Post No. 13,301
Date uploaded in London – 3 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா அல்லது உடல் நலம் குன்றியிருக்கிறாரா என்பதை எப்படி அறிவது? இதை நாமே அறிந்துகொள்ள நமது உடல் சில அடையாளங்களை, அறிகுறிகளைக் காட்டுகிறது. அதைப் புரிந்துகொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .
உடலை ஒரு நோய் தாக்கும் வரை பலருக்கும் மருத்துவ விஷயங்களில் ஆர்வம் இருப்பதில்லை. நோய் என்று டாக்டர் அறிவித்துவிட்டாலோ உலகிலுள்ள அத்தனை மருத்துவக் கட்டுரைகளையும் புஸ்தகங்களையும் ஊன்றிப் படிப்பது வழக்கமாகிவிடுகிறது . எந்த மூலிகை என்ன பலன் தரும் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவ்வாறு கடைசி நேரம் வரை காத்திராமல், எப்போது டாக்டரிடம் போக வேண்டும் என்பதை முதலில் அறிவோம் .
உடலின் எடை
ஒருவரின் எடை திடீரென்று கூடினாலோ குறைந்தாலோ நல்லதல்ல. திடீரென்று காரணமில்லாமல் குறைந்தால் பெரிய நோயின் அறிகுறி ஆகும்; உடனே டாக்டரை கலந்தாலோசிப்பது அவசியம். நாமாக உடற்பயிற்சி செய்து குறைந்தால் கவலைப்படத் தேவை இல்லை. அதே போல காரணமில்லாமல் உடல் எடை கூடினால் உணவு பற்றி நமக்கு ஆலோசனை கூறும் (Dietician ) டயடீசியனை பார்க்க வேண்டும் . அவர் முதலில் நீங்கள் காலை முதல் இரவு வரை என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு எழுதிக்கொண்டு, என்ன மாறுதல் செய்யவேண்டும் என்று கூறுவார்.
வாய் ஆரோக்கியம்
ஒருவருக்கு வாயில் புண் வந்தாலோ (Ulcer)
வாய் வெந்து போனது போல இருந்தாலோ அது நல்ல அறிகுறி அல்ல. ஏதோ ஓரிரு நாள் இப்படி இருந்தால் டாக்டரிடம் ஓடிவிடாதீர்கள். அடிக்கடி இப்படி வந்தாலோ, தொடர்ந்து இந்த நிலை இருந்தாலோ மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஈறுகளிலிருந்து (Gums ) ரத்தம் கசிந்தாலோ கடுமையான பல்வலி இருந்தாலோ,
பல் கூசுவது நீடித்தாலோ நல்ல அறிகுறி அல்ல.
கண் சொல்லும் செய்திகள்
காதல் பார்வை, வெறுப்புப் பார்வை, கோபப் பார்வை என்பதையெல்லாம் பரத நாட்டியத்தில் காட்டுவார்கள் ; அது எல்லாம் நடிப்பு.. உண்மையான ஆரோக்கியத்தையும் , ஆரோக்கியம் இல்லாத நிலையையும் கூட கண்கள் காட்டிவிடும் கண் சிவத்தல், கண் அரித்தல் இவைகள் நீடித்தால் கண்களைக் கசக்காமல் டாக்டரிடம் செல்லுங்கள் ; அதே போல கண்ணின் சாதாரண வெள்ளை நிறம் மஞ்சளாக மாறினாலும் காமாலையாக இருக்கலாம்.
கால், கணுக்கால் வீக்கம்
வயதானவர்களுக்கு காலின் நிலை மாறிக்கொண்டே வரும். சிலருக்கு காலிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காலில் அடிபட்டதே தெரியாமல் இருக்கலாம்; அதாவது இரத்தம் கசியும் காயம் ஏற்பட்டும் கூட, வலி அல்லது உணர்ச்சியே இல்லாமல் இருக்கலாம். உடனே டாக்டரிடம் சென்றால் அவர் தக்க ஆலோசனை சொல்லுவார் . உங்களைக் கண்களை மூடும்படி சொல்லிவிட்டு ஒரு குச்சியை ஓவ்வொரு இடமாகத் தொட்டு, உங்களுக்கு உணர்ச்சி தெரிந்தால் ஆமாம் என்று சொல்லுங்கள் என்பார். இதன் மூலம் அவர் உங்கள் காலின் ஆரோக்கியத்தை அறிவார்.
