
Post No. 13.330
Date uploaded in London – —12 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (23)
ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது!
ச.நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் 74-வது ஸர்க்கமாக அமைவது ‘கைகேயி நிந்தை’.
இந்த ஸர்க்கத்தில் பரதன் தன் தாயான கைகேயியை நிந்திக்கிறான்.
மகத்தான பாப காரியத்தைச் செய்து விட்டாயே என்று கடிந்து கொள்கிறான்.
ப்ரூணஹத்யாமஸி ப்ராப்தா குலஸ்யாஸ்ய விநாஷநாத் |
கைகேயி நரகம் கச்ச மா ச பர்து: சலோகதாம்!!
கைகேயி – கைகேயி
அஸ்ய குலஸ்ய – இந்த குலத்திற்கு
விநாஷநாத் – கேடு விளைவித்தால்
ப்ரூணஹத்யாம் – கர்ப்பச் சிதைவு பாவத்தை
ப்ராப்தா அஸி – (நீ) அடைந்தவளாகின்றனை
நரகம் கச்ச – நரகத்தை அடை
பர்து: – கணவருடன்
சலோகதாம் – இருத்தலை
மா ச – அடைய மாட்டாய்
– அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 4-ம் ஸ்லோகம்
“கொடியவளே உன்னால் மன்னர் தசரதன் இறந்து விட்டார். தர்மவானான ராமர் காட்டுக்குச் சென்று விட்டார். நீ ராஜ்யத்தை விட்டு ஓடி விடு” என்று கூறிய பரதன் காமதேனுவின் கதையையும் கைகேயிக்கு உரைக்கிறான்.
காமதேனு தனது இரு காளைக் கன்றுகளை பூமியில் பாரம் சுமப்பவையாகக் கண்டு வருந்தியது. களைப்படைந்த அந்த காளைகளைக் கண்டு கண்ணீர் சொரிந்தது. அந்த வாசனையுடைய கண்ணீர்த் துளிகள் கீழே சென்று கொண்டிருந்த தேவேந்திரன் உச்சியில் விழுந்தன. இந்திரன் உடனே காமதேனுவிடம் அது வருந்துவதற்கான காரணத்தைக் கேட்க காமதேனு தன் இரு குழந்தைகளைப் பற்றி வருந்துவதாகக் கூறியது. இதைக் கண்ட இந்திரன் புத்திரனைக் காட்டிலும் மேலானது ஒன்று இல்லை என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.
.jpg)
காமதேனுவின் கதையைக் கூறிய பரதன் உடனே கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறுகிறான்:
அப்போது அருகே உள்ள கோசலையைச் சுட்டிக் காட்டிச் சொல்வது இது:-
ஏகபுத்ரா ச சாத்வீ ச விவத்ஸேயம் த்வயா க்ருதா |
தஸ்மாத் த்வம் சததம் துக்கே ப்ரேத்ய சேஹ ச லப்யஸே ||
– அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 29-ம் ஸ்லோகம்
ஏகபுத்ரா ச – ஒரே புதலைவனைப் பெற்றவளும்
சாத்வீ ச – புண்ணியச் செயல் உடையவளுமான
இயம் த்வயா – இவள் (கோசலை தேவியாகிய இவள்) உன்னால்
விவத்ஸா – புத்திரனைப் பிரிந்தவளாய்
க்ருதா – செய்யப்பட்டாள்
தஸ்மாத் – அந்தக் காரணத்தினால்
த்வே இஹ ச – நீ இங்கும்
ப்ரேத்ய ச – இறந்தும்
சததம் துக்கம் – சதா துக்கத்தை
லப்யஸே – அனுபவிக்கப் போகிறாய்.
இவ்வாறு பரதன் கூறுகின்ற வார்த்தைகளில் சாபம் தருகின்ற பாங்கு இல்லை. என்றாலும் சாபத்தைப் போன்ற வார்த்தைகளே வந்துள்ளதைக் காணலாம். பரதனுக்குச் சாபம் கொடுக்கும் சக்தி உண்டா என்பதும் எப்படி வந்தது என்பதும் இங்கு தரப்படவில்லை.
அயோத்யா காண்டத்தில் உள்ள ஐந்து சாபங்களில் இது ஐந்தாவது சாபமாக அமைகிறது.
இத்துடன் அயோத்யா காண்டத்தில் உள்ள சாபங்களின் விவரம் முடிகிறது.
**