WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.312
Date uploaded in London – —7 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2
ச .நாகராஜன்
விண்வெளிப் பயணத்திற்குப் பின்!
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.
முக்கியமாக பெண்மணிகள் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர்.
ஏராளமான இசைத் தட்டுகள் வெளியாகின. உலகெங்கிலுமிருந்து அவருக்கு பாராட்டுச் செய்திகள் மலையெனக் குவிந்தன.
டெல்லியில், “பெண்களின் அடிமைத் தளையை உடைக்கப் பிறந்த பெண்மணி” என்று அவர் கொண்டாடப்பட்டார்.
குடும்பம்
வாலண்டினா 1963-ம் வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஆண்ட்ரியன் நிலோலயெவ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு ரஷிய அதிபர் நிகிதா குருஷேவ் தலைமை தாங்கினார். 1964, ஜூன் எட்டாம் தேதி எலினா என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். ஆண்ட்ரியனும் விண்வெளி வீரர் என்பதால் விண்வெளி தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றது.
1977-ல் திருமண உறவு ஒரு முடிவுக்கு வர 1982இல் ஆண்ட்ரியனை விவாகரத்து செய்தார் வாலண்டினா. தனது கணவரைப் பற்றி விவாகரத்து ஆனதற்குப் பின்னர் ஒரே ஒரு முறை தான் அவர் விமரிசனம் செய்து கூறினார் இப்படி : “வேலையில் அவர் தங்கம்; வீட்டில் அவர் சர்வாதிகாரி!”
பின்னர் யூலி ஷபோஷ்னிகோவ் என்பவரை மணந்தார். 1999-ல் யூலி மறைந்தார்.
அரசியல் பிரவேசம்
1966-ல் அவர் அரசியல்வாதியாக ஆனார். சோவியத் பெண்கள் கமிட்டிக்குத் தலைவராக ஆணார். ரஷிய சுப்ரீம் கவுன்சிலுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது உடை அணியும் பாணியும், அவர் அணிந்து கொள்ளும் உடைகளும் அனைத்துப் பெண்மணிகளையும் கவர்ந்தன. உலகெங்கும் அவர் செல்ல வேண்டி இருந்ததால் ஆங்காங்குள்ள பெண்மணிகள் ஆடைகள் பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.’
அறக்கட்டளை
1966-ல் அவர் உலக அமைதிக் குழுவில் ஒரு உறுப்பினராக ஆனார்.
தொடர்ந்து பல முக்கிய பொறுப்புகள் அவருக்கு வந்தன; கூடவே ஏராளமான விருதுகளும் வந்து குவிந்தன.
2015-லிருந்து அறக்கட்டளைப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். பென்ஷன் பெறும் வயது வரம்பை உயர்த்த அவர் 2018-ல் பாடுபட்டார்.
அரசியல்சட்டத் திருத்தம்
2020-ல் ரஷிய ஜனாதிபதி தேர்வு சம்பந்தமாக ரஷிய அரசியல் சட்டத்தில் சில மாறுதல்களை அவர் கொண்டுவர பரிந்துரை செய்தார். இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இறுதியில் அது நிறைவேறியது. 85 வயதிலும் கூட ரஷிய சட்ட மாமன்றமான ‘டுமா’வில் (DUMA) அவர் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ரஷிய அதிபர் புடினின் பாராட்டு
வாலண்டினாவும் ரஷிய அதிபர் புடினும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். வாலண்டினா மீது பெரும் மதிப்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் 2017-ல் வாலண்டினாவின் பிறந்த நாள் அன்று, “ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, வாலண்டினா, “ நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி” என்று பதில் கூறினார்.
புடின், “நமது தந்தையர் நாட்டிற்கு நீங்கள் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. நீங்கள் எப்படி நம் நாட்டை நேசுக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று நீண்ட பாராட்டைத் தெரிவித்தார். அத்தோடு ரஷிய உயரிய விருதான ‘ஆர்டர் ஃபார் ஸர்வீசஸ் டு தி ஃபாதர்லேண்ட்’- ஐ அவருக்கு அளித்தார்.
வாலண்டினாவின் செய்தி
வாலண்டினா தனது விண்வெளி அனுபவத்தின் மூலமாக உலக மக்களுக்கு ஏராளமான செய்திகளைத் தந்துள்ளார்.
“விண்வெளிக்குச் சென்று ஒருவர் சிறிது நேரம் கழித்தால் கூடப் போதும் அவர் விண்வெளியை ஆயுள் முழுவதும் நேசிப்பார். வானம் பற்றிய எனது இளமைக் கால கனவை நான் சாதித்து விட்டேன்”
“விண்வெளிக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் பூமி எவ்வளவு சிறியது, சுலபமாக நொறுங்கக் கூடியது என்பதை அறிவீர்கள்”
“பெண்கள் ரஷியாவில் ரயில் தண்டவாளம் அமைப்பதில் பணி செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?” என்று கேட்டார் அவர்.
பெண்களுக்கு அவர் கூறும் முக்கிய செய்தி இது:
ஒரு பெண்ணானவள் என்றுமே பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். பெண்மையைப் போற்றும் எதுவும் அவளுக்கு அந்நியமாக இருக்கக் கூடாது. அதே சமயம் விஞ்ஞானத்திலோ, பண்பாட்டுத்துறையிலோ எதில் அவள் ஈடுபட்டிருந்தாலும் சரி எவ்வளவு கடுமையாக, தீவிரமாக அதில் அவள் உழைத்தாலும் சரி,, அது அவளது புராதனமான பழம்பெரும் ஆச்சரியகரமான உயரிய குறிக்கோளான “அன்பு பாராட்டு; அன்பைக் கொள் – என்ற அவளது தாய்மைக்காக ஏங்கும் ஆனந்தத்திற்கு முரணாக அமைந்து விடக் கூடாது.
பெண்மையைப் போற்றி உலகப் பெண்மணிகளுக்கு ‘வானளவு’ நம்பிக்கையைத் தந்த வாலண்டினா ‘விண்ணளந்த வீராங்கனை’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் தானே!
***