
Date uploaded in London – 3 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஆசாரக்கோவை என்ற நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இது சம்ஸ்க்ருதத்தில் உள்ள செய்யுட்களை தமிழில் வழங்குகிறது. நூறு செய்யுட்கள் இதில் அடக்கம். நல்லோரின் நடத்தை முறைகள் ஆசாரம் எனப்படும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட நூல் என்பதால் சில விஷயங்கள் இன்று பொருத்தமில்லாமலோ அல்லது பின்பற்ற முடியாமலோ இருக்கலாம். ஆயினும் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் எவ்வாறு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.
உணவு உண்ணுதல் பற்றிய விதிமுறைகளை மேலை நாட்டினர் கூட இன்றும் பின்பற்றுகின்றனர் நம் நாட்டில் மந்திரம் சொல்லி உண்ணுவது போல மேலை நாட்டினர் அங்கு வந்த அன்றைய கதாநாயகனுக்கு வாழ்த்து கூறி சியர்ஸ் Cheers என்று சொல்லி கிளாஸ்களை உயர்த்திவிட்டு சாப்பிடுகிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆயின் இறைவனுக்கு நன்றி சொல்லி உண்ணு கிறர்கள் . இந்தியாவில் உண்ணும் உணவை அமைர்ஹாம் என்று மந்திரம் சொல்லி உண்ணுவர் . முடிவில் அன்ன தாதா சுகி பவ என்று வாழ்த்துவர்- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.
பாடல்18 : உண்ணும் முறை
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெடுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.
குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

பாடல் 19 : உண்ணுவதற்கு முன்னர் கை , கால் கழுவு
காலில்நீர் நீங்காமை உண்டிடுக; பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
பொருள் :
கால் கழுவி, நீர் உலர்வதற்கு முன்னரே (உடனே) சாப்பிட அமந்துவிடவேண்டும்; ஈரம் காய்ந்த பின்னரே படுக்கவேண்டும், என்பது சிறந்த அறிவு உடையவர் முடிவு.
பாடல் 20 : உண்ணும் போது பேசாமல் உண்ண வேண்டும்
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து,
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்,
பிறிதுயாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு,
உண்க உகாஅமை நன்கு!
பொருள் :
உணவு உண்ணும் பொழுது கிழக்குத் திசை பார்த்து அமர்ந்து, தூங்காமல், அசைந்தாடாமல், நன்றாக அமர்ந்து, வேறு எங்கும் பார்க்காமல், பேசாமல், உணவை வணங்கி, சிந்தாமல் நன்றாக மென்று உண்ண வேண்டும்.
பாடல் 21 : பறவைகளுக்கு முதலில் உணவிடு
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
பொருள் :
என்றும் ஒழுக்கம் தவறாதவர்கள் அதிதி என்ற விருந்தினர் வீட்டிலுள்ள வயதானவர்கள், பசு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு கொடுத்த பின்னரே தாங்கள் உண்பார்கள்.
பறவைகளுக்கு முதலில் உணவிடுதற்கு அறிவியல் காரணங்கள் உள்ளன . சமைத்த உணவில் ஏதேனும் விஷப்பொருள் விழுந்திருந்தாலும் சிறிய உடல் படைத்த பறவைகள் உடனே இறந்து விடும்; இது பிறருக்கு எச்க்காரிகையாக அமையும்
பாடல் 22 : வாயிற்படிக்கு நேராக உண்ணு
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டிற் பாடு.
பொருள் :
முன்சொன்ன கிழக்கு முகமாக அமர்ந்து உண்ணமுடியவில்லை என்றால் மற்ற திசைகளை நோக்கியும் உண்ணலாம். வாயிற்படிக்கு நேராக இருந்து உண்ணுதல் நல்லது என்று புகழ்ந்தார்கள்; வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டுப் படுத்தல் நல்லதல்ல என்று இகழ்ந்தார்கள் அறம் அறிந்தவர்கள்.
