாதிஷு – பிறப்புகளில்
வாஸிஷ்டா: – வஸிஷ்ட புதல்வர்கள்
இவ – எவ்வண்ணமோ அவ்வண்ணமே
ஸ்வமாம்ஸபோஜின: – நாய் இறைச்சியை உண்கின்றவர்களாய்
வர்ஷ சஹஸ்ரம் – ஆயிரம் வருடங்கள்
பூர்ணம் து – பூரணமாகும் வரை
ப்ருதிவ்யாம் – பூமியில்
அனுவத்ஸ்யத – வசியுங்கள்
(என்று விஸ்வாமித்திரர் சாபம் கொடுத்தார்!)
பாலகாண்டம் 62-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 16 & 17)
இவ்வாறு விஸ்வாமித்திரர் சாபம் கொடுத்தார்.
பின்னர் விஸ்வாமித்திரர் சுனச்சேபனிடம், “இரு தெய்வ சக்தியுள்ள ரிக்குகளையே உருக்கமாய் ஜபிப்பாயாக! அதனால் உன் மனோபீஷ்டத்தை அடைவாய்” என்றார்.
அப்படியே அவன் யூபஸ்தம்பத்தில் கட்டப்பட அவன் இரு தேவதைகளாகிய இந்திரனையும் நாராயணனையும் ரிக்குகளைச் சொல்லி ஸ்துதி செய்தான்.
அதனால் உள்ளம் குளிர்ந்த இந்திரன் சுனச்சேபனுக்கு நீடித்த உலக வாழ்க்கையை அளித்தான்.
இவ்வாறாக சுனச்சேபனின் வரலாறு பாலகாண்டம் 61 மற்றும் 62-ம் ஸர்க்கங்களில் விரிவாகச் சொல்லப்படுகிறது.
**
tags- ராமாயணத்தில் சாபங்கள்