எதையும் தாங்கும் இருதயம்
உங்களுக்கு சம வயது உள்ளவர்களுடன் நீங்கள் நடந்து போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம்; அப்போது உங்களுக்கு மூச்சு விடுவது கஷ்டமாக இருந்தாலோ, மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கினாலோ இருதயம் பலவீனம் அடைந்து விட்டது என்ற அறிகுறியைத் தெரிவிக்கிறது. அதே போல பஸ் அல்லது ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடும்போது இருதயத்தில் / மார்பில் வலி ஏற்பட்டாலும் ரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ (Cholesterol )
என்னும் கொழுப்புச் சத்து கூடிவிட்டதா என்று மருத்துவரிடம் கேட்பது நல்லது
தோலின் நிறம்
வழக்கமான நிறம் இல்லாமல் தோலின் நிறம் மஞ்சளாக மாறினால் மருத்துவரைக் கலந்து ஆலோசியுங்கள் .
மல ஜல மாற்றம்
தினமும் காலைக் கடன் செய்து முடிப்பது ஆரயோக்கியமான வாழ்வினைக் காட்டும். மலச்சிக்கல் (Constipation) இருந்தாலோ ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் காலைக் கடன்களைச் செய்வது வழக்கமாவிவிட்டாலோ, வயிற்றின் நலம், ஜீரண சக்தி சரியில்லை என்று பொருள். வயிற்று எரிச்சல், பொருமல், வாயு வெளியேற்றம் போனறவை தொடர்ம்ந்து இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள். ஒரு கல்யாணச் சாப்பாடு, விருந்துச் சாப்பாட்டுக்குப் பின்னர் வரும் தொல்லை எல்லாம் ஒரு வேளை பட்டினி கிடந்தாலே தீர்ந்துவிடும் அப்படி இல்லாமல் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் அது நோயின் அறிகுறி . மலத்தில் ரத்தக் கறை , அல்லது கருப்பான மலம், வெளுப்பான மலம் இவை இருந்தாலும் நோயின் அறிகுறிகள்தான். (கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கப்படும் அயன்/ இரும்புச் சத்து மாத்திரைகளால் நிறம் மாறும்; மலச்சிக்கல் வரும்.) அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்
சிறுநீர் போகும்போது எரிச்சல் இல்லாமல் வெளுப்பு நிறமாக இருந்தால் ஆரோக்கியம் என்று பொருள்; மஞ்சள் நிறம் நல்லதல்ல. ஆனால் எரிச்சலோ வலியோ, ரத்தக் கறையோ (Blood Stain) தென்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.
இருமலும் தடுமனும்
மழைக் காலம் வந்தாலோ , வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் இருமல் வந்தாலோ மற்றவர்களுக்கும் பரவுவது இயற்கையே. குளிர் வீசும் மேலை நாடுகளில், மூடப்பட்ட, காற்றோட்டமில்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது . மேலை நாடுகளில் ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பெற்றோர்களை அழைத்து பையனையோ பெண்ணையோ வீட்டுக்கு கூட்டிப்போய்விடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள் ; நாலைந்து நாட்களில் இருமல் குறையாமல், அதிகரித்துக்கொண்டே வந்தால் டாக்டரை அணுக வேண்டும் சிலவகை இருமல் ஒரு மாதம் கூட நீடிக்கிறது. ஆனால் அதிகரித்தால் காச நோய் எனப்படும் டி.பி.யா (TB/Tuberculosis)
என்று பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது ..