இந்தக் காலத்தில் இது பொருந்துமா என்று தெரியவில்லை; நாம் சாப்பிடும்போது மற்றவர்களையும் அழைப்பது போல வாசலுக்கு நேராக அமர்ந்து உணவு உண்டனர் போலும். இப்போது வீடுகள் பல்வேறு திசைகளை நோக்கிக் கட்டப்படுவதால் கிழக்கு திசை என்பதும் பொருந்தாது. அந்தக்காலத்தில் காலையிலோ மாலையிலோ சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும்படி வீடுகளையும் கோவில்களையும் கட்டினர்
பாடல் 23 : படுத்துக் கொண்டு உண்ணாதே
கிடந்துண்ணார்; நின்றுண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிகவுண்ணார்; கட்டின்மேல் உண்ணார்;
இறந்தொன்றும் தின்னற்க நின்று.
பொருள் :
படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் திறந்த வெளியிலும் உண்ணக்கூடாது. ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. நெறி இல்லாமல் அளவு கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு திண்ணல் ஆகாது.
பாடல் 24 : உண்ணும் போது நெருக்கம் வேண்டாம்
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார், தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.
பொருள் :
பெரியவர்களுடன் சமபந்தியாக இருந்து உண்ணும் பொழுது, அவர்கள் உண்ணத் தொடங்குமுன் தாம் உண்ணார், அவர்கள் உண்டு எழுவதற்கு முன்னால் தாம் எழமாட்டார்; அவர்களுடன் மிக நெருங்(க்)கி அமர்ந்துண்ணார்; அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்து உண்ணுதலும் ஆகாது.
பாடல் 25 : முதலில் இனிப்பு!
கைப்பன வெல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க, முறைவகையால் ஊண்.
பொருள் :
கசப்பான உணவை கடைசியிலும் இனிப்பான உணவை முதலிலும் மற்ற சுவைகளை இடையிலும் கிரமமாக (முறைப்படி) உண்ணவேண்டும்.
மேலை நாடுகளில் கடைசியில்தான் இனிப்பு பரிமாறப்படும்; அதை டெஸெர்ட் dessert என்பர் . முதலில் இனிப்பு சாப்பிவிட்டால் நாம் உண்ணும் சோறு போன் ற்வற்றைக் குறைத்து உண்போம்; வயிறு பெருக்காது ; தொந்தி விழாது
பாடல் 40 : உண்ணும் பொழுது திட்டாதே
உயர்ந்ததின் மேலிரார், உள்ளழிவு செய்யார்,
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைகள் உண்ணு மிடத்து.
பொருள் :
சிறுவர்கள் உண்ணுமிடத்தில் பெரியவர்கள் உயர்ந்த இடத்தின் மேல் இருத்தல் கூடாது. சிறுவர்கள் செய்யக்கூடாத குற்றங்கள் செய்திருந்தாலும் உண்ணும் பொழுது அவர்கள் மனம் நோகும்படி எதுவும் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது.
என் கருத்து
இந்தப் பாடலை சிறிது அலசுவோம் ; பந்தி வஞ்சனை கூடாது . சாப்பிடும் இடத்தில் அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே மரியாதைதான். ; சிறியோர் பெரியோர் என்ற வேறுபாடும் இல்லை. அந்த இடத்தில் சுடு சொற்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் என்ன தவறு செய்திருந்தாலும் சாப்பிடும்போது அ வர்களிடம் சொன்னால் மனம் மிக நோவதுடன், கோபத்தில் சபிக்கவும் செய்வார்கள் நந்த வம்ச அரசன் ஒருவன், சாணக்கியனை சாப்பிடும் மண்டபத்தில் அவமதித்து வெளியேற்றியதால் நந்த வம்சத்தை சாணக்கியன் அடியோடு ஒழித்து மகத சாம்ராஜ்யத்தை நிறுவியதை சம்ஸ்க்ருத நாடகங்களில் காண்கிறோம்.
To be contined———————————–
tags–உணவு, உண்ணும் முறை, ஆரோக்கியம் , ஆசாரக் கோவை , பாடல்கள்