அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1 (Post No.13,316)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.316

Date uploaded in London – 8 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1

ச. நாகராஜன்

அமெரிக்காவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் தவியாய்த் தவித்த ஒருவர் பிரம்மாண்டமான கடைகளை நிறுவி நான்கு லட்சம் பேரை தன்னிடம் வேலைக்கு அமர்த்திய ஒரு அதிசய மனிதராக மாறினார், அவர் யார் தெரியுமா?

அவர் தான் வால்மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்!

பிறப்பும் இளமையும்

ஓக்லஹாமாவில், கிங்ஃபிஷரில் ஆண்டு 1918ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி தாமஸ் கிப்ஸன் வால்டன் என்பவருக்கும் நான்ஸி லீக்கும் சாமுவேல் மூர் வால்டன் மகனாகப் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்ட தந்தைக்கு வருமானம் சரியாக இல்லை. 1923-ல் ஒரு இன்ஶூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது தொழிலைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.  அப்போது அமெரிக்காவில் ‘க்ரேட் டெப்ரஷன்” என்று அனைவராலும் அறியப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

சாப்பிடவே வழியில்லை. குடும்பம் தவித்தது. அன்றாடச் செலவுக்கு பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார்.

கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு ‘டோர்- டெலிவரி’ செய்தார்.  அன்றாடம் பேப்பர் வாங்குபவர்களுக்கு நாளிதழ்களைக் கொண்டு சென்று கொடுத்தார். எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வழியாய் குடும்பச் செலவை சமாளித்தார்.

1929 முதல் 1939 முடிய இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் பாதித்தது!

ஊர் ஊராகச் சென்ற குடும்பம் இப்போது கொலம்பியாவில் செட்டில் ஆனது. கொலம்பியாவில் தனது படிப்பை முடித்தார் வால்டன். பள்ளியில் , “பல்துறை திறமை வாய்ந்த பையன்” என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த வால்டன் மிஸௌரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். படிப்புச் செலவிற்கு பல்வேறு சிறு சிறு வேலைகளைச் செய்யலானார். டேபிள்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பதிலாக உணவைப் பெற்றுக் கொண்டார்.

1940-ல் கல்லூரியில் தேறிய அவரை அனைவரும் நிரந்தர வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்தார்.

கடை ஆரம்பிக்கும் எண்ணம்

மாதம் 75 டாலர் சம்பளத்திற்கு ஒரு நிர்வாகப் பயிற்சி பெறும் பயிற்சியாளராக அவர் ஐயோவா நகரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலக மகாயுத்தம் வரவே 1942இல் இராணுவத்தில் சேர்ந்தார்.

அப்போது தான் அவருக்கு ஒரு கடை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!

1945இல் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது மாமனாரிடமிருந்து 20000 டாலரைப் பெற்றார். தனது சேமிப்பாக இருந்த 5000 டாலரையும் சேர்த்து ஒரு கடையை அர்கான்ஸாஸில் நியூபோர்ட் என்ற இடத்தில் வாங்கினார். 26-ம் வயதில் அவர் ஆரம்பித்த முதல் கடை இது!

தனது வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைத் தொடர்ந்து அவர் புகுத்திக் கொண்டே இருந்தார். கடைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.

அனைத்துப் பொருள்களும் அவர் கடையில் எப்போதும் இருக்கும்! விலை மிகவும் சரியாக இருக்கும்! வாடிக்கையாளர்களை வரவேற்று திருப்திப்படுத்தி அவர் அனுப்புவார்.

இதனால் மூன்றே ஆண்டுகளில் அவரது விற்பனை 80000 டாலரிலிருந்து 2,25,000 டாலராக ஆனது.

தனது கடையை அவருக்கு லீஸுக்குக் கொடுத்திருந்த பெரும் செல்வந்தரான ஹோம்ஸ் வால்டனின் வெற்றியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார் .லீஸை புதுப்பிக்க மறுத்தார். இது வால்டனுக்கு வணிகத்தில் முதல் பாடமாக அமைந்தது. தானே ஒரு சொந்தக் கடையை பெண்டன்வில்லி என்ற இடத்தில் ஆரம்பித்தார்.

ஏராளமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆகவே கடையின் மீது கவனம் செலுத்துவதே அவரது 24 மணி நேர வேலையாக ஆனது.

முதல் வால்மார்ட் கடை

1962, ஜூலை மாதம் இரண்டாம் நாள் அர்கான்ஸாஸில் ரோஜர்ஸ் என்னுமிடத்தில் முதல் வால்மார்ட் கடை அதே பெயருடன் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் எந்த வாடிக்கையாளரும் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்துப் பொருள்களையும் அவர் கடையில் அற்புதமான அடுக்கி வைக்கும் முறையைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.

ஒவ்வொரு சிறு சிறு நகரத்திலும் கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்.

கடைகளில் பொருள்கள் தீரத் தீர உடனடியாக அதை நிரப்ப நிறைய சேமிப்புக் கிடங்குகளையும் அவர் தொடங்கினார். விலையில் சிறப்புத் தள்ளுபடி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

1977-ல் 190 கடைகள் இருந்தன. அதுவே 1985-ல் 800-ஆக வளர்ந்தது.

இந்த வெற்றியைப் பார்த்த அனைவரும் இதை ‘வால்மார்ட்- எஃபெக்ட்”

(“வால்மார்ட் விளைவு”) என்று கூற ஆரம்பித்தனர்.

ஆறு லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையில் விற்பனையை அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட் செய்கிறது. ஒவ்வொரு விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியுறும் வகையில் அது மிக்க மரியாதையுடனும் மதிப்புடனும் செய்கிறது.

**

Leave a comment

1 Comment

  1. vijiraju's avatar

    yes… amazing .all products in one place..easy access

Leave a comment