
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.296
Date uploaded in London – —2 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (18)
ராமாயணத்தில் சாபங்கள் (18) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்!
ச.நாகராஜன்
சதானந்தர் அடுத்து ஶ்ரீ ராமருக்கு விஸ்வாமித்திரரின் கோரமான தவத்தைப் பற்றிச் சொல்லலானார்.
கைகளை உயரத் தூக்கிக் கொண்டு கற்று ஒன்றையே புஜிப்பவராகி, கோடையில் நாற்புறமும் அக்கின் ஜ்வாலைகள் தாக்க, மழைகாலத்தில் மூட்டமில்லா வெளியில் நின்று, குளிர் காலத்தில் ஜலத்தினுள் மூழ்கியவராய், இரவும் பகலுமாக அநேக ஆயிர வருடங்கள் தவம் புரியலானார் விஸ்வாமித்திரர்.
இந்த தவத்தைக் கண்ட தேவேந்திரனுக்கு திகில் உண்டாயிற்று,
அவன் ரம்பையை அழைத்தான்.
“இப்போது விஸ்வாமித்திரருக்கு சிற்றின்பங்களில் மோகத்தால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தை நீ ஏற்படுத்து” என்றான்.
“தேவர்களின் தலைவனே! என் மீது அவர் தனது கோபத்தைக் காட்டி விடுவார்” என்று ரம்பா உடல் நடுநடுங்க பதில் கூறினாள்.
உடனே இந்திரன், ‘வசந்த காலத்தில் மன்மதனுடன் குயில் உருவம் கொண்டு நானும் உனது பக்கத்தில் இருந்து காப்பாற்றுகிறேன்” என்றான்.
விஸ்வாமித்திரர் அருகே குயில் வந்து கூவ, ரம்பை ஒப்புயர்வற்ற அழகிய காம விகாரத்தை உண்டு பண்ணும் மேனியுடன் அவர் முன் வந்து ஆசை காட்டி மோஹித்தாள்.
குயிலின் கூவல், ரம்பையின் மோஹிக்கும் உருவம் – ஆகியவற்றைக் கண்ட விஸ்வாமித்திரர் ஆபத்தைக் கண்டு கொண்டார்.
இந்திரனுடைய காரியத்தை ஞான திருஷ்டியால் அறிந்தார்.
உடனே ரம்பையைப் பார்த்து சபித்தார்.
யன்மாம் லோபயஸே ரம்பே காமக்ரோதஜயைஷிணம் |
தச வர்ஷ சஹஸ்ராணி ஷைலீ ஸ்தாஸ்யஸி துர்பகே ||
ரம்பே – ரம்பையே!
காமக்ரோத ஜயைஷிணம் – காமத்தையும் குரோதத்தையும் அடக்கி வெல்ல முயற்சி செய்யும்
மாம் – என்னை
லோபயஸே – நீ ஆசை காட்டி துர்மார்க்கத்தில் இழுக்க வந்திருக்கிறாய்.
யத் – ஆகவே இந்த காரணத்தினால்
துர்பகே – அசட்டை செய்து தள்ளிவிடப்பட்ட துஷ்டையே!
தசவர்ஷ சஹஸ்ராணி – பதினாயிரம் வருட காலம்
ஷைலீ – கல் உருவமாய்
ஸ்தாஸ்யஸி – நீ இருக்கக் கடவாய்
ப்ராஹ்மண: சுமஹாதேஜாஸ்தபோபலமன்வித: |
உத்தரிண்யதி ரம்பே த்வாம் மத்க்ரோதகலுஷீக்ருதாம் ||
ரம்பே – ரம்பையே
தபோபல சமன்வித: – தவ வலிமையால் உண்டாகிய
சுமஹாதேஜா: – பிரசித்தி பெற்ற மஹா தேஜோவானாகிய
ப்ராஹ்மண: – பிரம்மதேவரின் புதல்வர் (வசிஷ்டரானவர்)
மத்க்ரோதகலுஷீக்ருதாம் – என் கோபத்தால் உண்டாகிய கெடுதி அடைந்த
த்வாம் – உன்னை
உத்தரிண்யதி – ஆபத்திலிருந்து விடுவிப்பார்
(பால காண்டம் 64-வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 11 & 12)
இந்த சாபத்தால் உடனேயே ரம்பை கல்லுருவாக ஆகி விட்டாள்.
அவருடைய சாபத்தைக் கேட்ட மன்மதனை ஆவாஹனம் செய்து கொண்டிருந்த இந்திரனும் அந்தர்தானம் ஆயினன்.
தனது கோபம் கொள்ளும் குணத்தை எண்ணி வருத்தமடைந்த விஸ்வாமித்திரர் இனி நான் கோபமே கொள்ளாமல் இருப்பேனாகுக. மூச்சுக்காற்றையும் விடாமல் இருப்பேன் ஆகுக.” என்று உறுதி பூண்டு ஆயிர வருஷ காலம் இந்த விதமான தீக்ஷையுடன் இருந்தார்.
இப்படியாக ரம்பை மீதான சாபம் விஸ்வாமித்திரரால் கொடுக்கப்பட்ட வரலாற்றை சதானந்தர் ஶ்ரீ ராமருக்கு எடுத்துரைத்தார்.
பால காண்டம் 64-வது ஸர்க்கத்தில் விரிவாக இந்த வரலாற்றைக் காணலாம்.
இத்துடன் பால காண்டத்தில் வரும் சாபங்கள் முடிவடைகிறது.
வால்மீகி ராமாயணத்தில் உள்ள 61 சாபங்களில் 18 சாபங்கள் பால காண்டத்தில் இடம் பெறுகிறது
*********