அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2 (Post.13,319)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.319

Date uploaded in London – 9 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2

                                         ச. நாகராஜன்

கடை அமைப்பு

சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: (சான்பிரான்ஸிஸ்கோவில் அடிக்கடி வால்மார்ட் கடைக்குச் செல்வது இந்த கட்டுரை ஆசிரியரின் வழக்கம்)

மிக பிரம்மாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய ட்ராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.

அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.

ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு ‘க்விங் க்விங்’ எச்சரிக்கை ஒலியை அது தரும்.

வால்மார்ட் கடைக்குப் போவதில் அனவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக “பிடிக்க” வேண்டும்.

ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

குடும்பம்

1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்ஸன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது.  கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிடி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லறை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.

அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.

வால்டன் தம்பதியினருக்கு  சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.

மறைவு

ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் முப்பதாவது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.

மருத்துவ மனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.

அவரது மறைவு உடனடியாக சாடலைட்  மூலமாக அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சம்.  மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960.  அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34). அவரது 1735 கடைகள், 212 சாம் கிளப்புகள் மற்றும் 13 சூப்பர் சென்டரில் வேலை பார்த்தோர் மட்டுமின்றி உலகமே அவரது மறைவிற்காக வருந்தியது.

அவரது அஸ்தி பெண்டோன்வில்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடைமைகள் அவரது மனைவிக்கும் மகன்கள் மற்றும் மகளுக்கும் உரிமை ஆயின.

விருதுகளும் பெற்ற சிறப்புகளும்

1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷிடமிருந்து ‘பிரஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.

இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.

வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.

1970-ம் ஆண்டு பங்குச் சந்தையில் தனது பங்குகளை வால்மார்ட் அறிமுகப்படுதியது. அப்போது பங்குகளை பத்தாயிரம் டாலருக்கு வாங்கியோர் இன்று இரண்டாயிரம் லட்சம் டாலராக அது ஆகி இருப்பதைக் கண்டு மலைக்கின்றனர்; சந்தோஷப்படுகின்றனர். அது மட்டுமல்ல டிவிடெண்டாக அவர்களுக்கு நிறைய கிடைத்திருக்கிறது. (இப்போது வருடத்திற்கு 466000 டாலர்கள் என்ற அளவில் உள்ளது) 

வால்டனின் கொள்கையும் விதியும்

அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.

அவற்றில் முக்கியமானவை சில:

“உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்.”

“நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்.”

“உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.”

“சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்”

உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:

சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது. 

கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!

***

Leave a comment

Leave a comment