அதிகரித்துக்கொண்டே வரும் இருமல், மாலைநேரத்தில் காய்ச்சல், இரவு நேரத்தில் வியர்த்தல் ஆகிய மூன்றும் இருந்தால் காச நோயா (க்ஷய ரோகம் அல்லது டி .பி.) என்று சோதித்துக்கொள்ளுங்கள்.

மன நலம்
ஒருவர் தினமும் ஆறு 6 மணி முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்க வேண்டும். அப்படி உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு யோஜனை செய்து கொண்டிருப்பது நல்லதல்ல. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, கவலைப்படுவது, வழக்கமாக செய்து வந்த வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, மற்றவர்கள் பேசும்போது அவர்கள் தனைப் பற் றித்தான் ‘கிசுகிசு’ பேசுகிறார்கள் என்று சந்தேகப்படுவது, எதற்காக நாம் வாழ வேண்டும் என்று நினைப்பது ஆகியவை மன நோயின் அறிகுறிகள்; சில துக்க நிகழ்வுகளால் அல்லது தோல்விகளால், பொருள் இழப்புக்களால் இவை யாருக்கும் வாழ்க்கையில் ஓரிரு முறை வரத்தான் செய்யும். இப்படிப்பட்ட நிலை வாரக் கணக்கில், மாதக் கணக்கில் நீடித்தால் மருத்துவர்கள் உங்களுக்கு தக்க ஆலோசனை வழங்குவார்.
ஜனன உறுப்புகள் (Genital Organs)
சிறுநீர் , மலம் ஆகியன கழிக்கும் உறுப்புகளில் கடுமையான புண்கள் இருந்தால் வெட்கப்படாமல் டாக்டரைக் கலந்தாலோசியுங்கள் . பாலியல் நோய் (STD, VD) என்று டாக்டர்கள் சொன்னாலும் கவலைப்படத் தேவையில்லை ; எல்லாவற்றையும் குணப்படுத்த மருந்துகள் இருக்கின்றன செக்ஸ் விஷயங்ககளில் ஈடுபடும்போது வலி ஏற்பட்டாலும் கலந்துபேசுவது நல்லது .
பெண்களுக்கு எச்சரிக்கை
பெண்கள் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தாய்ப்பால் கொடுக்கும் உறுப்புகளில் ஏற்ப்படும் மாற்றம் ஆகும். குளிக்கும் போது அந்த உறுப்புகளை அமுக்கி ஏதேனும் (உள்ளுக்குள்)கட்டி இருந்து அது சில வாரங்ககளுக்கு நீடித்தால் மருத்துவர்களிடம் வெட்கப்படாமல் சொல்ல வேண்டும்.
இந்த உறுப்புகளில் வரும் கட்டி, சாதாரணமாக வரும் கட்டியாகவோ புற்றுநோய் (Breast Cancer) கட்டியாகவோ இருக்கலாம். டாக்டரும் கூட சாம்பிள் எடுத்து பரிசோதனக்கு அனுப்பி முடிவு வந்த வுடன்தான் அது புற்றுநோயா என்று சொல்ல முடியும்; ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.
இதே போல மாதவிலக்கில் வரும் மாற்றங்களையும் டாக்டரிடம் சொல்ல வேண்டும் ; 28 நாட்களுக்கு ஒருமுறை வரவேண்டியது முன் பின் தள்ளிப்போகலாம். அதே போல மாதவிலக்கு நீடிப்பது எட்டு நாள் வரை கூட இருக்கலாம் . அடிக்கடி மாறிக்கொண்டே வந்தால் மட்டும் டாக்டர்களிடம் சொல்லுங்கள்

ஆரோக்கிய வாழ்வு என்பது பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கிறது. டாக்டர்களிடம் வெட்கப்படாமல் சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டும்.
– சுபம்-Tags- நோய் அறிகுறிகள், டாக்டரிடம், ஆலோசனை, உடல் உறுப்புகள்